குளிர் காலத்தில் ஜிம்மிற்கு போக சோம்பலாக இருக்கிறதா?… அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துங்கள்…
சுறுசுறுப்பானவர்களுக்கு கூட குளிர் காலத்தில் காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்ய மிகவும் சோம்பலாக இருக்கும். இதனால் வழக்கமான ஃபிட்னஸ் கட்டுப்பாடுகளை மீறுவதால், உடல் எடை மிகவும் வேகமாக கூடக்கூடும். மேலும் குளிர் காலத்தில் அதிக பசி காரணமாக அதிகப்படியான உணவை உட்கொள்வதால் உடல் எடையை குறைப்பது மற்றொரு சவாலாக மாறிவிடுகிறது.
குறிப்பாக பெண்கள் குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க டயட் உணவுகளை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் சூப்பரான டயட் உணவுகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
1.பீட்ரூட்:
யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (USDA) அறிக்கையின் படி, 100 கிராம் பீட்ரூட்டில் 43 கலோரிகள், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 10 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. குளிர்காலத்தில் உங்கள் உணவில் பீட்ரூட்டை அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் பெற முடியும். மேலும் பீட்ரூட்டில் உள்ள அதிக அளவிலான நைட்ரேட்டுகள் உடலுக்குத் தேவையான நீண்ட ஆற்றலைத் தருவதால், பசியையும் கட்டுப்படுத்துகிறது.
குறிப்பாக பீட்ருட் பெண்களுக்கு பல வகையிலும் நன்மை பயக்குகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகையை தடுக்கிறது. பீட்ரூட்டில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் தாதுக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்,வலுவாக்கவும் உதவுகிறது.
2.கேரட்:
குளிர்காலத்தில் கேரட் அதிகமாக கிடைக்கூடிய பருவ கால காய்கறியாகும். கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்தும், குறைவான கலோரிகளும் உள்ளதால் வெயிட் லாஸ் செய்பவர்களுக்குச் சிறந்தது.
கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்-ஏ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, கல்லீரல் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. கேரட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் தோல் மற்றும் நுரையீரலைப் பாதுகாக்கின்றன.
3. கீரைகள்:
குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், கட்டாயம் உங்களுடைய உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும். எனவே குளிர்காலத்தில் நார்ச்சத்து நிறைந்த கீரைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. கீரையில் குறைந்த அளவிலான கலோரிகள் மட்டுமே இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
4.முள்ளங்கி:

முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஃபைபர் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் தொப்பை கொழுப்பைக் கரைக்கிறது. முள்ளங்கி வயிற்றை சுத்தப்படுத்தக்கூடியது என்பதால், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
5.கொய்யா:

கொய்யாவில் நார்ச்சத்து அதிகம். மனிதனுக்கான தினசரி நார்ச்சத்து தேவையில் 12 சதவீதத்தை கொய்யா வழங்குவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இது செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் உடல் எடை கூடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. கொய்யாவில் குறைவான கலோரிகள் மட்டுமே உள்ளதால் உடல் எடையை குறைப்பதற்காக சிறந்ததாகும்.