Health Benefits Of Pomegranate: ஆரோக்கியமாக இருக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சீசனில் கிடைக்கும் பழங்களை அந்த சீசனில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
இருப்பினும், ஆண்டு முழுவதும் கிடைக்கும் சில பழங்கள் உள்ளன. அதில் மாதுளையும் ஒன்று. இதை சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் மாதுளம்பழத்தை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சில வகையான உடல்நலப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. அதை இப்போது பார்க்கலாம்.
மாதுளையில் ஊட்டச்சத்துக்கள்
புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக்கும். மேலும், இவற்றை உண்பதால், உடலுக்கு குறைவான கலோரிகள் கிடைக்கும்.

மாதுளையின் ஆரோக்கிய நன்மைகள்
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது
மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் கட்டி வளர்ச்சியையும் குறைக்கிறது. மேலும், புரோஸ்டேட் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு மாதுளை சாறு நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
நீரிழிவு கட்டுப்பாடு
மாதுளையில் உள்ள புனிகலஜின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மாதுளை கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் (எச்டிஎல்) அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. மாதுளையில் உள்ள பாலிஃபீனாலிக் கலவைகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரத்த அழுத்தத்தைக குறைக்கவும் உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்
மாதுளை ஜூஸ் குடிப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மாதுளம்பழம் ஜூஸ் குடிப்பவர்களின் சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு அதிகமாக இருக்கிறது. இது சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.
மேலும் சில...
* கர்ப்பிணிகள் மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சி அடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
* மாதுளம்பழங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வீக்கம் குறையும்.
* மாதுளம்பழத்தை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
* மாதுளையில் உள்ள பாலிஃபீனால்ஸ் பண்புகள் உடற்பயிற்சியின் போது ஆற்றலை அளிக்கிறது. இதனால் விரைவில் சோர்வு ஏற்படாது.
* மாதுளம்பழங்களை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். இதில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
* மாதுளை வயது தொடர்பான மூளைச் சிதைவு மற்றும் அல்சைமர் நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
* மாதுளையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
* மாதுளம்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
பின் குறிப்பு
மாதுளம் பழத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதில் சர்க்கரை மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது சிறுநீரக பிரச்னைகள் இருந்தால் இவற்றை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik