$
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, தங்கள் உணவு பழக்கத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களது காலை உணவை தவறாவம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்துவிடும். அப்போது உணவை அதிகமாக சாப்பிட்டு, இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் நிறைந்ததை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, நாளின் தொடக்கத்தில் இரத்த சர்க்கரையை சீராக வைத்துக்கொள்ள உதவும். நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய காலை உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஓட்ஸ்
ஓட்ஸில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஓட்ஸ் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஓட்ஸ் சத்துக்கள் நிறைந்த காலை உணவாகும். இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக திகழ்கிறது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
கிரீக் யோகர்ட்

காலையில் சிறிது சிறிதாக ஏதாவது சாப்பிட விரும்புபவர்களுக்கு கிரீக் யோகர்ட் ஏற்றதாக இருக்கும். இதில் அதிக புரதம் உள்ளது. மேலும் குறைவான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. கிரீக் யோகர்ட்டில் வழக்கமான தயிரில் உள்ள புரதத்தை விட இரு மடங்கு புரதமும், பாதி கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கியமான காலை உணவு பட்டியலில் உள்ளது.
முட்டை
முட்டைகள் நமக்கு எளிதாக கிடைக்கும். முட்டையில் அதிக புரதமும், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், முட்டை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவு ஆகும். முட்டையை வேகவைத்தும் சாப்பிடலாம். அல்லது ஆம்லெட், புர்ஜி என்று விதவிதமாக செய்தும் சாப்பிடலாம்.
இதையும் படிங்க: Weight Loss Diet: உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்
டோஃபு
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வழி தேடும் சைவ உணவர்களுக்கு டோஃபு ஒரு ஆரோக்கியமான மாற்றாகும். டோஃபு என்பது சோயா பாலில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பனீர் ஆகும். இதில் அதிக அளவு புரதமும், நல்ல கொழுப்புகள் மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளன. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்ததாகும்.
சியா விதை
சியா விதையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். அதிக நார்ச்சத்து இருப்பதால், இது ஆரோக்கியமான இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. சுவையான காலை உணவை ருசிக்க நீங்கள் சியா விதை புட்டு செய்து சாப்பிடலாம்.
நட்ஸ் & சீட்ஸ்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் நட்ஸ் மற்றும் விதைகளை காலை உணவாக சேர்க்க வேண்டும். ஏனெனில் அவை உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க உதவுவது மட்டுமல்லாமல் இதய நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை தடுக்க நட்ஸ் மற்றும் விதைகள் உதவுகின்றன. இருப்பினும், அவற்றை அதிகமாக உட்கொண்டால் எடை அதிகரிக்கும். எனவே அளவை தீர்மானிக்கும் முன் ஒரு உணவு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும்.
முளைகட்டிய பயிர்

முளைகட்டிய பயிரில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி இதய நோய் அபாயத்தைத் தடுக்கின்றன. காலை உணவாக, பருப்பு மற்றும் முளைகட்டிய பயிரை செய்து சாப்பிட வேண்டும்.
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பருமனானவர்கள் சரியான காலை உணவை சாப்பிடுவதன் மூலம் தங்கள் நோயை சிறப்பாக கட்டுப்படுத்தி எடையை குறைக்கலாம். இன்சுலின் எதிர்ப்பை வளர்ப்பதற்கான வாய்ப்பையும் இதன் மூலம் குறைக்கலாம். காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். மேலும் உணவு அட்டவணையைத் தயாரிக்க உங்கள் ஊட்டச்சத்து நிபுணரிடம் கேட்க வேண்டும்.
Image Source: Freepik