How to make aravana payasam: கேரளாவில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதமாகவே இந்த அரவண பாயாசம் கருதப்படுகிறது. குறிப்பாக, சபரிமலை ஐயப்பன் சாமிக்க உகந்த நெய்வேத்தியமாக அரவண பாயாசம் செய்யப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணப் பாயாசத்திற்கு தனிச்சிறப்புண்டு. இதில் வீட்டிலேயே அரவணப் பாயாசத்தை எளிதான முறையில் எப்படி செய்வது என்பது குறித்து காண்போம்.
அரவணப் பாயாசம் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- புழுங்கலரிசி - 200 கிராம்
- தண்ணீர் - தேவையான அளவு
- நெய் - 250 மில்லி
- வெல்லம் - 1 கிலோ
- ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்
இந்த பதிவும் உதவலாம்: Benefits of kheer: குளிர்காலத்தில் கீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
அரவணப் பாயாசம் செய்முறை
அரவணப் பாயாசத்தை வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம்.
- முதலில் புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு, வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.
- வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்ச வேண்டும்.
- இதனுடன், அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளற வேண்டும்.
- எனினும், இதை அதிகம் குழையாமல், அதிகம் வெந்து போகாமல் பார்த்துக் கொள்ளவும்.
- அதன் பிறகு, அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றலாம். பின், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி விட வேண்டும்.
- பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்த பாயாசத்தை சாப்பிடும் போது கரகரவென்று இருக்கும். இப்போது சூப்பரான அரவணப் பாயாசம் தயாராகி விட்டது.
- இவ்வாறு எளிதான முறையில் அரவணப் பாயாசம் தயார் செய்யப்படுகிறது. இது சுவையுடன் கூடிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Almond Resin Payasam: இந்த கோடை வெப்பத்தில் சூடான அசத்தலான சுவையில் பாதாம் பிசின் பாயாசம் ரெடி!
அரவணப் பாயாசம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அரவணப் பாயாசம் சாப்பிடுவதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அதில் சேர்க்கப்படும் பொருள்களே ஆகும்.
- பச்சை அரிசியுடன் ஒப்பிடுகையில் புழுங்கலரிசி இரும்பு மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துகள் நிறைந்ததாகும். மேலும், வேக வைத்த புழுங்கலரிசியில் குறைவான கலோரிகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிகளவிலான புரதம் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இது ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. இது தவிர, புழுங்கல் அரிசி செரிமானம் அடைய எளிதானதாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்றதாகும்.
- வெல்லம் அதிகளவிலான இரும்புச்சத்துக்கள் நிறைந்ததாகும். குறிப்பாக, பெண்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வது உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரித்து, ஞாபக மறதியைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்கவும் வெல்லத்தைப் பயன்படுத்துகின்றனர்.
- மேலும், அரவணப் பாயாசம் தயார் செய்யத் தேவைப்படும் நெய் உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. நெய்யில் வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தவும், கண்பார்வை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது பித்தம், மலச்சிக்கல், சொறி, கப நோய்கள் போன்ற நோய்களைக் குணமாக்கவும் உதவுகிறது.
இவ்வாறு எளிமையான முறையில் ஆரோக்கியமான பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே அரவணப் பாயாசத்தைத் தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pachai Payaru Payasam: எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பச்சை பயறு பாயாசம் செய்முறை!!
Image Source: Freepik