ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிலர் கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற பல முயற்சிகளை கையில் எடுக்கப்படுகின்றனர். ஆனால் இது தொடங்கிய இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்லும் பாதை என்பது உங்களுக்கு தெரியுமா.? ஆம், ஆரம்பத்தில் எடை குறைவது போல் தோன்றிலானும், மீண்டும் இழந்த எடையை மீண்டும் அடைவீர்கள்.
இதன் உண்மையான காரணத்தை குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம் தனது சமூக ஊடகப் பதிவில் எளிய முறையில் விளக்கியுள்ளார். அவர் கூறிய தகவல்கள், எடை குறைக்க போராடும் பலருக்கும் உதவியாக இருக்கும்.
மீண்டும் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்..
இழந்த எடை மீண்டும் அதிகரிப்பதற்கு, உடலில் உள்ள கொழுப்பு அணுக்கள் (Fat Cells) தான் முக்கிய காரணம் என்று விளக்குகிறார் டாக்டர் பால் மாணிக்கம். அதாவது, ஒருவர் உணவை கட்டுப்படுத்தும்போது, உடலில் உள்ள கொழுப்பு அணுக்கள் சுருங்கி விடுமோ தவிர, முழுமையாக மறையாது. ஆகையால் நீங்கள் மீண்டும் அதிகம் உணவுகள் எடுத்துக்கொள்ளும்போது, அவை விரியத் தொடங்குகிறது.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், குறைவாக உணவு எடுத்துக்கொள்ளும் போது, கொழுப்பு அணுக்கள், காற்று குறைந்த பலூன் போல் சுருங்கி விடும். ஆனால், மீண்டும் அதிகமாக உணவு எடுக்கும்போது, அவை காற்று நிரம்பிய பலூன் போல் உப்பி நிற்கத் தொடங்கும். இதுவே எடை மீண்டும் அதிகரிக்கக் காரணமாகிறது.
வயதும்.. கொழுப்பு அணுக்களும்..
அறிவியல் ஆய்வுகளின்படி, மனித உடலில் புதிய கொழுப்பு அணுக்கள் டீனேஜ் வயதுக்குப் பிறகு உருவாகாது. ஒருவர் இளமைக் காலத்திலேயே அதிக எடையுடன் இருந்தால், அவர்களிடம் ஏற்கனவே அதிகமான கொழுப்பு அணுக்கள் இருக்கும். இதுவே பெரியவர்களாகிய பிறகு எடை குறைப்பதை கடினமாக்கும் என்று டாக்டர் பால் கூறினார்.
ஆபத்துக்கு இழுத்துச் செல்லும் Crash Diet..
விரைவில் எடை இழக்க வேண்டும் என்று, Crash Diet இருப்பது, உணவுக்காக கொழுப்பு அணுக்கள் ஏங்கச் செய்யும். இதனால் ஒருவரால் நீண்ட காலத்திற்கு, டயட் திட்டத்தை பின்பற்ற முடியாமல் போகலாம். மேலும் மீண்டும் அதிக உணவுகள் உண்ணும் பழக்கத்திற்கு செல்லலாம்.
குறுகிய காலத்தில் கடுமையாக உணவை கட்டுப்படுத்துவது நீடித்த எடை குறைப்பை தராது என்பதைக் குறிப்பிடுகிறார் நிபுணர்.
நிலையான எடை இழப்பு சாத்தியமா?
எடை குறைப்பது மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது. மாறாக, தினசரி ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்வது, உடற்பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவது, போதுமான உறக்கத்தைப் பெறுவது, மனஅழுத்தத்தை குறைப்பது போன்ற பழக்கங்களை உருவாக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். மேலும் இந்த பழக்கங்கள் உருவான பிறகு தானாக எடை குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
View this post on Instagram
டாக்டர் பால் மாணிக்கம் பரிந்துரைக்கும் நடைமுறைகள்
* உணவுகளை முழுமையாகத் தவிர்க்காமல், அளவோடு உட்கொள்ள வேண்டும்.
* நடைபயிற்சி, யோகா, சைக்கிளிங் போன்ற எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
* 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.
* மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
* புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
முக்கிய அறிவுரை
எடை குறைப்பது தற்காலிக இலக்காக இல்லாமல், வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆக இருக்க வேண்டும் என்று டாக்டர் பால் மாணிக்கம் வலியுறுத்துகிறார்.
இறுதியாக..
டயட் மட்டும் பின்பற்றி எடை குறைப்பது நீடித்த பலனைத் தராது. நமது கொழுப்பு செல்ல்களின் இயல்பைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், உடற்பயிற்சி, போதுமான உறக்கம் மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவற்றை வாழ்க்கையில் கொண்டு வருவது தான் நீண்ட கால எடை குறைப்புக்கான ஒரே வழி.