குடல் ஆரோக்கியம் (Gut Health) என்பது முழு உடல்நலத்திற்கும் அடிப்படை என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். காலை உணவு எப்படியிருக்கிறதோ, நாள் முழுக்க உடல் ஆரோக்கியமும் அதைப்போலவே இருக்கும். காலை உணவு ‘ஒரு நாள் முழுக்க எரிசக்தி தரும் முதல் உணவு’ என்பதால், அதில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
ஆனால் பலர் வழக்கமாகச் சாப்பிடும் சில பிரபலமான காலை உணவுகள், உண்மையில் குடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று அமெரிக்காவில் பணியாற்றும் பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் மணிக்கம் எச்சரித்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் 5 Worst Breakfast Items-ஐ குறிப்பிட்டு, அவை ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார். இது குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
குடல் ஆரோக்கியத்திற்கு பாதகமான 5 காலை உணவுகள் (worst breakfast to avoid for gut health)
பூரி – உருளைக்கிழங்கு கறி
இந்திய குடும்பங்களில் அதிகம் விரும்பப்படும் காலை உணவு பூரி. ஆனால் இது எண்ணெயில் பொரிக்கப்படுவதால் அதிகமான கார்போஹைட்ரேட்டுகள் உடலில் சேர்கின்றன. இதனால் சாப்பிட்டவுடன் சோர்வு ஏற்படுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் திடீரென உயர்வதாக மருத்துவர் எச்சரிக்கிறார்.
பிரெட் - பட்டர் - ஜாம்
விரைவாக சாப்பிடக்கூடிய காலை உணவாக பிரெட் - பட்டர் - ஜாம் பலர் விரும்புகின்றனர். ஆனால் பிரெட்டில் நார்ச்சத்து இல்லாததால், சர்க்கரை மற்றும் கொழுப்பு மட்டுமே உடலில் சேர்கிறது. இதனால் வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்காது. ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் பசி ஏற்படும்.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்
சுலபமாக செய்யக்கூடியதால் நூடுல்ஸ் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பும் காலை உணவாக உள்ளது. ஆனால் இது முழுவதும் ரீஃபைன் கார்போஹைட்ரேட்டுகள், அதிக உப்பு மற்றும் ரசாயன பொருட்களால் நிரம்பியுள்ளது. புரதமும் நார்ச்சத்தும் இல்லாததால், குடலுக்கு சுமை ஏற்படுத்தி, சீரான ஜீரணத்திற்கு இடையூறு தரும்.
உப்புமா (காய்கறி இல்லாமல்)
உப்புமா என்பது தமிழர்களின் பாரம்பரிய காலை உணவாக கருதப்படுகிறது. ஆனால் காய்கறி சேர்க்காமல் செய்யப்படும் ரவை உப்புமா வெறும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பாகவே மாறுகிறது. இது கலோரி மட்டுமே தருகிறது. சத்தான உணவாக கருதப்பட வேண்டுமானால், அதில் காய்கறி அல்லது பருப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.
சீரியல் – பால் (கார்ன் ப்ளேக்ஸ் போன்றவை)
‘ஆரோக்கிய உணவு’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் சீரியல்கள், உண்மையில் அதிக சர்க்கரை மற்றும் ரீஃபைன் கார்போஹைட்ரேட்டுகளை கொண்டிருக்கின்றன. பாலும் சேர்த்தாலும், குடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. ஆகவே காலை உணவாக இதைத் தேர்வு செய்வது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக..
“காலை உணவு என்றால் நிறைவான சத்துகள் இருக்க வேண்டும். புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு ஆகியவை உள்ள உணவுகளை தேர்வு செய்தால் குடல் ஆரோக்கியமாகவும், உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கும்” என்று டாக்டர் பால் மணிக்கம் வலியுறுத்துகிறார்.