How To Make Mint Kulambu In Tamil: இன்று பலரது வீட்டில் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளில் என்ன சமைக்க வேண்டும் என்பதே பெரும் கேள்வியாக எழுகிறது. இதில் சிலர் சிம்பிள் ரெசிபியாக சட்னி செய்வர். அதில் ஒன்றாக பலருக்கும் பிடித்த சுவையான சட்னி ரெசிபியாக புதினா சட்னி உள்ளது. ஆனால், புதினா குழம்பு செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இது மிகவும் சுவையான ரெசிபியாகும். இதை எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்துக் காண்போம்.
புதினா குழம்பு செய்ய தேவையானவை?
மசாலா அரைக்க தேவையான பொருள்கள்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 8 பல்
- மிளகு - 1 ஸ்பூன்
- தக்காளி - 1 (நறுக்கியது)
- வரமல்லி - 1 ஸ்பூன்
- புதினா - 2 கைப்பிடி அளவு
- உப்பு - தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Mint Leaves Benefits: நோயெதிர்ப்பு சக்தி முதல் மன அழுத்தம் வரை! புதினா இலை தரும் அற்புத நன்மைகள்
குழம்பு செய்ய தேவையான பொருள்கள்
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- பூண்டு - 5 பல் (தட்டியது)
- சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
- புளி - நெல்லிக்காய் அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்த புளி)
- குழம்பு மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- புதினா – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- காஷ்மீரி மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

புதினா குழம்பு செய்வது எப்படி?
மசாலா தயாரிக்கும் முறை
- கடாய் ஒன்றில், எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் 8 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பிறகு வரமல்லி, தக்காளி, மிளகு போன்றவற்றைச் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்க வேண்டும்.
- அதன் பின் கடைசியாக புதினா சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
- பின் அடுப்பை அணைத்து, இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pudina Water Benefits: புதினா வாட்டரில் இத்தனை நன்மைகள் இருக்கா? ஆனா இவங்க கட்டாயம் குடிக்கக் கூடாது
குழம்பு செய்யும் முறை
- முதலில் கடாய் ஒன்றில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, சூடாக்கிய பிறகு அதில் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- அதன் பிறகு அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் அரைத்த மசாலா விழுது சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள் போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்கலாம்.
- அதன் பின், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாகும் போகும் வரை வேக வைக்க வேண்டும். இவ்வாறு கலவை கொதித்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் போது உப்பு சரிபார்க்கலாம்.
- அதன் பின், பொடியாக நறுக்கிய புதினாவைச் சேர்த்து இறக்கி விடலாம்.
- இவ்வாறு சூப்பரான மற்றும் அருமையான சுவையில் புதினா குழம்பு தயாராகி விட்டது. இதை சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம். புதினா சட்னியைப் போலவே, புதினா குழம்பையும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவர்.

புதினா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை அனைத்துமே பாக்டீரியாவுக்கு எதிரான குணங்களைக் கொண்டுள்ளது.
இது தவிர, புதினாவில் அதிகளவிலான பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உள்ளது. இவை உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும், மூளை ஆரோக்கியத்திலும் உதவுகிறது.
இது போன்ற ஏராளமான நன்மைகளைத் தரும் புதினாவை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மிகுந்த நன்மை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் புதினா டீ! இப்படி பண்ணுங்க..
Image Source: Freepik