How to Lose Weight With PCOS: பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது ஹார்மோன் சமநிலையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சியை குறிக்கிறது. உலகளவில், இந்த பிரச்சனையால் 4-20 சதவீத பெண்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த பிசிஓஎஸ் பிரச்சனையால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவை உடல் எடையை குறைப்பதை சவாலாக மாற்றுகிறது.
செப்டம்பர் பிசிஓஎஸ் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஊட்டச்சத்து நிபுணரான தர்ஷினி பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என விளக்கியுள்ளார்.
பிசிஓஎஸ் உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான சில வழிமுறைகள் இதோ,
1. நார்ச்சத்து மிக்க உணவு:
அதிக நார்ச்சத்து உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பு, கொழுப்பை குறைப்பது மற்றும் பிசிஓஎஸ் உள்ள பெண்களின் தொப்பை கொழுப்பை குறைப்பதில் சிறப்பாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் தினமும் 25 கிராம் அளவிற்கு நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. போதுமான அளவு புரதம்:
புரதச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளும் போது அது வயிற்றை நிறைவாக உணரவைப்பதோடு, பசி ஹார்மோன்களை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. புரதச் சத்து நிறைந்த முட்டை, நட்ஸ் வகைகள், பால், இறைச்சி மற்றும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. மன அழுத்தம்:
மன அழுத்தத்தை நிர்வகிப்பது அல்லது குறைப்பது உடல் எடையை நிர்வகிக்க உதவும். மன அழுத்தம் அட்ரீனல் சுரப்பிகள் உற்பத்தி செய்யும் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. நாள்பட்ட உயர் கார்டிசோல் அளவுகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது. இதனால் தொப்பை கொழுப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உங்கள் கார்டிசோல் அளவைக் குறைக்க, தியானம், யோகா, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
4.கவனத்துடன் சாப்பிட்டு பழகுங்கள்:
பிசிஓஎஸ் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை கவனத்துடன் எடுத்துக்கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த சாத்தியமான தீர்வாகும். மைண்ட்ஃபுல்னெஸ் எனப்படும் கவனத்துடன் சாப்பிட்டு பழகும் முறையானது அதிகமாக சாப்பிடுவது, ஸ்ட்ரெஸ் ஈட்டிங் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
5. இந்த உணவுகள் வேண்டாம்:
பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக சர்க்கரையுள்ள உணவு வகைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பிசிஓஎஸ் உள்ள பெண்கள் இந்த வகை உணவுகளை உட்கொண்ட பிறகு, உடலில் ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் அதிர்ச்சியளிக்கூடிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
6. பிறருடன் ஒப்பிடாதீர்கள்:
ஒவ்வொருடைய உடலும் வித்தியாசமானது, எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான உடல் ரீதியிலான பிரச்சனைகள் இருப்பதில்லை. எனவே பிறருடைய உடல் எடை அல்லது எடையிழப்புடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.
7.முழுமையாக பின்பற்றுங்கள்:
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை பிசிஓஎஸ் பிரச்சனைக்காக மட்டும் சில மாதங்கள் பின்பற்றிவிட்டு, மாதவிடாய் சுழற்சி சரியானதும் அதனை சிலர் கைவிட்டுவிடுகின்றனர்.
இந்த பழக்க வழக்கங்கள் நம்முடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுவதாலும், மேலும் திடீரென இதனை கைவிடுவதால் மீண்டும் உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்பதாலும் தொடர்ந்து பின்பற்றுவதே சரியானது.
8.சப்ளிமெண்ட் உதவி:
இனோசிட்டால் போன்ற சப்ளிமெண்ட்ஸ் சிலருக்கு உதவியாக இருக்கும், ஆனால் வாழ்க்கைமுறை மாற்றம் போன்ற நீண்ட கால தீர்வில் கவனம் செலுத்துவது உடல் எடை இழப்பை ஆரோக்கியமானதாக மாற்றும்.
9. விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள்:
சோசியல் மீடியாக்கள், டி.வி. உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பாகும் டஉடல் எடை குறைப்பு அல்லது பிசிஓஎஸ் தொடர்பான தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
ஏனெனில் உடல் எடையை விரைவாக குறைக்கக்கூடிய மேஜிக் உணவு என்ற ஒன்று கிடையவே கிடையாது. எனவே முறையான மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர் பரிந்துரைக்கும் சப்ளிமெண்டகளை பயன்படுத்துவது நல்லது.
10.ஆழ்ந்த உறக்கம்:
தூக்கமின்மை பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சரியான தூக்கம் இல்லாதவர்களை விட, தரமான தூக்கத்தை மேற்கொள்பவர்களின் உடலில் கொழுப்பு அளவு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.