Cook With Comali Season 5 Irfan Recipe: விஜய் டிவியில் இன்று பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் புது புது ரெசிபிகளைச் செய்து வருகின்றனர். இதை மக்களும் தங்கள் வீடுகளில் செய்து பார்த்து அந்த ரெசிபியின் சுவையை அனுபவிக்க தவறுவதில்லை.
அவ்வாறே, குக் வித் கோமாளி இர்பான் அசத்தலான ரெசிபி ஒன்றை செய்தார். இதை வீட்டிலேயே நாமும் தயார் செய்யலாம். அப்படி என்ன சுவையான சிம்பிளான ரெசிபி என்று கேட்கிறீர்களா? அது தான் சுண்டல் மசாலா வடை ரெசிபி. இதை எளிதாக வீட்டிலேயே தயார் செய்ய தேவையானபொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறையையும் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Chia Seeds: மேங்கோ ஜூஸ் உடன் இந்த ஒரு விதையை சேர்த்து குடிங்க. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!
சுண்டல் மசாலா வடை ரெசிபி தயார் செய்யும் முறை
முதலில் சுண்டல் மசாலா எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
சுண்டல் மசாலா செய்ய தேவையானவை
- புதிய பச்சை பட்டாணி - 100 கிராம் (1 மணி நேரம் ஊறவைக்கவும்)
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- தக்காளி - 1 (நறுக்கியது)
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 7 பற்கள்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
- ஆம்சூர் பவுடர் (உலர்ந்த மாம்பழ தூள் அல்லது மாங்காய் பொடி) - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

சுண்டல் மசாலா செய்யும் முறை
- முதலில் குக்கர் ஒன்றில் தண்ணீர் ஊற்றி, அதில் ஏதாவதொரு சிறிய பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் 1 மணி நேரம் ஊறவைத்த புதிய பச்சை பட்டாணியை அந்த பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். பட்டாணி சேர்த்த பிறகு 2 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- பிறகு இதில் 1/4 டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரை மூடி, அடுப்பில் வைக்க வேண்டும்.
- இது 4 விசில் அடங்கும் வரை வைத்து பின் அடுப்பை அணைக்கலாம்.
- மிக்ஸி ஜார் ஒன்றில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு போன்றவற்றை மேலே கூறப்பட்ட அளவில் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
- பின் வாணலி ஒன்றில், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு, அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்க்கவும்.
- இதை பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கி, பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின் இதில் சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், சீரகத் தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- இதில் பச்சை பட்டாணி ஊற வைத்த தண்ணீர் சிறிது சேர்த்து, மசாலாவை 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
- அதன் பிறகு, ஊறவைத்த தண்ணீருடன் பச்சை பட்டாணியை சேர்த்து வாணலியில் 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
- பின் இதில் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்தால் சுண்டல் மசாலா தயாரானது.
இந்த பதிவும் உதவலாம்: Raw Mango Pickle: மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் பச்சை மாங்காய் ஊறுகாய் ரெசிபி!
வடை செய்யத் தேவையானவை
- கடலை பருப்பு - 1/2 கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்)
- கொத்தமல்லி இலை - சில இலைகள்
- பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிதளவு
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 5 பற்கள்
- பெரிய வெங்காயம் - (1 நன்றாக நறுக்கியது)
- பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு

வடை செய்வது எப்படி
- முதலில் 1/2 கப் அளவிலான கடலை பருப்பை 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
- பின் இதை வடிகட்டி, பருப்பை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
- மேலும் இதில் கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போன்றவற்றை மேலே கூறிய அளவில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதை தனியாக பாத்திரம் ஒன்றில் மாற்றி, அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பெருஞ்சீரகம் போன்றவற்றை சேர்த்து வடை போன்று தட்டி வைத்துக் கொள்ளவும்.
- பிறகு கடாய் ஒன்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.
- எண்ணெய் சூடானதும், தட்டிய வடை மாவை சேர்த்து வேக வைத்து வடையைத் தயார் செய்யலாம்.
சுண்டல் மசாலா வடை செய்யும் முறை
- சுண்டல் மசாலா வடை தயார் செய்ய தட்டு ஒன்றில் சுண்டல் மசாலாவை சேர்த்து அதில் வடையை சிறிது சிறிதாக வடையைப் பிரித்துச் சேர்க்க வேண்டும்.
- வடையில் மசாலா சேருமாறு கலந்து, அதில் விரும்பினால் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சுவைக்கலாம்.
இவ்வாறு வீட்டில் எளிதான முறையில் இர்ஃபானின் சுவையான சுண்டல் மசாலா வடையைத் தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: CWC Sujitha Recipe: சுஜிதா செய்த முட்டை ஆப்பம் ஆட்டு கால் பாயா ரெசிபி.!
Image Source: Freepik