சமீபத்தில் ஸ்மோக் பிஸ்கட் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியது. மேலும் அதில் பயன்படுத்தப்படும் திரவ நைட்ரோஜனின் தன்மை குறித்தும் அனைவரும் அறியத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெருமளவு வலுத்து வந்தது.
இதையடுத்து, மதுரை முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திரவ நைட்ரோஜன் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை
இதைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும் ஸ்மோக் பிஸ்கட் (Smoke biscuit) கடையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, அந்த கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அதேபோல் கடை சுற்றிலும் விளம்பரமாக ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அதே இடத்திலேயே அகற்றச் செய்து கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் இந்த ஆய்வு மற்றும் நடவடிக்கைகள் மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளுக்கு தடை
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் திரவ நைட்ரோஜனுக்கு முற்றிலும் கட்டுப்பாடு விதிப்பதாக மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திரவ நைட்ரோஜனை திரவமாகவும், வாயுவாகவும் உணவு பதப்படுத்த மற்றும் பேக்கிங் ஆகிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும்படியும் என அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் இதற்கும் உணவுப் பாதுகாப்புத்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த உத்தரவை மீறி திரவ நைட்ரோஜனை பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திரவ நைட்ரோஜனுக்கு ஏன் கட்டுப்பாடு?
திரவ நைட்ரோஜனை நேரடியாக ஸ்மாக் பிஸ்கட், ஸ்மோக் ஐஸ்கிரீம், ஸ்மோக் பான் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது அப்படியே வயிற்றுக்குள் போனால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
மைனஸ் 195.8 டிகிரி உள்ள இந்த திரவ நைட்ரோஜனை உங்கள் கையில் சிறிது நேரம் வைத்தால் அந்த இடமே உறைந்து கருகிவிடும். இதுகுறித்த ஒரு யூடியூப் வீடியோவில், திரவ நைட்ரோஜனை ஒரு இட்லியில் ஊற்றி அதை சுத்தியலால் உடைத்தால், இட்லி சுக்குநூறாக உடைந்துவிடும். அந்தளவிற்கு ஒரு பொருளை வேகமாக உறைய வைக்கக் கூடிய தன்மை கொண்டது.
ஒருசில இடங்களில் உணவு கெடாமல் பாதுகாப்பாக இருக்க இந்த திரவ நைட்ரோஜன் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இப்போது இது நேரடி உணவாகவே மாறி இருக்கிறது. திரவ நைட்ரோஜன் நேரடியாக வயிற்றுக்குள் செல்லும்பட்சத்தில் இது குடலில் ஓட்டையே போடும் நிலையை ஏற்படுத்தும். இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
Image Source: FreePik