What happens when you follow mediterranean diet: இன்றைய நவீன கால வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலரும் பல்வேறு வகையான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முதன்மையானதாக உடல் எடை அதிகரிப்பு அமைகிறது. ஏனெனில், உடல் பருமன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பிற நாள்பட்ட நோய்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். எனினும், உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்.
அதன் படி, நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் பலரும் பல்வேறு வகையான டயட் முறைகளைத் தேர்வு செய்கின்றனர். இதில் மெடிட்டெரேனின் டயட் வகையும் ஒன்றாகும். மெடிட்டெரேனின் டயட் அல்லது மத்திய தரைக்கடல் உணவுமுறையானது இன்று பலரும் கடைபிடிக்கப்படும் டயட் வகைகளில் ஒன்றாகும். இந்த மெடிட்டெரேனின் டயட் பின்பற்றுவதால் உடல் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cholesterol Control Foods: விடாபிடியான கொழுப்பை விரட்டும் அற்புத உணவுகள் இங்கே..
மெடிட்டெரேனின் டயட் என்றால் என்ன?
மத்திய தரைக் கடல் உணவுமுறை என்பது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த வகை உணவுகளில் அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், பருப்பு, நட்ஸ், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த கூடுதல் கன்னி ஆலிவ் எண்ணெய் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வர். ஆய்வில் இந்த உணவு முறைகளைக் கடைபிடிப்பவர்களுக்கு கரோனரி தமனி நோய் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த டயட் முறை இன்னும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மெடிட்டெரேனின் டயட் பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்
மத்திய தரைக்கடல் உணவைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கீழே கொடுக்கப்பட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
சீரான தூக்கம்
மத்திய தரைக்கடல் உணவுமுறை சீரான தூக்கத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் உணவை உட்கொள்ளும் முறையை எவ்வளவு அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் நீண்ட நேரம் மற்றும் நன்றாக உறக்கத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இது தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதும், காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலின் மெலடோனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பெண்களுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்க
மத்திய தரைக்கடல் உணவைப் பின்பற்றுவது இதய நோய்க்கான குறைந்த அபாயத்துடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையதாகும். இது பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஏனெனில், இந்த உணவுமுறையில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளைக் கட்டுப்படுத்துவதால், எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: உஷார்! நீங்க செய்யும் இந்த பழக்கங்களால் வாய் புற்றுநோய் வர சான்ஸ் இருக்கு
வீக்கத்தைக் குறைக்க
மத்திய தரைக்கடல் உணவைக் கடைப்பிடிப்பது இதய நோய் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகள் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடிய வீக்கத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தருகிறது. தாவர அடிப்படையிலான உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறோமோ, அந்த அளவிற்கு உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த
மெடிட்டெரேனின் டயட் கடைபிடிப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதைத் தவிர, மன ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த டயட் முறையில் பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களைப் பெறலாம். இவை அனைத்துமே மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது தவிர, பதட்டம், மனச்சோர்வைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஏனெனில், நல்ல குடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மெடிட்டெரேனின் டயட் முறையைப் பின்பற்றுவதால் இது போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு பயணத்தில் இந்த பழங்கள் சாப்பிடவேக்கூடாது.!
Image Source: Freepik