Healthy And Delicious Ways To Make Idli: பஞ்சி போன்ற, வாயில் வைத்த உடன் கரையக்கூடிய, ஒரு ஆரோக்கிய உணவான இட்லி, தினமும் நம் காலை உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த இட்லியை ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், கொஞ்சம் விதவிதமாக செய்து ருசிக்கலாம். அதை எப்படி செய்வது? அதற்கு என்னென்ன தேவைப்படும்? அதன் நன்மைகள் என்னென்ன? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம்.
பாசி பருப்பு கீரை இட்லி
1 கப் பாசி பருப்பு எடுத்து, 3 மணி நேரம் ஊற வைக்கவும். 3/4 கப் நறுக்கிய கீரை மற்றும் 3 பச்சை மிளகாயை சேர்க்கவும். இதனுடன் 1 டீஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை மிக்ஸியில் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் இதில் இட்லி செய்து சாப்பிடவும்.
வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்த இந்த பாசி பருப்பு கீரை இட்லி, உங்கள் செரிமானத்தை எளிதாக்கும். மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஒரு நல்ல தேர்வாகும்.

சேமியா ரவா இட்லி
குறைந்த தீயில் 1 கப் ரவையை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதையடுத்து சேமியாவை சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன், 1 கப் புளித்த தயிர், 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சுவைக்கு உப்பு, ½ கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
பின்னர் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, 1 டீஸ்பூன் கடுகு, ½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ½ தேக்கரண்டி கடலை பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம், 1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சில கறிவேப்பிலை, இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதில் இட்டிலி சுட்டி சாப்பிடவும்.
இந்த இட்லியில் இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. மேலும் இதில் கொலஸ்ட்ரால் குறைவாக. குறிப்பாக இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இதையும் படிங்க: மரவள்ளி கிழங்கில் இத்தனை ரகசியம் மறைஞ்சியிருக்கா?
ஓட்ஸ் இட்லி
1 கப் ஓட்ஸை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, 1 டீஸ்பூன் கடுகு, சில கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் கடலை பருப்பு, 1 டீஸ்பூன் சீரகம், 1 பச்சை மிளகாய் மற்றும் ½ டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து வதக்கவும். இப்போது 1 கப் ரவை சேர்த்து வாசனை வரும் வரை குறைந்த தீயில் வறுக்கவும்.
இதனுடன் பொடித்து வைத்திருக்கும் ஓட்ஸை சேர்த்துக்கொள்ளவும். பின் 1 கப் தயிர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். இதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும். பின்னர் இதில் இட்லி செய்து சாப்பிடவும்.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஓட்ஸ் இட்லி, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
ராகி இட்லி

1 கப் ரவையை 2-3 நிமிடம் மிதமான தீயில் வறுத்து, குளிர விடவும். இதனுடன் 1 கப் ராகி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், ½ டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 கப் புளித்த தயிர் சேர்த்து 30-35 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும். பின்னர் இதில் இட்லி செய்து சாப்பிடவும்.
பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தினை இட்லி
1 கப் தினை அரிசியை நன்கு கழுவி, அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் 1½ கப் உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற விடவும். இதனை இரவு முழுவதும் அப்படியே விடவும்.
முதலில் உளுந்து மற்றும் வெந்தையத்தை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் தினை அரிசியை தனியாக நன்கு அரைத்துக்கொள்ளவும். இந்த இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளவும். குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் இதை அப்படியே விடவும். பின்னர் இதில் இட்லி செய்து சாப்பிடவும்.
இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை, இதில் நிறைந்துள்ளது. குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது.