Homemade Kids Drinks: கொளுத்தும் வெயிலில் கூலான ட்ரிங்ஸ்! வீட்டிலேயே குழந்தைகளுக்கு இப்படி செஞ்சி குடுங்க

  • SHARE
  • FOLLOW
Homemade Kids Drinks: கொளுத்தும் வெயிலில் கூலான ட்ரிங்ஸ்! வீட்டிலேயே குழந்தைகளுக்கு இப்படி செஞ்சி குடுங்க

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு அவர்கள் வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இத்துடன், சில ஆரோக்கியமான பானங்களைத் தருவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு கடைகளில் வாங்குவதைத் தவிர்த்து வீட்டிலேயே உள்ள சில பொருள்களைக் கொண்டு எளிய முறையில் தயார் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Care For Children: கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்க!

குழந்தைகளுக்கான வீட்டில் தயார் செய்யப்பட்ட பானங்கள்

குழந்தைக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்க, வீட்டிலேயே ஆரோக்கியமிக்க பானங்களைத் தயார் செய்யலாம். இது அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிப்பதுடன், பாதுகாப்பானதாகவும் அமைகிறது. இதில் வீட்டில் தயார் செய்யப்படும் குழந்தைகளுக்கான சில பானங்களைக் காணலாம்.

கேசர் பாதாம் பால்

இந்த ட்ரிங் தயார் செய்ய, பாதாம், தேன், பால், குங்குமப்பூ போன்றவை தேவைப்படுகிறது. முந்தைய நாள் இரவிலேயே ஒரு கைப்பிடி அளவிலான பாதாம் பருப்பை ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் அவற்றைத் தோலுரித்து, பாலுடன் மென்மையாகும் வரை கலக்க வேண்டும். சுவை மற்றும் நிறத்திற்காக சூடான பாலில் ஊறவைத்த குங்குமப்பூவை ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக் கொள்ளலாம். பின் தேன் சிறிது சேர்த்து குளிரவைத்து பின் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

மஞ்சள் பால்

சில குழந்தைகள் மஞ்சள் பால் அருந்துவதை விரும்ப மாட்டார்கள். எனினும், அவர்களை ஈர்க்கும் வகையில் மஞ்சள் பாலை வித்தியாசமான முறையில் தயார் செய்யலாம். இதற்கு மஞ்சள் தூள், பால், இலவங்கப்பட்டை மற்றும் தேன் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் பாலை சூடாக்கி, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை அளவு இலவங்கப்பட்டையைச் சேர்க்க வேண்டும். பின் இதை நன்கு கிளறி சில நிமிடங்கள் கொதிக்க வைக்கலாம். இதில் சுவைக்காக தேன் சேர்த்துக் கொடுக்கலாம். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைக்கிறது.

தேங்காய் தண்ணீர் ஸ்மூத்தி

இது எளிமையாக தயாரிக்கக் கூடியதாகும். இந்த ஸ்மூத்தி செய்ய இளநீர், அன்னாச்சி துண்டுகள், பழுத்த வாழைப்பழம் மற்றும் புதினா இலைகள் தேவைப்படுகிறது. முதலில் இளநீரில் நறுக்கிய வாழைப்பழம் மற்றும் அன்னாச்சிப்பழத் துண்டுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். இதில் புத்துணர்ச்சிக்காக புதினா இலை சேர்க்கப்படுகிறது. இந்த ஸ்மூத்திகளில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீரேற்றத்தையும் அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Children’s Unhealthy Foods: குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த உணவையெல்லாம் கட் பண்ணனும்

மாம்பழ லஸ்ஸி

கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த பானமாக மாம்பழ லஸ்ஸி அமைகிறது. இது குழந்தைகள் மிகவும் விரும்பி அருந்தும் பானமாகும். இதற்கு பழுத்த மாம்பழம், பால், தயிர் மற்றும் சர்க்கரை போன்றவை தேவை. முதலில் பழுத்த மாம்பழங்களின் தோல் உரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். இதில் தயிர், பால் சேர்த்து மென்மையாகும் வரை கலந்து சுவைக்காக சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இது வைட்டமின்கள், புரோபயாடிக்குகள் நிறைந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாக இருப்பதால், இந்த கோடைக்காலத்தில் குளிர்ச்சியுடன் பரிமாறலாம்.

தர்பூசணி சாறு

இந்த சாறு தர்பூசணி பழம் மட்டுமல்லாமல், புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு போன்றவற்றுடன் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. புதினா இலைகள் மற்றும் எலுமிச்சைச் சாறுடன், தர்பூசணி பழம் சேர்த்து மென்மையாகும் வரை கலக்க வேண்டும். இதில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் சர்க்கரை பாகு போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். புத்துணர்ச்சியூட்டும் இந்த பானத்தை ஐஸ்கட்டி சேர்த்து குளிரவைத்து பின் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

சீரக மோர்

இந்த பானம் தயர் செய்ய, வறுத்த சீரக பொடி, புதினா இலைகள், உப்பு போன்றவை தேவைப்படுகிறது. தயிர் மென்மையாகும் வரை தண்ணீரில் கலக்க வேண்டும். பின் இதில் சீரகப் பொடி, உப்பு, மற்றும் நறுக்கிய புதினா இலைகள் போன்றவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின் இதை குளிர வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதில் மோர் செரிமானத்திற்கு சிறந்ததாகும். மேலும், புதினா மற்றும் சீரகம் போன்றவை புத்துணர்ச்சியூட்டும் தன்மையைக் கொண்டது.

இந்த பதிவும் உதவலாம்: Child Calcium Deficiency: குழந்தைக்கு கால்சியம் சத்து குறைவா இருக்க இது தான் காரணமாம்

நெல்லிக்காய் சாறு

இந்த சாறு தயாரிக்க புதினா இலை, நெல்லிக்காய் சாறு, எலுமிச்சைச் சாறு கருப்பு உப்பு, தண்ணீர், சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சைச் சாற்றை சம பாகங்களாக எடுத்துக் கொண்டு, அதில் புதினா இலைகள், ஒரு சிட்டிகை கருப்பு உப்பு மற்றும் சுவைக்காக சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கலாம். ஆம்லாவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

நாவல்பழச்சாறு

இந்த பானம் தயார் செய்ய நாவல்பழம், தண்ணீர் மற்றும் சர்க்கரை மட்டுமே தேவைப்படுகிறது. முதலில் புதிய நாவல்பழத்தைக் கழுவி விதைகளை நீக்க வேண்டும். பின் இதை வடிகட்ட வேண்டும். இதில் சுவைக்காக சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். இந்த ட்ரிங்ஸில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இவ்வாறு வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட பானங்களைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Weak Children Foods: உங்க குழந்தை பலவீனமா இருக்கா? அப்ப ஸ்ட்ராங்கா இருக்க இந்த உணவெல்லாம் கொடுங்க.

Image Source: Freepik

Read Next

குழந்தைகளை ஏன் வெளியில் விளையாடச் சொல்கிறார்கள் தெரியுமா?

Disclaimer