
காச நோய் எவ்வாறு பரவுகிறது?
காற்றின் வழியாகப் பரவக்கூடிய இந்த நோய் ‘மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium tuberculosis) என்கிற பாக்டீரியாவால் உண்டாகிறது. சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காசநோயை ஒழிப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.
காசநோயாளிகள் எச்சில், சளி போன்றவற்றைத் துப்பும் உணர்வுக்கு அதிகமாக ஆளாவார்கள். இதனால் இவர்களுக்குப் பொதுஇடம் என்றுகூடப் பார்க்காமல் எச்சில் துப்புவதும் மூக்கைச் சிந்துவதும் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறிவிடுகிறது.
இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சாதாரண சுகாதாரப் பழக்கத்தைக்கூட அநேகம் பேர் பின்பற்றுவதில்லை. இந்தக் காரணத்தாலும் இந்த நோய் நம் நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்து, பீடி, சிகரெட், சுருட்டு உள்ளிட்ட புகைப்பழக்கம் காசநோய் பரவுவதற்குத் துணைபோகிறது. இந்தியாவில் மட்டும் 70 லட்சம் இளைஞர்களுக்குப் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். அப்படியென்றால், இவர்களுக்கெல்லாம் காசநோய் வருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், இரவு நேரத்தில் காய்ச்சல், உடல் எடை குறைதல், சளியில் ரத்தம், பசி குறைவு, சோர்வு போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.
காசநோய்க்கான சிகிச்சை என்ன?
இந்தியாவில் 1993-ல் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன், ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ‘டாட்ஸ்' (DOTS) என்று அழைக்கப்படும் ‘கூட்டு மருந்துச் சிகிச்சை’ அளிக்கப்படுகிறது. நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்தச் சிகிச்சையை மொத்தம் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், காசநோய் முற்றிலும் குணமாகிவிடும்.
ஆனாலும், இன்றைக்கும் இது ஒரு விஷ விருட்சமாக வளர்ந்துகொண்டிருக்கிறதே, ஏன்?
காசநோய்க்கு மருந்து சாப்பிடாதது எவ்வளவு ஆபத்தானதோ, அதற்கு நிகரான ஆபத்தை உடையது மருந்தைப் பாதியில் நிறுத்திவிடுவது தான். காசநோய் முற்றிலும் குணமாகக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும்.
ஆனால், மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்து விடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நினைத்துப் பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.
இன்னொன்று, தனக்குக் காசநோய் இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால் சமூகத்தில் மரியாதை குறைந்துவிடும். மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்று பயந்தே பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை. காசநோயாளிகளில் 60 % முதல் 70 % பேர் வரை தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள்.
இவர்களில் பலருக்குத் தொடர்ந்து மாத்திரை வாங்குவதற்குப் பண வசதி இல்லாததாலும், வெளியூர்ப் பயணம், வேலைப்பளு, வேலையின்மை போன்ற காரணங்களாலும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தவறிவிடுகின்றனர்.
மாத்திரையை நிறுத்தினால் இவ்வளவு ஆபத்தா?
மருந்துகளை முறைப்படி எடுத்துக்கொள்ளாமல், விட்டுவிட்டு எடுத்துக்கொள்ளும் போதும், பாதியில் நிறுத்தும்போதும், நோய்க்கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடுவதற்கான திறனைப் பெற்றுவிடுகின்றன. அதன் பிறகு, ஏற்கெனவே கொடுத்து வந்த மாத்திரைகளால் இந்தக் கிருமிகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாது. இதன்விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB ) அது உருமாறிவிடும்.
இதற்கு இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும், இவர்களால் பரவுகின்ற காசநோயும் மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாகவே பரவுகிறது. தமிழகத்தில் மட்டும் வருடத்துக்கு 10,000-க்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த நிலைமையில் கண்டறியப்படுகிறார்கள். இவர்கள் இந்த நிலைமையிலும் சிகிச்சையைச் சரியாகப் பெறாவிட்டால், இன்னும் தீவிர நிலைக் காசநோயாக (Extreme Drug Resistance TB) மாறிவிடும். இது உயிருக்கு ஆபத்தைத் தருகின்ற மிக மோசமான நிலை.
காசநோயைப் பொறுத்தவரை மருந்துகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குச் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் அவசியம். குறிப்பாக, புரத உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். பால், முட்டை, பருப்பு, பயறு, ஆட்டுக்கறி, எலும்பு சூப் போன்றவற்றைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
Image Source: freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version