How does asthma affect your sleep in tamil: ஒவ்வொருவருக்கும் தூக்கம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இந்த காலத்தில் நல்ல இரவு தூக்கத்தைப் பெற பலரும் போராடுகின்றனர். ஏனெனில், இரவில் நல்ல தூக்கம் பெறாததன் காரணமாக, அது நமது முழுநாள் வேலையையும் பாதிக்கக் கூடும். எனவே, ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் 7 முதல் 8 மணி நேரம் போதுமான தூக்கம் பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் ஆஸ்துமா நோயாளிகள் தூக்க பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். உண்மையில், ஆஸ்துமாவின் அதிகபட்ச விளைவானது இரவில் ஏற்படுகிறது. இதுவே தூக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, இரவு தூக்கத்தைப் பாதிக்கக்கூடிய ஆஸ்துமா தூண்டுதல்களைப் புரிந்துகொள்வதுடன், இரவில் ஏற்படும் அதன் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதும் முக்கியமாகும். இதன் மூலம் நாம் நன்றாக தூங்க முடியும். இந்த சூழ்நிலையில் குருகிராம் நாராயணா மருத்துவமனையின் மூத்த நுரையீரல் ஆலோசகர் டாக்டர் பியூஷ் கோயல் அவர்கள், ஆஸ்துமாவிற்கும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு குறித்தும், ஆஸ்துமாவுடன் தூக்கத்தின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Asthma prevention tips: இந்த குளிர்ந்த காலநிலையில் ஆஸ்துமா தாக்குதலை எப்படி தடுப்பது?
உலக ஆஸ்துமா தினம் 2025 (World Asthma Day 2025)
உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இது போன்று ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை மற்றும் ஆஸ்துமா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் மே மாதம் 6 ஆம் நாள் உலக ஆஸ்துமா தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1998 ஆம் ஆண்டு குளோபல் இனிஷியேட்டிவ் ஃபார் ஆஸ்துமா (GINA) என்ற அமைப்பால் இந்த தினம் தொடங்கப்பட்டது. இது முதன்முதலில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இருந்தே ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் ஒரு சிறந்த கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் இந்த தினத்தின் முக்கியத்துவமாக, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள் என அனைவரும் இந்நோய் குறித்த காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறை மற்றும் தடுக்கும் முறை போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு ஆஸ்துமாவால் தூக்க ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவர் தரும் குறிப்புகளைக் காணலாம்.
ஆஸ்துமா தூக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது?
ஆஸ்துமா என்பது நுரையீரலில் வீக்கம் மற்றும் காற்றுப்பாதைகள் குறுகுவதால் ஏற்படும் ஒரு நாள்பட்ட சுவாசப் பிரச்சனையைக் குறிக்கிறது. இது உடல் ரீதியான பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தூக்கத்தின் தரத்தை பாதிப்பதுடன், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது.
இரவில் ஆஸ்துமா அறிகுறிகள்
பொதுவாக, பகலை விட இரவிலேயே ஆஸ்துமா அறிகுறிகள் அதிகமாக இருக்கும். இது ஒரு நபர் படுக்கும்போது, அவரின் காற்றுப்பாதைகள் அதிகமாக வீங்கி, சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாகவே இரவில் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்ற பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகிறது. இது தூக்கத்தைப் பாதிப்பதாக அமைகிறது.
தூக்கத்தின் தரம் குறைவது
தூக்கமின்மை உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே தான் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பதட்டம், எரிச்சல் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். மேலும், தூக்கமின்மை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதுடன், ஆஸ்துமா அறிகுறிகளை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.
அடிக்கடி எழுந்திருப்பது
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரவில் தூக்கம் மீண்டும் மீண்டும் தடைபடலாம். இது உண்மையில் சுவாசிப்பதில் சிரமம் இருக்கும்போது ஏற்படக்கூடியதாகும். இதனால் அந்த நபரால் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது. இவ்வாறு மீண்டும் மீண்டும் விழித்தெழுவதன் காரணமாக உடல் முழுமையான ஓய்வு பெற முடியாமல், சோர்வை அடையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Asthma: ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியுமா? மருத்துவரின் விளக்கம் இங்கே..
ஆஸ்துமா உள்ளவர்கள் நல்ல தூக்கம் பெற செய்ய வேண்டியவை
முறையான சிகிச்சை
ஆஸ்துமாவுக்கு சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம். எனவே ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் நீண்ட நேரம் செயல்படும் மருந்துகள் மற்றும் சரியான நேரத்தில் இன்ஹேலர்கள் எடுத்துக் கொள்வது போன்றவை ஆஸ்துமா அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இரவில் ஏற்படும் சுவாசப் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
மாசுபாடு மற்றும் ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பு
அறையில் உள்ள தூசி, மாசுபாடு மற்றும் கொசுக்கள் போன்றவை ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கலாம். எனவே அறையை சுத்தமாக வைத்திருப்பது, ஜன்னல்களை மூடி வைப்பது மற்றும் காற்று சுத்திகரிப்பான் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் ஆஸ்துமா அறிகுறிகளை மேம்படுத்தலாம். மேலும் இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன.
சரியான நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்வது
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம். மருத்துவர் இரவில் மருந்துகளை பரிந்துரைத்தால், அந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. இது இரவு நேரங்களில் ஏற்படும் சுவாசப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
சரியான வழியில் தூங்குவது
சிலர் தலையை உயர்த்தி தூங்கும்போது, சுவாசிப்பதை எளிதாக்குகிறது. எனவே தலையை உயர்த்தி தூங்க தலையணையுடன் தூங்குவது அல்லது படுக்கையின் உயரத்தை உயர்த்துவது போன்ற செயல்கள் நுரையீரலில் அழுத்தத்தைக் குறைக்கவும், மூச்சுத்திணறலைக் குறைக்கவும் உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைப்பது
பதட்டம், மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமா அறிகுறிகளை அதிகரிக்கலாம். எனவே இவற்றைக் குறைக்க படுக்கைக்கு முன் தியானம், லேசான யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைப்பதுடன், நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
முடிவு
எனவே ஆஸ்துமா உள்ளவர்கள் தூக்கத்தின் தரத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். நல்ல சுத்தமான சூழல், முறையான சிகிச்சை மற்றும் ஆரோக்கியமான தூக்கப் பழக்கம் போன்றவை ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உலக ஆஸ்துமா தினத்தை நாம் ஏன் கொண்டாடுகிறோம்.? வரலாறு.. முக்கியத்துவம்.. தீம்..
Image Source: Freepik