$
இரவு முழுவதும் நாம் ஓய்வெடுத்தாலும், நமது உள்ளுறுப்புகள் தங்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால் தான் காலை எழுந்ததும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்க காலை உணவு மிக மிக முக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் வேலை, பணிச்சூழல் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் காலை உணவை தவறவிட்டுவிடுகிறோம். இதனால் வளர்ச்சிதை மாற்ற விகிதம் குறைவதோடு, உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்காமல் போகிறது.

மேலும் காலை உணவை சாப்பிடாமல் விட்டால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம் என்ற பொய்யான நம்பிக்கையும் நிலவுகிறது.ஆனால் உண்மையில், காலை உணவை தவறவிடுவதால், உடலுக்கு கலோரிகளை எரிக்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் உணவை கொழுப்பாக மாற்றுவதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கக்கூடும் என்பதை மறக்காதீர்கள்.
மேலும் காலையில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள ஏதாவது ஒரு உணவை சாப்பிடுவது நல்லது. இட்லி முதல் மசாலா தோசை வரை பல வகையான காலை உணவில் கார்போஹைட்ரேட் அதிகம். எளிதில் சமைக்கக்கூடிய சில உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. அதனால்தான் உங்களுக்காக குறைந்த கார்ப் காலை உணவுகள் சிலவற்றை கொண்டு வந்துள்ளோம்…
1. பாலக் ஆம்லெட்:

ஆலிவ் எண்ணெய், பாலக்கீரை மற்றும் வெங்காயம் கலந்த ஆம்லெட் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்தது. இது தயாரிப்பது மிகவும் எளிமையானது மற்றும் கார்போஹைட்ரேட் குறைவானது.
2.கீட்டோ தெப்லா:

தெப்லா என்பது பரோட்டா போன்ற குஜராத்தி உணவாகும். இதில் வழக்கமாக பயன்படுத்தப்படும் கோதுமை மாவிற்கு பதிலாக தினை மாவு, சிறிது தயிர், வெந்தய இலைகள் மற்றும் தண்ணீர் சேர்த்து பரோட்டோ செய்யலாம். இதில் குறைவான கார்போஹைட்ரேட் இருந்தாலும், வயிற்றை நிரப்புவதால் நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமலும், அதிக ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது.
3. கீட்டோ உப்புமா:

தென்னிந்தியர்களின் காலை உணவுகளில் உப்புமா மிகவும் பிரபலமானது. கீட்டோ உப்புமா செய்ய ரவைக்கு பதிலாக நீங்கள் காலிஃபிளவரைப் பயன்படுத்தலாம். அத்துடன் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை கலந்து உங்களுடைய காலை உணவை கலர்ஃபுல்லாகவும், ஹெல்தியாகவும் மாற்றலாம்.
4.போஹா:

போஹா என அழைக்கப்படும் அவல் காலையில் விரைவில் சமைக்கக்கூடிய எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவாகும். இதில் பச்சரிசி அவலுக்குப் பதிலாக காலிஃபிளவர் அல்லது தினை, குதிரைவாலி, சாமை போன்ற தினைவகைகளில் கிடைக்கூடிய அவலைப் பயன்படுத்தலாம். அத்துடன் புரத்தத்திற்கு வேர்க்கடலையும், வைட்டமின் சி சத்தை வாரி வழங்கும் எலுமிச்சையையும் கலந்தால், குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட நிறைவான ப்ரேக் ஃபர்ஸ்ட் ரெடி.
5.ஆப்பிள் சப்ஜா ஸ்மூத்தி:

ஒரு ஆப்பிள், ஒரு கப் தயிர், ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் பினட் பட்டர் ஆகியவற்றை ஸ்மூத்தியாக கலந்து காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் வளர்சிதை மாற்ற விகிதம் மேம்படுதோடு, உடலுக்குத் தேவையான ஆற்றல் விரைவாக கிடைக்கும்.
Image Source: Freepik