Health Benefits Of Eating Pumpkin Seeds Daily: உடல் ஆரோக்கியத்திற்கு சரியான உணவுமுறையைக் கையாள்வது மிகவும் அவசியமாகும். எனவே, உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை உதவுகின்றன. அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகள் மிகுந்த நன்மை பயக்கும்.
நாம் பெரும்பாலும் காய்கறிகள், பழங்களில் காணப்படும் கொட்டைகளை எரிந்து விடுகிறோம். ஆனால், அவற்றிலும் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அவ்வாறே பூசணி விதைகளும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதையாகும். இதில் பூசணி விதைகள் உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Benefits: பூசணிக்காயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
பூசணி விதைகளின் ஊட்டச்சத்துக்கள்
பூசணி விதையானது பெப்பிடாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள், மக்னீசியம், புரதம், ஜிங்க் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இதை வழக்கமான உணவு முறையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
தினமும் காலையில் பூசணி விதைகள் சாப்பிடுவதன் நன்மைகள்
ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட
பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் இ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள ஃப்ரி ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க இது சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் மூலம் நாள்பட்ட வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
பூசணி விதைகள் உள்ள சிங்க் ஊட்டச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது மினரல்கள் நிறைந்த விதைகளாகும். இதை தினமும் உட்கொள்வதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பாற்றலை அதிகரிப்பதுடன், பல்வேறு நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
பூசணி விதைகளில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து இதயம் சீராக இயங்க உதவுகிறது. கூடுதலாக, இந்த விதைகளில் உள்ல ஆரோக்கிய கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!
உடல் எடை மேலாண்மைக்கு
இந்த விதைகளில் நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் போன்றவை உள்ளது. எனவே தினமும் காலையில் இந்த விதைகளை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து கலோரி உட்கொள்ளைக் குறைக்கிறது. இதை அன்றாட உணவில் காலை உணவுக்குப்பின் ஏற்படும் பசியின்மையை போக்குகிறது. உடல் எடை மேலாண்மைக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு
பூசணி விதைகளில் உள்ள வைட்டமின்கள், ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் மினரல்கள் போன்றவை ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இது சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து நெகிழ்தன்மையை பராமரிக்கிறது. இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள், தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும், நீண்ட, வலுவான கூந்தலுக்கும், தலைமுடி வளர்வதற்கும் உதவுகிறது.
நல்ல உறக்கத்திற்கு
இந்த விதைகளில் டிரிப்டோஃபான் என்ற அமினோ அமிலங்கள் இயற்கையாகவே நிறைந்துள்ளது. இந்த அமினோ அமிலங்களை உடல் செரோடினின் மற்றும் மெலோடினினாக மாற்றுகிறது. இந்த இரண்டு ஹார்மோன்களும், நல்ல உறக்கத்தைத் தரக்கூடிய ஹார்மோன்களாகும். எனவே பூசணி விதைகளை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வது உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, தூக்கமின்மை பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
எனவே தினமும் காலையில் பூசணி விதைகளை உட்கொள்வதன் மூலம் இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: எக்கச்சக்க நன்மைகளை அள்ளித் தரும் பூசணி விதை! எப்படி எடுத்துக்கொள்வது?
Image Source: Freepik