Yoga asanas to cure arthritis: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக மூட்டு வலியும் அடங்கும். உண்மையில், வயதானவர்கள் சந்திக்கக்கூடிய பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் இன்று இளம் வயதிலேயே சந்திக்கக்கூடிய நிலை உருவாகிறது. இதில் ஆர்த்ரிடிஸ் அல்லது மூட்டு வலி அடங்கும். குறிப்பாக, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் போதிய உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணங்களால் மூட்டு வலி மேலும் மோசமாகக் கூடிய நிலைமை உண்டாகலாம்.
அதிர்ஷ்டவசமாக, ஆர்த்ரிடிஸ் வலியிலிருந்து நிவாரணம் பெற சில யோகாசனங்களை மேற்கொள்ளலாம். இதில் ஆர்த்ரிடிஸ் குணமாக செய்ய வேண்டிய யோகாசனங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உஷார்! நாள்பட்ட முதுகுவலியால் நீங்க இந்த பிரச்சனைகளை சந்திக்கலாம் - எப்படி குறைப்பது?
ஆர்த்ரிடிஸ் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் யோகாசனங்கள்
மர்ஜர்யாசனம்-பிட்டிலாசனம் (Cat-Cow Pose)
பூனை-பசு ஆசனம் அல்லது மர்ஜர்யாசனம்-பிட்டிலாசனம் செய்வது கழுத்து, முதுகெலும்பு மற்றும் தோள்களை மெதுவாக நீட்டுகிறது. இது விறைப்பைக் குறைத்து, முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது முதுகு மற்றும் மூட்டுகளை ஆதரிக்கக்கூடிய மைய தசைகளை பலப்படுத்துகிறது. இந்த ஆசனம் மூட்டுகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மூட்டுவலி மற்றும் அதனால் ஏற்படும் விறைப்பைப் போக்கலாம்.
மர்ஜர்யாசனம்-பிட்டிலாசனம் செய்யும் முறை
இந்த ஆசனம் கைகள் மற்றும் முழங்கால்களில் தோள்களுக்குக் கீழே மணிக்கட்டுகளையும், இடுப்புக்குக் கீழே முழங்கால்களையும் வைத்துக்கொண்டு தொடங்க வேண்டும்.
இதில் மூச்சை இழுத்து, முதுகை வளைத்து, தலை மற்றும் வால் எலும்பை உயர்த்த வேண்டும் (Cow Pose). அதே சமயம், மூச்சை வெளியே விட்டு முதுகெலும்பைச் சுற்றி, தாடை மற்றும் வால் எலும்பை இழுக்க வேண்டும் (Cat Pose). இந்த மெதுவான, பாயும் இயக்கத்தை 5-10 முறை செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை சுவாசத்துடன் ஒத்திசைக்க வேண்டும்.
சேது பந்தாசனம் (Bridge pose)
பாலம் போஸ் என்றழைக்கப்படும் சேது பந்தாசனம் முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை பலப்படுத்தவும், மூட்டுகளை ஆதரிக்கவும் உதவுகிறது. இது மார்பைத் திறந்து, தோரணையை மேம்படுத்துகிறது. மேலும் இந்த ஆசனம் பெரும்பாலும் கீல்வாதத்துடன் தொடர்புடைய கீழ் முதுகு வலி மற்றும் விறைப்பை நீக்க உதவுகிறது. இதனை வழக்கமாக செய்வது சுழற்சி மற்றும் மூட்டு இயக்கத்தை மேம்படுத்துகிறது.
சேது பந்தாசனம் செய்யும் முறை
முதலில் முழங்கால்களை வளைத்து, கால்களை தரையில் தட்டையாக வைத்து, இடுப்பு அகலம் வரை விரித்து, முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை கீழே வைத்து, கைகளை உடலுடன் சேர்த்து வைக்கலாம். பிறகு கால்களையும் கைகளையும் தரையில் அழுத்தி, உங்கள் இடுப்பை கூரையை நோக்கி உயர்த்த வேண்டும். இதில் தொடைகள் இணையாகவும் தோள்களை முழுமையாக தளர்வாகவும் வைத்திருக்கலாம். 20-30 வினாடிகள் இந்த நிலையில் இருக்கலாம். பின்னர் மெதுவாக இடுப்பை மீண்டும் கீழே இறக்க வேண்டும்.
முக்கோண ஆசனம் (Triangle Pose)
திரிகோணசனா அல்லது முக்கோண ஆசனத்தில் கால்கள், இடுப்பு, முதுகெலும்பு மற்றும் மார்பை நீட்டி செய்வதால் உடலை பலப்படுத்துகிறது. மேலும் இது சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. இது தவிர, மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: எப்போர்ப்பட்ட முதுகு வலியில் இருந்தும் நிவாரணம் பெற இந்த 5 வீட்டுவைத்தியங்கள ட்ரை பண்ணுங்க...!
முக்கோண ஆசனம் செய்யும் முறை
நேராக நின்று, கால்களை அகலமாக விரித்து வைக்க வேண்டும். பின்னர் வலது பாதத்தை 90 டிகிரி வெளிப்புறமாகவும், இடது பாதத்தை சற்று உள்நோக்கியும் இருக்குமாறு வைக்கலாம். கைகளை தோள்பட்டை உயரத்தில் பக்கவாட்டில் நீட்ட வேண்டும். மூச்சை இழுத்து வலது கையை முன்னோக்கி நீட்டலாம். பின்னர் மூச்சை வெளியேற்றி, இடுப்பை வளைத்து, வலது கையை உங்கள் தாடை, கணுக்கால் அல்லது தரையில் வைக்கலாம். பிறகு இடது கையை கூரையை நோக்கி நீட்டி, இடது கையைப் பார்க்க வேண்டும். இந்நிலையில் 20-30 விநாடிகள் இருந்து, மறுபுறம் செய்யலாம்.
விருக்ஷசனம் (Tree Pose)
இந்த ஆசனம் சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. குறிப்பாக மூட்டுவலி உள்ளவர்களுக்கு காயங்களைத் தடுக்க இந்த ஆசனம் பெரிதும் உதவுகிறது. இது கால்களை வலுப்படுத்தவும், விறைப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த ஆசனம் தோரணையை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
விருக்ஷசனம் செய்யும் முறை
இதில் முதலில் கால்களை ஒன்றாக வைத்து நேராக நிற்க வேண்டும். பின்னர் எடையை இடது காலை நோக்கி நகர்த்த வேண்டும். வலது முழங்காலை வளைத்து, வலது பாதத்தின் உள்ளங்காலை, உங்களது இடது தொடையின் உட்புறத்தில் வைக்க வேண்டும் (முழங்காலைத் தவிர்க்க வேண்டும்). பின்னர் உள்ளங்கைகளை மார்பின் முன் ஒன்றாக வணக்கம் சொல்லும் நிலையில் கொண்டு வரலாம். இவ்வாறு உள்ளங்கைகள் இணைக்கப்பட்ட நிலையில் மெதுவாக கைகளை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். இதை சமநிலையில் கவனம் செலுத்தி, 20-30 வினாடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும். பின்னர் மறுபுறம் செய்யலாம்.
இந்த ஆசனங்களின் மூலம் ஆர்த்ரிடிஸ் வலியிலிருந்து விடுபட முடியும். எனினும் இந்த ஆசனம் செய்யும் போது வலி ஏற்பட்டால், இதை செய்வதை நிறுத்த வேண்டும். விரைவில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Joint Pain Yoga: மூட்டு வலி சீக்கிரம் குறையணுமா? இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க
Image Source: Freepik