பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிற்றல் (Menopause) ஒரு தவிர்க்க முடியாத கட்டமாகும். இந்த நிலை பொதுவாக 45 முதல் 55 வயது பெண்களுக்கு ஏற்படும். இந்த நிலையில், பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஆனால், இந்த மாற்றங்களை சரியாக புரிந்து கொண்டு, உடல் நலத்தைக் காக்கும் முறைகளை பின்பற்றினால், பெண்கள் நம்பிக்கையுடன் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கிறார் காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட் டாக்டர் பால் மாணிக்கம்.
மெனோபாஸ் காலத்தில் என்ன நடக்கும்?
மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் என்ற ஹார்மோன்களின் உற்பத்தி மெதுவாகக் குறைகிறது. இந்த ஹார்மோன்கள் - மாதவிடாய் மட்டுமின்றி, எலும்பு ஆரோக்கியம், உடல் எடை கட்டுப்பாடு, மனநிலை மற்றும் தூக்கம் - இவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்கள் குறையத் தொடங்கும் போது உடல் எச்சரிக்கை அறிகுறிகளைத் தருகிறது. அதுவே மெனோபாஸ் அறிகுறிகளாக வெளிப்படுகிறது.
பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்
* எப்போதும் சூடாக உணர்வது
* இரவில் வியர்வை
* காரணமில்லாமல் எடை அதிகரிக்கும்
* அதிக சோர்வு
* தூக்கமின்மை
* மனக்குழப்பம்
* எலும்பு பலவீனமாகும்
* மூட்டு வலி
இந்த அறிகுறிகள் இயல்பானவை. ஆனால் அவற்றை புறக்கணித்தால், இதயம், எலும்புகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று டாக்டர் பால் கூறுகிறார்.
பெண்கள் சந்திக்கும் சிக்கல்
மாதவிடாய் முழுமையாக நின்ற பிறகு, பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அப்போது, பெண்கள் தங்களை பழைய நிலையில் பார்க்க விரும்புவார்கள். இது சாத்தியாமா என்ற கேள்விக்கு, ஆம்.. என்கிறார், டாக்டர் பால். அதாவது, சரியான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மற்றும் முறையான வழிகாட்டுதலுடன், மெனோபாஸ் கட்டத்தை கடந்தால், உடலில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்று அவர் கூறினார்.
மெனோபாஸ் காலத்தில் உதவும் முக்கிய வழிகள்
ஆரோக்கியமான உணவுகள்
* கால்சியம் நிறைந்த உணவுகள் (பால், தயிர், எள், சுண்டல்), எலும்புகளைக் காக்கும்.
* ஓமேகா-3 நிறைந்த ஆளி விதைகள் (Flax seeds) மற்றும் நட்ஸ் ஆகியவை ஹார்மோன் சமநிலைக்கு உதவும்.
* காய்கறிகள் மற்றும் பழங்கள், உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும்.
தினசரி உடற்பயிற்சி செய்யவும்
* எடை தூக்கும் பயிற்சி (Strength training) எலும்புகளை வலுவாக்கும்.
* நடைப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள், உடல் மற்றும் மனநிலையை சீராக்கும்.
நல்ல தூக்கம்
* தினமும் 7–8 மணிநேரம் நித்திரை பெறுவது ஹார்மோன் சமநிலைக்கும், ஆற்றலுக்கும் அவசியம்.
* படுக்கும் முன் மொபைல்/டிவி பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
வெப்பக்காற்றை கட்டுப்படுத்தவும்
* படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
* இரவு நேரத்தில் - காபி குடிப்பதையும், காரமான உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
* பருத்தி உடைகள் அணிவது நிம்மதியை தரும்.
மன அழுத்தத்தை குறைக்கவும்
* தினமும் குறைந்தது 15 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி (Mindful Breathing) செய்ய வேண்டும்.
* தியானம், யோகா போன்றவை மனநிலையைச் சீராக்கும்.
* சிலருக்கு பாடல் கேட்பது மன நிம்மதியை தரலாம்.
View this post on Instagram
மருத்துவ ஆலோசனை அவசியம்
மெனோபாஸ் காலம் இயல்பானது என்றாலும், சில பெண்களுக்கு கடுமையான அறிகுறிகள் ஏற்படலாம். அதிக எலும்பு வலி, தீவிர மன அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத வெப்பக்காற்று போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது அவசியம்.
மெனோபாஸ் என்பது வாழ்வின் சவாலான கட்டமாக இருந்தாலும், சரியான வழிகாட்டுதலுடன் பெண்கள் இதனை ஆரோக்கியமாகக் கடந்து, புதிய உயிர்ச்சக்தியுடன் வாழ முடியும் என்கிறார் டாக்டர் பால்.
இறுதியாக..
மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றம். ஆனால், இது ஒரு முடிவு அல்ல, புதிய தொடக்கம் எனக் கருதி, உடல்-மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். உணவு பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம், மனஅழுத்த கட்டுப்பாடு போன்ற சிறிய வழிமுறைகள் பெரிய மாற்றங்களை தரும்.