$
How To Make Fenugreek Oil At Home: பலரும் மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையால் பல உடல் உபாதைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் முடி உதிர்வு, முடி வறட்சி, உடைந்த முடி, முடி மெலிதாகுதல் என பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. இதனைத் தவிர்க்க இன்னும் சிலர் சந்தையில் கிடைக்கும் முடி பராமரிப்பு பொருள்களை அதிக செலவு செய்து பயன்படுத்துகின்றனர். இதில் இரசாயனங்கள் கலந்திருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
முடி சார்ந்த பிரச்சனைகளைக் குறைக்கவும், எந்த பக்கவிளைவுகளும் இல்லாத, அதிக செலவும் இல்லாமல் வீட்டிலேயே இயற்கையான முறையைக் கையாளலாம். அதில் ஒன்றாகவே உணவுப்பொருளான வெந்தயம் அமைகிறது. வெந்தயம் உடலைக் குளிர்ச்சியாக வைப்பதுடன், முடி சார்ந்த பராமரிப்புப் பொருள்களிலும் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அதிக முடி உதிர்வைச் சந்திக்கும் நபர்களுக்கு வெந்தய எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. இதில் தலைமுடிக்கு வெந்தய எண்ணெய் தயாரிக்கும் முறை குறித்தும், அதன் நன்மைகளையும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Onion Juice For Hair: முடி பொசு பொசுனு வளர வெங்காயச் சாற்றை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க
வெந்தய எண்ணெய் தயாரிக்கும் முறை
- முதலில் வெந்தய எண்ணெய் தயார் செய்வதற்கு ஒரு சுத்தமான ஜாடி ஒன்றில் 1/2 கப் அளவிலான வெந்தய விதைகளை சேர்க்க வேண்டும். (இந்த விதைகளை ஒரு பிளெண்டரில் சிறிது நசுக்கி, பின்னர் பயன்படுத்தலாம்.)
- பிறகு, விருப்பமான இயற்கை எண்ணெயைத் தேர்ந்தெடுத்து ஜாடியில் ஊற்றிக் கொள்ளலாம். அதன் படி, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய் போன்றவற்றில் எந்த எண்ணெயையும் எடுத்துக் கொள்ளலாம்.
- இவ்வாறு எண்ணெயை ஊற்றும் போது வெந்தயத்தை முழுவதுமாக மூழ்கடித்து இருக்குமாறு ஊற்ற வேண்டும்.
- பிறகு ஜாடியை மூடி வைத்து சுத்தமான மற்றும் உலர்ந்த இடத்தில் சுமார் 3-6 வாரங்களுக்கு வைக்க வேண்டும்.
- இந்த எண்ணெயை சூடாக்கத் தேவையில்லை. அதே சமயம் வெந்தய விதைகளில் குளிர்ந்த எண்ணெயை மட்டும் ஊற்ற வேண்டும். இந்த பாட்டிலை அறை வெப்பநிலையில் வைத்து வெந்தயம் மற்றும் எண்ணெயைக் கலக்க ஒரு நாளைக்கு ஒரு முறை பாட்டிலைக் குலுக்கி வைக்க வேண்டும்.

- இவ்வாறு வைக்கும் போது எண்ணெய் காலப்போக்கில் கருமையான நிறத்தில் மாறுவதைக் காணலாம்.
- அதன் பிறகு, ஒரு சல்லடை அல்லது வடிகட்டியைப் பயன்படுத்தி, விருப்பப்படி எண்ணெயை வடிகட்டி, வெந்தய விதைகளை எடுத்து விடலாம்.
- பிறகு, பிரித்தெடுத்த எண்ணெயை மட்டும் ஒரு புதிய பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை 1 மாதம் வரை பயன்படுத்த நல்லது.
- இந்த எண்ணெயை குறைந்தது இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Oiling Before Shampooing: ஷாம்பு போடும் முன் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க
வெந்தய எண்ணெயின் நன்மைகள்
- இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக பொடுகு அமைகிறது. அதன்படி, பொடுகு பிரச்சனையைக் குறைக்க வெந்தய எண்ணெயைப் பயன்படுத்தலாம். வெந்தயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் நிறைந்துள்ளதால் இவை உச்சந்தலையில் உருவாகும் ஈஸ்டை எதிர்த்துப் போராடி பொடுகுத் தொல்லையைத் தவிர்க்கிறது.
- ஸ்டைலிங் கருவிகள் அல்லது இரசாயனப் பொருள்களின் அதிக பயன்பாட்டால், தலைமுடி பல்வேறு சேதங்களுக்கு உட்படுகிறது. இதை மீட்டெடுக்க வெந்தய எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது இயற்கையான பிரகாசத்தை மீண்டும் பெற உதவுகிறது.
- முடி உதிர்தல் இன்று பலருக்கும் பொதுவான பிரச்சனையாகும். எனவே முடி உதிர்தலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக வெந்தய எண்ணெய் பெரிதும் உதவுகிறது. தலைமுடிக்கு வெந்தய எண்ணெயைப் பயன்படுத்துவது முடி அடர்த்தியை அதிகரிக்கவும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
- தலைமுடி விரைவாக வளர்வதை ஊக்குவிக்க வெந்தய எண்ணெய் உதவுகிறது. இதற்கு வெந்தய எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களே காரணமாகும். இந்த அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை முடி வளர்ச்சியை விரைவாக ஊக்குவிக்கிறது.
- இன்று பலரும் முடி மெலிந்து உடைந்து போவதை உணரலாம். இதற்கு முடிக்குத் தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பதே காரணமாகும். தலைமுடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர இரும்பு மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. இவை வெந்தய விதைகளில் நிறைந்துள்ளன. எனவே முடி வலுவாக மற்றும் அடர்த்தியாக வைப்பதற்கு வெந்தய எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு வீட்டிலேயே இயற்கையான முறையில் வெந்தய எண்ணெயைத் தயார் செய்து தலைமுடிக்குப் பயன்படுத்தலாம். எனினும், இது உடனடியாக முடிவுகளைக் காட்டத் தொடங்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனினும், இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் போது சுவாசப் பிரச்சனைகள், ஏதேனும் வீக்கம் அல்லது அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்பட்டால் இந்த எண்ணெய் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். மேலும் வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு வெந்தய எண்ணெய் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Hair Oil: இவ்ளோ சின்ன வயசுல நரைமுடியா? இந்த ஒரு ஆயில் போதும்!
Image Source: Freepik