Valakkai Kola Urundai Recipe: சன்டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வாரந்தோறும் புது புது ரெசிபிகளை செய்து அசத்தி வருகின்றனர். அதே போல, இந்த சமையல் ரெசிபிகளை மக்கள் தங்கள் வீடுகளில் செய்து வருகின்றனர். இந்த வார டாஸ்க்கில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா அவர்கள் வாழைக்காயை வைத்து, வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபி செய்து அசத்தினார். இந்த வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபியை மக்கள் தங்கள் வீடுகளில் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை குறித்து காணலாம்.
வாழைக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?
மசாலா செய்ய தேவையானவை
முக்கிய கட்டுரைகள்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு - 6 பற்கள்
- சிறிய வெங்காயம் - 10 முதல் 15
- பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
- கறிவேப்பிலை - 1 கொத்து
- துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
இந்த பதிவும் உதவலாம்: Banana Stem Juice: சிறுநீரக கல் முதல் நீரிழிவு நோய்வரை அனைத்தையும் குணப்படுத்தும் வாழைத்தண்டு ஜூஸ்!
செய்முறை
- வாழைக்காய் கோலா உருண்டை செய்ய முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- அதன் பிறகு அதில் பெருஞ்சீரகம், சீரகம், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை மேலே கூறப்பட்ட அளவில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பின் இதில் சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- இவ்வாறு வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
- பிறகு இதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிலான துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இவை அனைத்தையும் நன்கு வதக்கி சிறிது ஆறிய பிறகு மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஜாரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கரடுமுரடாக அரைத்து கொள்ளலாம்.

கோலா உருண்டை செய்ய தேவையானவை
- எண்ணெய் - தேவையான அளவு
- வாழைக்காய் - 2
- கொத்தமல்லி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
- கடலை மாவு (பொட்டுக்கடலை பவுடர்) - 2 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- மசாலா தயாரான பின் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இரண்டு வாழைக்காயை 10 நிமிடத்திற்கு ஆவியில் வேக வைத்து, கேரட் துருவியால் வாழைக்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். (இதில் வாழைக்காயை தண்ணீருக்குப் பதிலாக ஆவியில் வேக வைக்கும் போது உருண்டை பிடிப்பதற்கு சரியாக இருக்கும்)
- இந்த துருவிய வாழைக்காயில் தயாரித்து வைத்த மசாலா, கொத்தமல்லி மற்றும் பொட்டுக்கடலை பவுடர் போன்றவற்றைச் சேர்த்து பிசைய வேண்டும்.
- இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
- பிறகு மிதமான தீயில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்த உருண்டையை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட வேண்டும்.
- இதை உடனேயே கரண்டியால் எடுக்கும் போது உருண்டை பிரிந்து போக வாய்ப்புள்ளது. எனவே எண்ணெயில் உருண்டையைப் போட்ட பிறகு ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் திருப்பி விடலாம்.
- இப்போது சூப்பரான சுவையில் அசத்தலான வாழைக்காய் கோலா உருண்டை தயார் செய்யப்பட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Beetroot Kola Urundai: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ருட் கோலா உருண்டை செய்முறை!
வாழைக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
வாழைக்காய் கோலா உருண்டையைச் சாப்பிடும் முன்னதாக, அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
- வாழைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- உடலில் இரும்புச்சத்து குறைவதால் இரத்த சோகை ஏற்படலாம். வாழைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இவை இரத்த சோகை உள்ளவர்களுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும்.
- வாழைப்பழத்தைப் போலவே வாழைக்காயும் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. வாழைக்காயில் செய்யப்பட்ட உணவுகளை தினமும் இரவில் சாப்பிட்டு வர வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யலாம்.
- வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் சிறுநீரகத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இது போன்ற பல்வேறு நன்மைகளை வாழைக்காய் தருகிறது. எனினும், வேறு சில உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்கள் வாழைக்காயை உட்கொள்ளும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Madurai Mutton Kola Urundai: தெருவே மணக்கும் மதுரை மட்டன் கோலா உருண்டை இப்படி செஞ்சி பாருங்க..!
Image Source: Freepik