குழந்தைகளின் வளர்ச்சிக்கும், மூளைத் திறன் மேம்பாட்டிற்கும் சரியான சத்துகள் அவசியம் என்று ORTHOPEDIC & SPORTS SURGEON, டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.
இன்றைய காலத்தில் பல பெற்றோர் குழந்தைகளுக்கு Junk Foods எளிதாகக் கொடுத்து விடுகிறார்கள். அதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதனைத் தவிர்க்க, குழந்தைகளின் தினசரி உணவுத் தட்டில் நான்கு முக்கிய அம்சங்களைச் சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சத்துக்கள்
புரதச் சத்து – வளர்ச்சிக்கான அடிப்படை
“குழந்தைகள் தினமும் உடல் எடைக்கேற்ப 0.8 முதல் 1.2 கிராம் புரதச் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் ஈடுபடும் குழந்தைகளுக்கு இது 1.5 முதல் 1.8 கிராம் வரை அதிகரிக்க வேண்டும். முட்டை, பால், பருப்பு, மீன், கோழி போன்றவை சிறந்த புரத மூலங்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
நல்ல கொழுப்பு – மூளை வளர்ச்சிக்கு அவசியம்
பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு 2 முதல் 3 மடங்கு அதிகமான நல்ல கொழுப்புகள் தேவைப்படுவதாக நிபுணர் தெரிவித்துள்ளார். “வேர்க்கடலை, விதைகள், முட்டை, இறைச்சி, பன்னீர், தயிர், ஆலிவ் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். ஆனால் வறுத்த ஸ்நாக்ஸ் மற்றும் ஜங்க் உணவு தவிர்க்கப்பட வேண்டும்” என எச்சரித்தார்.
நார்ச்சத்து – செரிமானமும்.. எதிர்ப்பு சக்தியும்..
சிறு வயதில் இருந்தே காய்கறிகளை பழக்கப்படுத்தினால், மெதுவாக அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது மூலம் செரிமானம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முழுதானியங்கள் – இயற்கை உணவின் சக்தி
“குழந்தைகளின் தட்டில் முழுதானியங்கள் மற்றும் இயற்கை உணவுகள் அதிகம் இடம் பெற வேண்டும். ரெஃபைன் செய்யப்பட்ட, பொரித்த உணவுகளை குறைப்பது அவசியம்” என டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறினார்.
இறுதியாக
குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் முழுதானிய உணவுகள் மிக முக்கியம் என்று நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.