Fasting Benefits: பலர் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் விரதம் இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டில், விரதம் ஒரு துவக்கமாக அனுசரிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஆன்மீக நன்மை மட்டுமல்ல, அடிப்படை ஆரோக்கிய நன்மைகளும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பலரும் வாரத்தில் ஒருநாள் (குறிப்பிட்ட கிழமை), மாதத்தில் ஒரு நாள் (அமாவாசை, பௌர்ணமி போன்ற நாள்), வருடத்தில் ஒரு மாதம் என விரத முறைகளை (புரட்டாசி, விரதம் இருந்து மாலை அணிவது) போன்று இருப்பார்கள். இதன் மூலம் ஆன்மீக நன்மைகள் கிடைப்பதோடு உடலுக்கும் ஏணைய நன்மைகள் கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் கடைபிடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
உணவுக் கட்டுப்பாட்டு விரதம் நம் உடலை சமநிலைப்படுத்த உதவுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்தில் ஒரு நாள் விரதம் இருந்தால் பல நோய்கள் விலகும். விரதத்தின் நன்மைகளை முழுமையாக அறிந்துக் கொள்வோம்.
எடை கட்டுப்பாடு
உடல் எடை குறைக்க வொர்க் அவுட்கள் உட்பட பலவிதமான டயட் முறைகளை மேற்கொள்கிறார்கள். வாரம் ஒருமுறை விரதம் இருந்தால் விரைவில் உடல் எடை குறையும் என்கின்றனர் நிபுணர்கள். உண்ணாவிரதம் நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது என்று சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்க கலோரிகளை கட்டுப்படுத்துவதை விட உண்ணாவிரதம் சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியம்
இதயப் பிரச்சனைகள் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும். வாரம் ஒருமுறை விரதம் இருந்தால் இதயக் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதம் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உண்ணாவிரதம் ட்ரைகிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
செரிமான அமைப்பு மேம்படும்

தினமும் உணவு சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் தொடர்ந்து வேலை செய்யும். உண்ணாவிரதம் செரிமான அமைப்புக்கு ஒரு குறுகிய இடைவெளியை அளிக்கிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாரத்தில் ஒரு நாள் விரதம் இருந்தால், செரிமான அமைப்பு பிரச்சனைகள் நீங்கும். உண்ணாவிரதம் உடல் தன்னைத்தானே சரிசெய்ய அனுமதிக்கிறது.
உடல் வீக்கம் குறையும்
நாள்பட்ட வீக்கம் நம் ஆரோக்கியத்தை கடுமையாக சேதப்படுத்தும். வீக்கம் இதய பிரச்சனைகள், புற்றுநோய் மற்றும் முடக்கு வாதம் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உண்ணாவிரதம் வீக்கத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் கழிவுகள் நீங்கும்
நம் உடலில் நச்சுப் பொருட்களும் கழிவுப் பொருட்களும் சேரும். இவற்றை உடலில் இருந்து அகற்றுவது மிகவும் அவசியம். வாரம் ஒருமுறை விரதம் இருந்தால், நம் உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறும். இது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.
சர்க்கரை நோய் அபாயம் குறையும்
வாரத்திற்கு ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது குளுக்கோஸ் எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உண்ணாவிரதம் இரத்த சர்க்கரையை 3-6 சதவீதம் குறைக்கிறது. உண்ணாவிரதம் இன்சுலின் அளவை 20-31 சதவீதம் குறைக்கிறது, இது வகை 2 நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.
முதுமை எதிர்ப்பு பண்புகள்
வாரம் ஒருமுறை விரதம் இருந்தால் முதுமை வேகம் குறைந்து ஆயுட்காலம் கூடும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட ஆய்வில், எலிகளுக்கு உண்ணாவிரத முறை வழங்கப்பட்டுள்ளது, அவை மற்ற எலிகளை விட 83 சதவீதம் நீண்ட காலம் வாழ்கின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியம்
- சிலர் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் முக்கிய உறுப்புகளுக்கு ஆபத்து அதிகம்.
- உண்ணாவிரதத்திற்கு அடுத்த நாள், அவர்கள் முந்தைய நாள் சாப்பிடாததை விட அதிகமாக சாப்பிடுகிறார்கள். இப்படி செய்வது நல்லதல்ல.
உண்ணாவிரதம் இருப்பது இதுபோன்ற பல நன்மைகளை வழங்கும் என்றாலும் உங்கள் உடலின் தன்மையை அறிந்து முறையான வழிகாட்டுகளை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். உங்கள் உடலின் தன்மைகளை முறையாக அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். விரதம் இருப்பது நல்லது என்றாலும் உங்கள் உடல் ஏதேனும் தீவிரத்தில் இருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik