$
Almond Pisin Recipe: கோடைக்காலம் வந்துவிட்டாலே நம்மில் பலரும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் போன்றவற்றை நாடுவர். ஆனால், சில நேரங்களில் வெயில் காலத்தில் குளிர்பானங்கள் அருந்துவது சளி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. குறிப்பாக நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கோடைக் காலத்தில் அதிகம் குளிர்பானங்களைக் கொடுக்கக் கூடாது.
இந்நிலையில், அவர்களின் உடலைக் குளிர்ச்சியாக வைப்பதுடன், ஆரோக்கியமாக வைக்க வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி தான் பாதாம் பிசின் பாயாசம். இந்த பாதாம் பிசின் பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி அருந்துவர். இந்த ரெசிபி எடுத்துக் கொள்வது சுவையுடன் கூடிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் அசத்தலான பாதாம் பிசின் பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து இந்தப் பதில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Blueberries Benefits: உடல் எடை குறைப்பு முதல் இரத்த சர்க்கரை வரை! ப்ளூபெர்ரி தரும் அதிசய நன்மைகள்
பாதாம் பிசின்
பாதாம் மரத்திலிருந்து வடியக்கூடிய கம் போன்ற பிசின் பாதாம் பிசின் என அழைக்கப்படுகிறது. இந்த பாதாம் பிசின் 92.3% கார்போஹைட்ரேட்டுகள், 2.4% புரதம் 0.8% கொழுப்புகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் மற்ற ஊட்டச்சத்துக்களான சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதன் மற்றொரு சிறப்பம்சமாக அமைவது உடலை இயற்கையான முறையில் குளிர வைக்க உதவுகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் பாதாம் பிசின் உட்கொள்வது நன்மை பயக்கும். மேலும் இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கிறது.

பாதாம் பிசின் பாயாசம் தயார் செய்யும் முறை
தேவையானவை
- பாதாம் பிசின் - 4 துண்டு
- முந்திரி - ஒரு கைப்பிடி அளவு
- பாதாம் - ஒரு கைப்பிடி அளவு
- பிஸ்தா - ஒரு கைப்பிடி அளவு
- நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - ஒரு கப் (துருவியது)
- மாதுளை முத்துக்கள் - 2 டேபிள் ஸ்பூன்
- நட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Milk Benefits: இரவில் மஞ்சள் பால் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா.?
பாதாம் பிசின் செய்முறை
பாதாம் பிசின் பாயாசம் செய்யும் முன்னதாக, பாதாம் பிசினை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகிய அனைத்தையும் தனியாக ஓரிரவு முழுவதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
- முதலில் இரவு முழுவதும் ஊறவைத்த நட்ஸ்களை அரைத்து பேஸ்ட் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன், வாழைப்பழம் வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
- பிறகு, ஒரு கப் துருவிய தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த தேங்காய் பாலில் அரைத்து வைத்த நட்ஸ் சேர்த்து பின், துருவிய நட்ஸ், பாதாம் பிசின், மாதுளை முத்துக்கள் போன்றவற்றைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.
- இதில் சுவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறினால், சுவையான பாதாம் பிசின் பாயாசம் தயாராகி விட்டது.
- கோடைக்கால வெப்பத்தைத் தணிக்கவும், உடலைக் குளிர்ச்சியாக வைக்கவும் பாதாம் பிசின் பாயாசத்தை எளிமையான முறையில் இவ்வாறு வீட்டிலேயே தயார் செய்து அருந்தலாம்.

பாதாம் பிசின் வைத்து தயார் செய்யப்பட்ட பாதாம் பிசின் பாயாசம் உடலுக்கு இயற்கையான குளிரூட்டியாக செயல்படுகிறது. சிலருக்கு எல்லா காலங்களிலும் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த உடல் சூட்டின் காரணமாக நீர் கடுப்பு, வயிற்று வலி போன்றவற்றை சந்திக்கலாம்.
இந்த அதிகப்படியான உடல் சூட்டைத் தணித்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க பாதாம் பிசினை எடுத்துக் கொள்ளலாம். மேலும், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கும் பாதாம் பிசின் உதவுகிறது. இத்தகைய பல்வேறு நன்மைகளைத் தரும் பாதாம் பிசினை வீட்டிலேயே எளிதான முறையில் பாயாசமாக செய்து அருந்துவது உடலுக்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaf Rice: அதென்ன வெற்றிலை சாதம்? இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கா?
Image Source: Freepik