How does diabetes affect oral health: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, நீரிழிவு நோய் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்றாக அமைகிறது. நீரிழிவு நோய் உடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் பல முக்கிய உறுப்புகளிலும் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும்.
நீரிழிவு நோய் கண்கள், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வாய்வழி ஆரோக்கியத்திலும் நேரடி விளைவை ஏற்படுத்தக்கூடும். ஆனால், பலருக்கும் இது குறித்த விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை. உண்மையில் நீரிழிவு நோயால் வாய் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும். இது குறித்து குருகிராமில் உள்ள நாராயணா மருத்துவமனையின் உட்சுரப்பியல் மற்றும் நீரிழிவு மூத்த ஆலோசகர் டாக்டர் அபய் அலுவாலியா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.
வாய்வழி ஆரோக்கியத்தில் நீரிழிவு நோயின் தாக்கம்
மருத்துவர் அபய் அலுவாலியாவின் கூற்றுப்படி, நீரிழிவு என்பது உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கக்கூடிய ஒரு உடல்நலப் பிரச்சினையைக் குறிக்கிறது. இது கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை அதிகரிப்பதுடன், வாய் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். நீரிழிவு காரணமாக வாய் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Teeth Gums: ஆரோக்கியமான பற்கள், ஈறுகளுக்கு இந்த 5 தவறுகளை செய்யவேக் கூடாது!
வறண்ட வாய்
நீரிழிவு நோய் காரணமாக உமிழ்நீர் சுரப்பிகள் சரியாக செயல்படாது. இவை உமிழ்நீர் உற்பத்தியைக் குறைத்து வாய் வறட்சியை ஏற்படுத்துகிறது. பொதுவாக, உமிழ்நீர் வாயை சுத்தம் செய்யவும், பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே, குறைந்த உமிழ்நீர் சுரப்பு காரணமாக பாக்டீரியாக்கள் வேகமாக வளரத் தொடங்குகிறது. இவை துர்நாற்றம், துவாரங்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், தொடர்ந்து வறண்ட வாய் பிரச்சனையால் உணவை மெல்லுவது, விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
பூஞ்சை தொற்று
நீரிழிவு நோய் காரணமாக, அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவு, வாயின் உள்ளே ஈஸ்ட் பூஞ்சை (கேண்டிடா) வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சையானது கேண்டிடியாஸிஸ் அல்லது த்ரஷ் எனப்படும் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. பொதுவாக இது நாக்கு, கன்னங்கள் மற்றும் அண்ணத்திற்குள் ஒரு வெள்ளைப் புள்ளி அல்லது அடுக்காகத் தோன்றக்கூடும்.
இந்த பிரச்சனையில் வாயில் எரியும் உணர்வு, சுவையில் மாற்றம் மற்றும் சில நேரங்களில் லேசான வலியை உணரலாம். இது பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், இந்த பிரச்சனைக்கு நீரிழிவு நோய் ஒரு முக்கிய காரணமாகும்.
பற்களில் துவாரங்கள் ஏற்படுவது
நீரிழிவு நோயில், இரத்த சர்க்கரை அதிகரிப்பினால், அது வாயில் இருக்கும் சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். பொதுவாக சர்க்கரை, பாக்டீரியாக்களின் உணவாகக் கருதப்படுகிறது. இதனால் இவை சுறுசுறுப்பாகி வாயில் அமிலத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த அமிலமானது நோயாளியின் பற்களின் மேல் அடுக்கை சேதப்படுத்துகிறது. இது பல் துவாரங்கள் அல்லது பல் சிதைவுக்கு வழிவகுக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது வலி மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: பல் கூச்சம் உடனடியா நீங்க.. இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க..
ஈறு நோய்
நீரிழிவு நோய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இது உடலில் தொற்றுகளை எதிர்த்துப் போராட முடியாத போது, ஈறுகள் வீக்கம், சிவத்தல், இரத்தப்போக்கு மற்றும் வலி போன்றவை ஏற்படுகிறது. இது பீரியண்டால் நோய் எனப்படுகிறது. இது சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பற்களின் வேர்களுக்கு பரவக்கூடும்.
மேலும், ஈறுகள் பற்களை இடத்தில் வைத்திருக்கிறது. இவை பலவீனமடைவதால் பற்களும் தளரத் தொடங்கலாம் அல்லது பற்கள் விழக்கூடும். இந்நிலை வலியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உணவை மெல்லுதல் மற்றும் பேசுதல் போன்ற அன்றாட செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
நீரிழிவு நோயில் எந்த வாய்வழி பிரச்சனைகளை புறக்கணிக்கக்கூடாது?
நீரிழிவு நோயாளிகள் வாய்வழி சுகாதாரம் தொடர்பான சில ஆரம்ப பிரச்சினைகளை லேசாக எடுத்துக்கொள்ளவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது. இந்த அறிகுறிகளில் ஒன்றாக, அடிக்கடி ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும். இது தவிர, வாயில் தொடர்ந்து வறட்சி, வாய் துர்நாற்றம், பற்கள் தளர்வு, எரியும் உணர்வு அல்லது வாயில் கொப்புளங்கள் போன்றவை ஏற்படக்கூடும்.
இந்த அறிகுறிகள் அனைத்துமே வாய்வழி ஆரோக்கியத்தில் ஏற்படும் தொந்தரவுகளைக் குறிக்கிறது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த அறிகுறிகளைக் கண்டால், அவற்றைப் புறக்கணிக்காமல் உடனடியாக பல் மருத்துவரை நாடுவது நல்லது.
முடிவுரை
நீரிழிவு நோயாளியின் உடலின் முக்கிய பாகங்களை மட்டுமல்லாமல், வாயின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனிப்பதுடன், வாய்வழி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் வாய் தொடர்பான ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த இரண்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik