வெந்தயத்தை உட்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.இது பல உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும் உதவுகிறது. உடல் எடையைக் குறைப்பது முதல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது வரை வெந்தயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.ஆனால் அதிக இரத்தக் கொழுப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், நீங்கள் படித்தது சரிதான்! நீங்கள் வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.அதாவது கெட்ட(LDL) கொழுப்பைக் குறைக்கவும், நல்ல(HDL) கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது. நீங்கள் அதைச் சரியான முறையில் உட்கொண்டு பயன்பெறலாம்.
இரத்தக் கொழுப்பைக் குறைக்க வெந்தயம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்? மேலும் அதை எப்படி உட்கொள்ள வேண்டும்? இந்தத் தலைப்பைப் பற்றிய கூடுதல் தகவலுக்காக, ஊட்டச்சத்து நிபுணரும், உணவியல் நிபுணருமான கரிமா கோயலிடம் பேசினோம். இரத்த கொழுப்பைக் குறைக்க வெந்தயத்தை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரத்தக்கொழுப்பை குறைக்கும் வெந்தயத்தின் நன்மைகள்
உணவியல் நிபுணர் கரிமாவின் கூற்றுப்படி, வெந்தயம் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், தாமிரம் மற்றும் A, B, C மற்றும் K போன்ற அத்தியாவசிய வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். கூடுதலாக, வெந்தயத்தில் இருக்கும் கூட்டுப்பொருள்கள் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது, அத்துடன் நமது குடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது.இந்தக் கூட்டுப்பொருள்கள் ஸ்டீராய்டல் சப்போனின்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வெந்தயம் நல்ல கொழுப்பை மேம்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் அதிக அளவிலான கெட்ட கொழுப்பைப் படிப்படியாகக் குறைக்கிறது. வெந்தயம் கல்லீரலில் உள்ள LDL ஏற்பிகளை அதிகரிக்க உதவுவதாக மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். வெந்தய விதைகளை வழக்கமாக உட்கொள்வது லிப்பிட் ஐ மேம்படுத்திக் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்தக் கொழுப்பைக் குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும்?
உணவியல் நிபுணர் கரிமாவின் கூற்றுப்படி, வெந்தயத்தின் அனைத்து ஆரோக்கிய நலன்களையும் பெறுவதற்கு அதைக் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் இந்தத் தண்ணீரை குடித்து, ஊறிய வெந்தயத்தையும் மென்று சாப்பிடுங்கள்.
இது தவிர, காலையில் வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, தண்ணீர் மற்றும் வெந்தயம் இரண்டையும் உட்கொள்ளலாம்.
நீங்கள் சமைக்கும் உணவுகளிலும் வெந்தயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வெந்தயத்தை தாளிக்கும்போது பயன்படுத்தலாம் அல்லது முளைகட்டிய வெந்தயத்தை குழம்பு செய்தும் சாப்பிடலாம்.இது அவற்றின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது.