$
Pani Puri: ஆரோக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவு முறை என்பது மிக முக்கியம். ஆனால் இந்த பிஸியான வாழ்க்கை முறையில் முற்றிலும் உணவு முறை மாறிவிட்டது.
மன்னர் காலத்தில் ஆட்சி முறை எப்படி இருந்தது என இப்போது பேசுகிறோமே அதேபோல் 90 காலக்கட்டத்தில் உணவு முறை எப்படி இருந்தது என அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடியும் என்கிற அளவு இப்போதே உணவு முறை மாறிவிட்டது.
ருசியாக இருக்கிறதே என ஆரோக்கியம் குறித்து துளியும் கவலை இல்லாமல் உணவை உண்ணுகிறோம். ஆரோக்கியம் என்ற சொல்லுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை ருசியை நோக்கியே அனைவரும் ஓடுகிறார்கள். அவர்கள் சாப்பிடுவதோடு தங்களது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கொடுக்கிறார்கள். இதனால் வரும் பாதிப்பை அறிவதில்லை.
ஆரோக்கியமற்ற உணவு முறையால் புதிய புதிய நோய்களும், மிக ஆபத்தான நோய்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பரோட்டா சாப்பிட்ட நபர் மரணம், ஷவர்மா சாப்பிட்ட சிறுவன் மரணம் என உணவு சாப்பிட்டே இறந்த பலர் குறித்து கேள்விபட்டு வருகிறோம். சமீபத்தில் கூட பஞ்சு மிட்டாயில் இரசாயன வேதிப் பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டது. இவை அனைத்தையும் அறிந்திருந்தாலும் இந்த உணவுகளை விடுவதாக இல்லை.
பானிபூரி சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்
தற்போது இந்த பட்டியலில் பானிபூரியும் இணைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியில் உள்ள கடை மற்றும் உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பானி பூரி மற்றும் அதனுடன் சேர்க்கப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.
கர்நாடகாவில் பானிபூரி கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வு
இந்த தகவல் பானிபூரி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் உள்ள சுமார் 250 கடைகளில் அந்த மாநில அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் பானிபூரியில் சேர்க்கப்படும் சுமார் 18 மாதிரிகள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல எனவும், 41 மாதிரிகளில் புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
தமிழ்நாட்டில் பானிபூரி கடைகளில் உணவுப்பாதுகாப்புத் துறை ஆய்வு
இந்த தகவல் தமிழகத்திலும் பரவி வரும் இந்த நிலையில், தமிழகத்தில் விற்கப்படும் பானிபூரியில் ரசாயனங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு தமிழக அரசு தரப்பில் அறவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பானிபூரி கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் விற்கப்படும் பானிபூரிகளில் இரசாயனங்கள் உள்ளதா என இப்போது வரை தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தரப்பில் இருந்த எந்த தகவலும் வரவில்லை.
இருப்பினும் இதுதொடர்பான ஆய்வை துரிதப்படுத்தி தமிழகம் முழுவதும் நடத்தி அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாகினும் மக்கள் சுகாதாரத்தை பின்பற்றுவது தங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை நல்லது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.