How Does Morning Meditation Help: பொதுவாக தியானம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் முக்கிய காரணியாக செயல்படுவதாகும். தினந்தோறும் தியானம் செய்வது மன அமைதி, தெளிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துவதுடன், அதிக ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது.
அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் தியானம் செய்வது மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தைத் தரும். இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய காலை தியானம் குறித்து யோகா சஞ்சீவனி & பூன்வெல்னஸ் இயற்கை சிகிச்சை நிபுணர் மற்றும் நிறுவனர் யோகா குரு டாக்டர். சுரேந்தர் சௌத்ரி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga During Periods: மாதவிடாயின் போது யோகா செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
காலை தியானத்தால் கிடைக்கும் நன்மைகள்
நாள்தோறும் காலை நேரத்தில் தியானம் செய்வதன் மூலம் எண்ணற்ற பலன்களைப் பெறலாம். அதில் சிலவற்றை இதில் காண்போம்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
யோகா மற்றும் தியானம் செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்கும் நன்மை பயக்கும். அதன் படி, பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க நோயெதிர்ப்புச் சக்தி தேவைப்படுகிறது. இது உணவின் அடிப்படையில் மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். நம் மனநலத்தின் அடிப்படையிலேயே நம் உடல்னலம் அமைகிறது.
அதன் படி, தூய்மையான காலை காற்றுடன் தியானம் செய்யும் போது, அந்த காற்று உள்ளிழுக்கப்பட்டு நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், தியானத்திற்குப் பின் சுவாசப் பயிற்சிகளைச் செய்வது உடல் ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்குகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க
தியானம் செய்வது நம் உள் அமைதியின் ஆழமான உணர்வோடு நம்மைத் தொடர்பு கொள்ள வைக்கும் சாதனம் ஆகும். இவ்வாறு செய்வது மன அழுத்தங்களிலிருந்து நம்மை பாதுகாக்க வைக்கிறது. மேலும், தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கத் தேவையான அமைதியையும், ஆற்றலையும் பெறலாம். குறிப்பாக திறந்த வெளியில் காலை தியானம் செய்வதன் மூலம் உணர்ச்சி, மன மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
கவலை நீங்க
கவலையுடன் இருப்பது ஒருவரின் அன்றாட வாழ்க்கையினைப் பாதிக்கலாம். எனினும், இந்த கவலையால் உண்டாகும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வழியாக மனநிறைவை வழங்கக்கூடிய தியானம் இருக்கலாம். இது ஒருவருக்கு ஏற்படும் பதட்ட உணர்வுகளை நிர்வகிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!
ஆற்றல் மேம்பாட்டிற்கு
பொதுவாக பணிபுரியும் நிபுணர்கள் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவர். இது அவர்களின் ஆற்றலைக் குறைக்கச் செய்வதுடன், பணியில் உள்ள ஈடுபாட்டைக் குறைக்கும். இதனால் குறைந்த உற்பத்தியை உணரலாம். இந்நிலையில் காலை தியானம் செய்வது நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வைக்கிறது. இது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, வேலை செய்வதில் ஈடுபாட்டை அதிகரிக்கிறது.
இது தவிர பணி செய்யும் போது, மன அழுத்தம் அல்லது சோர்வாக உணரும் சமயங்களில் இடையிடையில் தியானம் செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவும்.
நல்ல தூக்கத்தைப் பெற
ஆரோக்கியமான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு தூக்கம் மிகவும் அவசியமாகும். இரவு நேரங்களில் சரியாக தூங்க முடியாமல் போனால், நாள் முழுவதும் தூக்கம் வரலாம். இது ஒருவரது வேலை மற்றும் வாழ்க்கைக்கு இடையூறாக அமையும்.
இதற்கு சிறந்த தீர்வாக காலை தியானம் செய்வது, நல்ல தூக்கத்தைத் தருகிறது. இதய இதயத்துடிப்பைக் கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தின் விளைவை விடுவிக்கிறது. தியானம் சிறந்த தூக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாகும். மேலும், நிம்மதியான உறக்கத்தைப் பெற இரவு தூக்கத்திற்கு முன் தியானம் செய்யலாம்.
காலை தியானம் செய்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சிறந்த வழியாகும். இது மன அமைதி, ஆற்றல் மேம்பாடு மற்றும் கவனம் செலுத்துதல் போன்றவற்றை வழங்குகிறது. எனவே நாமும் காலையில் தியானம் செய்வதன் மூலம் பல்வேறு நலன்களைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Health Yoga: உங்க மூளைத் திறன் அதிகரிக்க, இந்த யோகாசனம் எல்லாம் டிரை பண்ணுங்க
Image Source: Freepik