$
Side Effects Of Sleeping Too Much: ஒருவரது அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தூங்குவதிலும் சில விதிமுறைகள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இரவில் சீக்கிரம் தூங்குவதும், அதிகாலை விரைவாக எழுவதும் நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. ஆனால், சிலரது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியானது மிகவும் தொந்தரவைத் தரக்கூடியதாக அமைகிறது. ஒன்று அவர்கள் நீண்ட நேரம் தூங்குவர். மற்றொன்று, அவர்கள் குறைவான நேரம் தூங்குவர். உண்மையில், இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியதாக அமைகிறது.
இது போன்ற தூக்க சுழற்சி முறைகள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இவை நம்முடைய ஆளுமை மற்றும் செயல்திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதிக தூக்கம், தூங்காமல் இருப்பது போன்றவை சோம்பல், தலைவலி மற்றும் வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளைப் பாதிக்கலாம். இதில் வெகுநேரம் தூங்குவதால் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைப் பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்
அதிக தூக்கம் உடல் எடையை அதிகரிக்குமா?
ஒருவர் சரியான தூக்கநேரத்தை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்கும் போது, அவர்கள் உடல் எடையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் பாதிப்பு ஏற்படும் விதமாக அதிக உடல் எடைக்கு வழிவகுக்கலாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஒவ்வொரு இரவும் ஒன்பது அல்லது 10 மணிநேரம் தூங்குபவர்கள், ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குபவர்களைக் காட்டிலும் ஆறு வருட காலத்தில் உடல் பருமன் அதிகமாவதற்கான வாய்ப்பு 21% அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேர தூக்கத்தால் நீரிழிவு நோய் ஏற்படுமா?
அதிக நேரம் தூங்குவது உடல் பருமன் அதிகரிப்பைத் தொடர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதன் மற்றொரு விளைவாக உடல் இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கிறது. இது இரத்த சர்க்கரை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. அதன் படி, ஒருவர் அதிக நேரம் தூங்குவது கடுமையான நீரிழிவு நோயின் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
அதிக தூக்கத்தால் உடல் வலி?
ஒருவர் அதிக நேரம் தூங்குவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை நீண்ட நேரம் தூங்கும் போது கட்டாயம் ஏற்படக்கூடியதாக அமைகிறது. இது தவிர கைகள் மற்றும் கால்களை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்து தூங்கும் போது அதிலும் வலி ஏற்படுவது பொதுவானது. மேலும் இன்னும் சிலருக்கு அதிக நேரம் தூங்குவது தலைவலியை உண்டாக்கலாம். இதற்கு முக்கிய காரணமாக அமைவது செரோடோனின் உட்பட மூளையில் உள்ள சில நரம்பியக்கடத்திகளில் தூக்கத்தின் விளைவுகளே ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Sleeping Disorder: தூக்கக் கோளாறுகளின் வகைகள், காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
வெகு நேர தூக்கம் இதய பாதிப்பை ஏற்படுத்துமா?
நல்ல தூக்க சுழற்சிக்கு மாறாக ஒருவர் அதிக நேரம் தூங்குவது இதய ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சுமார் 72,000 பெண்களை ஆய்வு செய்த செவிலியர் ஆய்வின் கூற்றுப்படி, எட்டு மணி நேரம் தூங்கும் பெண்களை விட ஒரு இரவில் ஒன்பது முதல் 11 மணி நேரம் தூங்கும் பெண்களுக்கு இதய பாதிப்பான கரோனரி இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 38% அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக தூக்கம் மன ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?
தூக்கமின்மை காரணமாக அதிக மன அழுத்தம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதே சமயம், அதிக நேரம் தூங்குவதும் மன அழுத்தத்துடன் தொடர்புடையதாகும். அதாவது மனச்சோர்வு இருப்பவர்கள் 15% பேர் அதிகமாகத் தூங்குவர். இது அவர்களின் மனச்சோர்வை மேலும் மோசமாக்கலாம். இதனால், பதட்டம் மற்றும் மன அழுத்தம் அதிகளவு ஏற்பட்டு அன்றாட செயல்முறைகளைப் பாதிக்கலாம்.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
பொதுவாக தூக்கத்தின் தேவைகள் நபருக்கு நபர் மாறுபடலாம். எனினும், பெரியவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஒரு இரவு சராசரியாக 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்று குறிப்பிட்ட பருவ வயது உடையவர்களுக்கு தூக்க நேரம் மாறுபடலாம்.
எனவே சரியான மற்றும் சீரான தூக்க நேரத்தை அடைவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Good Sleep: இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்போ இத ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik