'Silent Killer' என்று அழைக்கப்படும் ‘Hypertension’, இந்தியாவில் ஏற்படும் பாதி உயிரிழப்புகளின் முக்கிய காரணமாக உள்ளது. அறிகுறிகளே இல்லாமல் திடீரென பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிர்கொல்லும் நோய்களை ஏற்படுத்தும். இன்றைய போட்டிகள் நிறைந்த வாழ்க்கை முறையில், இளம் வயதினர்களையும் இது விட்டு வைப்பதில்லை.
ஹைப்பர் டென்ஷன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உலக உயர் இரத்த அழுத்தம் தினம் (World Hypertension Day) ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, ஹைப்பர் டென்ஷன் என்றால் என்ன? ஹைப்பர் டென்ஷனின் அறிகுறிகள் என்ன? ஹைப்பர் டென்ஷன் எதனால் ஏற்படுகிறது? ஹைப்பர் டென்ஷன் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஹைப்பர் டென்ஷனுக்கு என்ன சிகிச்சை? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம்.

ஹைப்பர் டென்ஷன் என்றால் என்ன? (What Is Hypertension)
இதய துடிப்பின் போது, இரத்த குழாயில் இருந்து பாயும் இரத்தத்தின் அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஹைப்பர் டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) என்று அழைக்கப்படும். இரத்த அழுத்தம் அளவுகள் 130/90 mmHg விட அதிகம் இருந்தால், அது உயர் இரத்த அழுத்தம் (Hypertension) என்று கூறப்படுகிறது.
ஹைப்பர் டென்ஷனின் அறிகுறிகள் என்ன? (Hypertension Symptoms)
ஹைப்பர் டென்ஷன், அதாவது உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்று இங்கே காண்போம்.
- ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
- குழப்பம்
- கடுமையான தலைவலி
- மார்பு வலி
- கழுத்து மற்றும் காதுகளில் வியர்வை
- சோர்வு
- சுவாசிப்பதில் சிக்கல்
- படபடப்பு
- மூக்கில் இரத்தம் வடிதல்
- பார்வை பிரச்னை
ஹைப்பர் டென்ஷன் எதனால் ஏற்படுகிறது? (What causes hypertension?)
இதய துடிப்பின் போது, இரத்த குழாயில் இருந்து பாயும் இரத்தம், அதிக அழுத்தத்துடன் பாயும் போது, ஹைப்பர் டென்ஷன் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று காண்போம்.
- அதிக உப்பு மற்றும் சர்க்கரை நுகர்வு, ஹைப்பர் டென்ஷன் ஏற்பட காரணமாக திகழ்கிறது.
- புகைப்பிடித்தல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
- வயது மூப்பு காரணமாக இரத்த குழாயில் சுருக்கம் ஏற்படும். இதனால் இரத்த அழுத்தம் ஏற்படும்.
- மரவு வழி இரத்த அழுத்தம்.
- பிறப்பிலேயே இரத்த குழாய் சுருங்கி இருந்தால், இரத்தம் பாய்வதில் அழுத்தம் ஏற்படும்.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ஹைப்பர் டென்ஷன் ஏற்படும்.
- உடலுக்கு அதிக செயல்பாடு கொடுக்காமல் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
ஹைப்பர் டென்ஷனை கண்டறிவது எப்படி?
பொதுவாக உயர் இரத்த அழுத்தம், உடலில் அறிகுறிகளை காட்டாது. இதனால் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும். தங்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருக்கிறதா என்பதை கண்டறிய அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும்போது, அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்ய வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த பரிசோதனை செய்ய வேண்டும்.
ஹைப்பர் டென்ஷனுக்கு என்ன சிகிச்சை? (Hypertension Treatments)
உங்கள் இரத்த அழுத்தம் தொடர்ந்து 140/90mmHg-க்கு மேல் இருந்தால் மற்றும் நீங்கள் 80 வயதுக்குட்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுவீர்கள்.
உங்கள் இரத்த அழுத்தம் தொடர்ந்து 140/90mmHg-க்கு மேல் இருந்தால் மற்றும் பிற பிரச்னைகளின் ஆபத்து அதிகமாக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களுடன் கூடுதலாக, உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உங்களுக்கு மருந்து வழங்கப்படும்.
உங்கள் இரத்த அழுத்தம் தொடர்ந்து 160/100mmHg க்கு மேல் இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களுடன் கூடுதலாக, உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உங்களுக்கு மருந்து வழங்கப்படும்.
எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும், இருப்பினும் சிலர் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைமுறையில் நீங்கள் செய்யக்கூடிய மாற்றங்களைப் பற்றி உங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு ஆலோசனை கூறலாம்.
Image Source: Freepik