What daily habits weaken your immune system: பருவகால மாற்றங்களின் போது, உடலில் நோயெதிர்ப்புச்சக்தி பலவீனமடைய அதிக வாய்ப்புள்ளது. ஆனால், இது மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. இது தவிர, தினமும் நாம் செய்யக்கூடிய சில பழக்கவழக்கங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அமைதியாக பலவீனப்படுத்தி, தொற்றுநோய்களுக்கு ஆளாக்குகின்றன. மேலும் இது நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்துவதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதை மெதுவாக்குவதாகவும் அமைகின்றன. பொதுவாக, நோயெதிர்ப்புச்சக்தி செல்கள், உறுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பொறுத்தது ஆகும்.
எனவே மன அழுத்தம் அதிகரிப்பு, சமநிலை சீர்குலைப்பு அல்லது முக்கிய ஊட்டச்சத்துக்களைக் குறைக்கும் வாழ்க்கை முறை காரணிகள் போன்றவை நோயெதிர்ப்பு அமைப்பை எதிர்மறையாக பாதிக்கலாம். இதனால் நாம் செய்யக்கூடிய சிறியதாகத் தோன்றும் பழக்கங்கள் கூட, மீண்டும் மீண்டும் செய்யும் போது நாளடைவில் உடலின் இயற்கையான பாதுகாப்புகளைப் படிப்படியாகக் குறைக்கிறது. எனவே நோயெதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்க இந்த பழக்கங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. இதில், நோயெதிர்ப்பு சக்தியை மோசமாக்கக் கூடிய நாம் தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Gut In Summer: கோடையில் செரிமான பிரச்னை வராமல் இருக்க.. இந்த உணவுகளை சாப்பிடவும்..
நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக்கும் பழக்கவழக்கங்கள்
உணவைத் தவிர்ப்பது அல்லது மோசமான ஊட்டச்சத்து உட்கொள்ளல்
ஊட்டச்சத்து குறைவான உணவை உட்கொள்வது அல்லது தொடர்ந்து உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான எரிபொருளை இழக்கச் செய்கிறது. குறிப்பாக, வைட்டமின்கள் சி, டி, இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு பாதுகாப்பில் நேரடி பங்கு வகிக்கின்றன. இந்த ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் இது உடலின் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
அதிக சர்க்கரை உட்கொள்வது
அன்றாட உணவு முறையில் அதிகளவு சர்க்கரையை உட்கொள்வது, குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. காலப்போக்கில் அதிக சர்க்கரை உட்கொள்வதன் காரணமாக உடல் பருமன், வீக்கம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை ஏற்படலாம். இவை அனைத்துமே நோயெதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கிறது.
உட்கார்ந்த வாழ்க்கை முறை
நாள்பட்ட உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் போதிய உடல் செயல்பாடு இல்லாதது உடலில் இரத்த ஓட்டத்தை மந்தமாக்குகிறது. அதாவது இது உடலில் நோயெதிர்ப்பு செல்கள் திறமையாக நகராததைக் குறிக்கிறது. அன்றாட வாழ்வில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நிணநீர் ஓட்டத்தை ஊக்குவிக்கவும், நோயெதிர்ப்பு செல்களின் செயல்திறனை மேம்படுத்தவும் முடியும்.
நீரிழப்பு
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடலில் நிணநீர் சுழற்சியை பாதித்து, உடல் நச்சுக்களை வெளியேற்றுவதை கடினமாக்குகிறது. இந்த நீரிழப்பு காரணமாக செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் பாதிக்கப்படலாம். நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையாகிறது. இது பலவீனமான நோயெதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கிறது.
சூரிய ஒளி வெளிப்பாடு இல்லாமை
உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய முக்கிய ஊட்டச்சத்தான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து கிடைக்கப் பெறும். எனவே நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே செலவிடுவது அல்லது குறைந்தது 10–15 நிமிடங்கள் இயற்கையான சூரிய ஒளியில் படாமல் வைத்திருப்பது வைட்டமின் டி அளவைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி குறைய வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: அதிகபட்ச குடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெற புரோபயாடிக்குகளை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்?
மோசமான குடல் ஆரோக்கியம்
நோயெதிர்ப்பு மண்டலத்தின் பெரும்பகுதியானது குடலில் அமைந்துள்ளது. எனவே சமநிலையற்ற குடல் நுண்ணுயிர் அல்லது மோசமான செரிமானம் போன்றவை நோயெதிர்ப்பு அமைப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது குடல் தடையை பலவீனப்படுத்துவதுடன், நச்சுகள் இரத்த ஓட்டத்தில் கசிய அனுமதிக்கிறது. இதனால் நாள்பட்ட அழற்சி தூண்டப்படுகிறது.
போதிய தூக்கம் இல்லாமல் இருப்பது
தூக்கமின்மையால் நோயெதிர்ப்பு சமிக்ஞைக்கு இன்றியமையாத புரதங்களான சைட்டோகைன்களின் உற்பத்தி சீர்குலைக்கப்படுகிரது. பொதுவாக தூக்கம் என்பது உடல் தன்னைத்தானே சரிசெய்து நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கொடுக்கக்கூடிய நேரமாகும். இந்நிலையில் நாள்பட்ட தூக்கமின்மையால் வீக்கம் அதிகரிப்பு மற்றும் தொற்று-எதிர்ப்பு செல்கள் குறைவது போன்றவை ஏற்படலாம். இதனால் சளி, காய்ச்சல் மற்றும் நாள்பட்ட நோய்கள் போன்றவற்றால் கூட எளிதில் பாதிக்கப்படலாம்.
அதிகப்படியான திரை நேரம்
வேலை அல்லது பொழுதுபோக்கிற்காக நாம் அதிக நேரம் திரைகளில் செலவிடுவது, நீல ஒளி வெளிப்பாடு மற்றும் டிஜிட்டல் சோர்வு போன்றவை தூக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுக்குகிறது. குறிப்பாக, நாம் தொடர்ந்து எதிர்மறையான செய்திகளைப் படிப்பது அல்லது சமூக ஊடகங்களில் ஒப்பிட்டுப் பார்ப்பது போன்றவை மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.
நாம் அன்றாடம் செய்யும் இந்த பழக்க வழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாகவும், மீள்தன்மையுடனும் வைத்திருக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: சம்மரில் தயிருடன் மக்கானாவை சேர்த்து சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Image Source: Freepik