What Is Flesh Eating Bacteria And Its Symptoms: கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகளவில் அதன் தாக்கம் பெருமளவு என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் பரவிய இந்த வைரஸின் உருமாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தும் குறைந்தும் வந்தது. ஆனால், தற்போது புதிய வகை அரிதான பாக்டீரியா ஒன்று ஜப்பானில் பரவி வருவதாகவும், இது இரண்டே நாள்களில் மரணத்தை ஏற்படுத்தலாம் என்ற தகவல்கள் வைரலாகி மக்களிடையே பீதியைக் கிளப்புகின்றனர்.
ஆம். தற்போது அரிதான மனித சதை உண்ணும் பாக்டீரியா தொற்று நிகழ்வுகள் ஜப்பானில் அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் அதாவது Streptococcal Toxic Shock Syndrome (STSS) என்று அழைக்கப்படுகிறது. இந்த சின்ட்ரோம் குழு A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு கடுமையான நோயாகும். இந்த பயங்கரமான நோய் தொற்று ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் உயிரைக் கொல்லும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Adah Sharma Endometriosis: பிரபல நடிகைக்கு வந்த அரிய வகை நோய்! நோய்க்கான அறிகுறிகளும், சவால்களும்!
உலகளவில் அச்சுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தல் உலகளவில் இருந்த நிலையில் தற்போது ஜப்பான் முழுவதும் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய தொற்றுக்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. . இந்த சதை உண்ணும் பாக்டீரியா ஆனது திசு அழிவு மற்றும் விரைவான உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஜப்பானில் காணப்படும் இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக உலக மருத்துவ சமூகங்களுக்குள் எச்சரிக்கையாக அமைகிறது.
தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (National Institute of Infectious Diseases) இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதிக்குள் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் அதிகரித்து 977 வழக்குகளை எட்டியுள்ளதாகவும், இது ஏற்கனவே கடந்த ஆண்டு மொத்தமான வழக்குகளை (941 வழக்குகள்) விட அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
STSS அறிகுறிகள் (Flesh Eating Bacteria Symptoms)
குழந்தைகளில் இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாக வீக்கம் மற்றும் தொண்டை புண் ஏற்படலாம். இது தொண்டை அழற்சி (Strep Throat) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், கை மற்றும் கால்களில் வலி, குறைந்த இரத்த அழுத்தம், சூடான மற்றும் சிவப்பு தோல், தோலில் வீக்கத்துடன் சிவத்தல் போன்றவை ஏற்படலாம். இதன் பிந்தைய நிலைகளின் அறிகுறிகளாக தோல் நிறத்தில் மாற்றம், தோலில் கொப்புளங்கள் உருவாகுதல், நோய்த்தொற்றுக்கு உள்ளாகுதல், பலவீனம், குமட்டல், சுவாசிப்பதில் சிரமம், திசுக்களின் இறப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
மேலும் இந்த தொற்று மிக வேகமாக பரவக்கூடிய தொற்றுநோய் ஆகும். இது பாதங்களிலிருந்து முழங்கால் வரை பரவுவதற்கு சில மணிநேரங்கள் எடுக்கும். சரியான சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் மரணத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படலாம். அதன் படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோமால் அதிகம் பாதிப்படைகின்றனர். இந்த தொற்று ஒரு நபருக்கு அதிக நேரம் கொடுக்காது. எனவே, இதன் அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரைத் தொடர்பு கொள்வது மிக முக்கியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: After Bath Mistakes: குளித்த உடனே இதை செய்தால் பெரிய பெரிய பாதிப்புகள் வரும்.. ரெடியா இருங்க!
எப்படி பாதுகாத்துக் கொள்வது?
இந்த STSS சின்ட்ரோம் ஆனது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். எனவே, இந்த நோயைத் தடுக்க, சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
- வெளியில் சென்று வந்த பிறகு, குறைந்த 2 நிமிடங்களுக்கு கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
- அழுக்குக் கைகளால் கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றைத் தொடுதலைத் தவிர்க்க வேண்டும்.
- உணவு தயாரிப்பதற்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளைக் கழுவுவது அவசியமாகும்.
- தோலில் ஏதேனும் காயம் இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
- அதே போல, மேற்கூரிய STSS அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த வகை அச்சுறுத்தல்களை முடிந்த வரை தவிர்க்கவும், எந்தவித நோய்த்தொற்றுக்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள வேண்டியது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Bird Flu: பரவி வரும் பறவைக் காய்ச்சலுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
Image Source: Freepik