How to make tender coconut payasam: இனிப்பு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இனிப்பின் மீது அதிக நாட்டம் கொண்டு தான் இருப்பார்கள். அதில் ஒன்றாகவே பாயாசமும் அடங்கும். இது பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். பாயாசத்தில் பால் பாயாசம், பச்சைப்பயறு பாயாசம் என பல்வேறு வகையான சுவையான ரெசிபிகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், பாயாசம் செய்வது மிகவும் எளிதானதாகும். மேலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குக் கூட சுவையான பாயாசத்தைச் செய்து வழங்குவர்.
அந்த வகையில் வித்தியாசமான ரெசிபியாக இளநீரைக் கொண்டு சுவையான இளநீர் பாயாசத்தைத் தயார் செய்யலாம். இது மற்ற இனிப்பு உணவுகளை விட மிகவும் சுவையானதாக அமையும். ஏனெனில், இது இயற்கையாகவே இனிப்பு சுவை மிக்கதாக அமைகிறது. இந்த இளநீர் பாயாசத்தை வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம். இதில் வீட்டில் எளிதான முறையில் இளநீர் பாயாசம் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tender Coconut Benefits: இளநீர் செய்யும் அற்புதங்கள் இங்கே.!
இளநீர் பாயாசம் தயார் செய்வது எப்படி?
தேவையானவை
- இளநீர் - 2
- பால் - 1/2 லிட்டர்
- சர்க்கரை - 1/4 கிலோ
- சாரை பருப்பு - 4 டீஸ்பூன்
- மில்க் மெய்ட் - 1 கப்
- பச்சை கற்பூரம்
- பாதாம் - 8 முதல் 10
- முந்திரி - 8 முதல் 10
- பிஸ்தா - 8 முதல் 10
- நெய் - தேவையான அளவு
- ஏலக்காய் தூள் - சிறிதளவு
இந்த பதிவும் உதவலாம்: Tender Coconut Water For Weight Loss: உடல் எடையை சட்டென குறைக்க… இளநீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்?
இளநீர் பாயாசம் செய்முறை
- இளநீர் பாயாசத்தைத் தயார் செய்ய, முதலில் இளநீரில் உள்ள தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பாதியை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, அதில் மீதமுள்ள இளநீர் தண்ணீரையும் ஊற்றி, மீண்டும் அதை ஒரு முறை நன்கு அரைத்து எடுத்து பாத்திரம் ஒன்றில் வைத்துக் கொள்ளலாம்.
- இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.
- இதில் பால் நன்கு காய்ந்த பிறகு அதில் மில்க்மெய்டை ஊற்றி அது நன்கு கரையும் வரை ஒரு கரண்டியைக் கொண்டு நன்கு கலந்து விடலாம்.
- அதன் பிறகு, அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். இது நன்கு கரையும் வரை கிளற வேண்டும். பின், அதில் பச்சைக் கற்பூரம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கிளறலாம்.
- பின், அதில் சாரை பருப்பு மற்றும் மீதி இருந்த நறுக்கிய தேங்காய் வழுக்கையைச் சேர்த்து அதை நன்கு கலந்து கொதிக்க வைக்கலாம். கொதித்த பிறகு, அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து நன்கு ஆற விடலாம்.
- அடுத்ததாக, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும். நெய் சூடான பிறகு, அதில் முந்திரியை சேர்த்து அதை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளலாம்.
- பிறகு ஆற வைத்திருக்கும் பாலில், அரைத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கை மற்றும் வறுத்த முந்திரியை சேர்த்து அதை நன்கு கலக்க வேண்டும். (பால் சூடாக இருக்கும் போது, அரைத்த இளநீர் வழுக்கையைச் சேர்த்தால் அது திரிந்து விடலாம். எனவே பால் சூடாக இருக்கும் போது இதில் சேர்க்கக் கூடாது).
- அடுத்ததாக இந்த இளநீர் பாயாசத்தை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் வரை வைக்க வேண்டும்.
- அதன் பின், 2 மணி நேரத்திற்குப் பிறகு குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் பாதாம் துண்டுகளை தூவி பரிமாறலாம்.
- இப்போது சுவையான மற்றும் குளிர்ந்த இளநீர் பாயாசம் தயாராகி விட்டது.
இளநீர் பாயாசம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இளநீரானது நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, மினரல்கள், கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். மேலும், இளநீரில் நிறைந்திருக்கும் புரதச்சத்துக்கள் தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். எனவே இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை குழந்தைகளுக்குப் பிடித்தவாறு இளநீர் பாயாசமாகத் தயார் செய்து வாரத்திற்கு ஒரு முறையாவது கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Aravana payasam recipe: ஐயப்பன் கோவில் சுவையான அரவணப் பாயாசத்தை இப்படி ஈஸியா செய்யுங்க
Image Source: Freepik