காலையில் எழுந்ததும் முதலில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் காலை உணவு தான் அன்றைய நாளை ஆக்கப்பூர்வமானதாக மாற்றுகிறது. அதேபோல் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நாள் முழுவதும் மனநிலையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதோடு, சரியான நேரத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் அதை உண்ணும் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சில உணவுகளை வெறும் வயிற்றில் மட்டும் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். பழங்கள் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
பழங்கள் உடலுக்கு பல வகையான வைட்டமின்களை வழங்குகின்றன. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சில பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்திராத உண்மை. அப்படிப்பட்ட ஏழு பழங்களின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்…
பப்பாளி:
பப்பாளியில் பப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. இந்த நொதிகள் செரிமானத்தை மேம்படுத்துவதிலும், மலச்சிக்கலைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
இதனை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி, ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்கிறது. ஏனெனில் பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்துள்ளது.
தர்பூசணி:

தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் வரை நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்யும் சிறந்த பழமாக கருதப்படுகிறது. தர்பூசணியில் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் உள்ளது.
புளுபெர்ரி:

காலையில் எழுந்ததும் இனிப்பான பழங்களை சாப்பிட விரும்பினால், நீங்கள் ப்ளூபெர்ரியை தேர்வு செய்யலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் மன வலிமையும், உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
வாழை:

காலையில் வாழைப்பழத்தை முதலில் சாப்பிடுவது உடலுக்கு சக்தியைத் தரும். இதில் கார்போஹைட்ரேட் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
அன்னாசி:

அன்னாசிப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலால் நன்கு உறிஞ்சப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எலும்புகளை பலப்படுத்துகிறது.
ஆப்பிள்:
“தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டர் பக்கத்துல கூட போகத் தேவையில்லை” என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மையானது. குறிப்பாக வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆப்பிளில் பெக்டின் அதிகம் உள்ளது. இது ஒரு வகை நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் க்வெர்செடின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களும் ஆப்பிளில் நிறைந்துள்ளன.
கிவி:

கிவியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும். இந்த பழம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க மிகவும் நல்லது. இதில் ஆக்டினிடின் என்ற நொதியும் உள்ளது, இது சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
Image Source: Freepik