Side effects of eating too much mayonnaise: சாண்ட்விச், ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர்கள், பீட்சா அல்லது மோமோஸ் போன்றவற்றுடன் மயோனைஸ் தொட்டு சாப்பிடுவது வழக்கம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். மயோனைஸ் இல்லையெனில், இதன் சுவை மந்தமாகத் தெரியும். இதன் க்ரீம் அமைப்பு காரணமாகவே பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. இது உணவை சிறப்பானதாக மாற்றுகிறது.
ஆனால், இந்த மயோனைஸ் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பதை எப்போதாவது சிந்தித்தணுண்டா? இது சாண்ட்விச்கள், சாலடுகள் போன்றவற்றின் சுவையை மேம்படுத்தும் அதே வேளையில், அதன் விளைவுகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அதிக மயோனைஸ் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையான தீங்கு விளைவிக்கும். இதில் அதிகளவிலான மயோனைஸ் உடலுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?
அதிக மயோனைஸ் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் (Mayonnaise side effects)
மயோனைஸ் என்பது முட்டை, வினிகர் மற்றும் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கிரீமி அமைப்பு ஆகும். இது பல சமையலறைகளில் பிரதானமான ஒன்றாக அமைகிறது. இதனை அதிகளவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது.
எடை அதிகரிப்பு
மயோனைஸ் அதிக கலோரி உள்ளடக்கம் நிறைந்த உணவுப் பொருளாகும். இதனை அதிகமாக உட்கொள்வது எடையை வேகமாக அதிகரிக்கிறது. மேலும், இதில் கொழுப்பின் அளவும் மிக அதிகம் ஆகும். அதன் படி, அதிகளவு மயோனைஸ் உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தொப்பை கொழுப்பும் மிக வேகமாக அதிகரிக்கும். இந்த விரைவான எடை அதிகரிப்பு மற்ற நோய்களுக்கும் காரணமாகிறது. மயோனைஸ் உட்கொள்வதைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்
மயோனைஸைத் தொடர்ந்து உட்கொள்வது இரத்தச் சர்க்கரையின் அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இது குறைந்தளவிலான புரதம், நார்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதுடன், அதிகளவிலான கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. இந்த காரணிகளால் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க முடியாது. இது காலப்போக்கில் உயர் இரத்த சர்க்கரைக்கு வழிவகுப்பதுடன், நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மயோனைஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
உணவு நச்சு விளைவு
பொதுவாக மயோனைஸ் முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். ஆனால், இது சரியாகக் கையாளப்படாவிட்டால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஏற்படுத்தலாம். இதனால் மயோனைஸ் உணவு நச்சு அபாயத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். இது தீமை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த அபாயத்தைக் குறைக்க எப்போதும் மயோனைஸைக் குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க வேண்டும். அதே சமயம், நீண்ட காலத்திற்கு அறை வெப்பநிலையில் வெளியே வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Protein Powder Side Effects: அதிகப்படியான புரோட்டீன் பவுடர் எடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்
அதிகரித்த இரத்த அழுத்தம்
மயோனைஸில் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களின் அளவு மிக அதிகமாக உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் ஆகும். எனினும், பெரும்பாலான மக்கள் தங்கள் உணவின் மூலம் போதுமான ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களைப் பெறுகின்றனர். ஆனால் இதை அதிகளவு உட்கொள்வது ஒமேகா -6 முதல் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சமநிலையை பாதிக்கலாம். இது உடல் வீக்கத்திற்கு வழிவகுப்பதுடன், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயமும் அதிகரித்து காணப்படும்.
இதய பாதிப்பு
பல மயோனைஸ் வகைகளில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் காணப்படுகிறது. இவை உடலில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது. இந்த அதிகரித்த எல்டிஎல் காரணமாக தமனிகளில் பிளேக் கட்டி, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனைத் தவிர்க்க ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களால் செய்யப்பட்ட மயோனைஸைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் நிறைவுறாத கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. எனினும், மயோனைஸை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
எப்போதாவது மயோனைஸ் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த சீரான உணவுடன் மயோனைஸ் உட்கொள்வதன் மூலம் எதிர்மறையான விளைவுகளைக் குறைக்கலாம். மேலும், கிரேக்க தயிர், வெண்ணெய் ஸ்ப்ரெட்ஸ் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்த மயோனைஸ் போன்ற ஆரோக்கியமான மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும். எனினும், எந்த வகை மயோனைஸாக இருப்பினும் மிதமான அளவில் உட்கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: நீங்கள் மயோனைஸ் பிரியரா.? இது தெரிஞ்சா சாப்பிடவே மாட்டீங்க.!
Image Source: Freepik