“நைட் முழுக்க சரியா தூக்கமே வரல… அதனால தான் காலையில் வேலை ஓடவே இல்ல” இதை இப்போதெல்லாம் பலரும் சொல்ல கேட்கிறோம். உடலுக்கும், அதன் உள்ளுறுப்புகளுக்கும் ஓய்வு வழங்க 8 மணி நேர தூக்கம் கட்டாயம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தம், பொருளாதாரம், வேலைப்பளு, தேர்வு பயம், மனச்சோர்வு போன்ற பல்வேறு காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். தூக்கமின்மையை விரட்டி, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க சிலர் தூக்க மாத்திரைகளை நாடுகின்றனர். இதனால் ஆரோக்கிய நன்மைகளை விட பக்கவிளைவுகளே அதிகம்.
எனவே தான் நாங்கள் இரவில் படுத்ததுமே நிம்மதியாக தூங்க உதவும் ஆயுர்வேத பானங்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்…
அஸ்வகந்தா தேநீர்:
ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தாவுக்கு தனி இடம் உண்டு. அஸ்வகந்தா மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதில் சிறந்தது விளங்குகிறது. இது ஒரு அடாப்டோஜெனிக் மூலிகை. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. தளர்வை ஊக்குவிக்கிறது.
அஸ்வகந்தா வேர் அல்லது பொடியை வெந்நீரில் அல்லது பாலில் கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கலாம். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, வெதுப்பான தேநீரில் தேன் கலந்து பருக வேண்டும்.
வெதுவெதுப்பான நீருடன் நெய்யைக் கலக்குங்க:

நெய்யில் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. ஒரு டீ ஸ்பூன் நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து தூங்கும் முன் குடித்து வந்தால் மன அமைதி ஏற்பட்டு, ஆழமான தூக்கம் கிடைக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குங்குமப் பூ + ஏலக்காய் பால்:

குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் ஆகியவை ஆயுர்வேதத்தில் தளர்வை மேம்படுத்த பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களாகும். சிறிதளவு குங்குமப்பூ மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
மஞ்சள் பால்:

மஞ்சள் பால் என்பது சளி அல்லது காய்ச்சல் இருக்கும்போது அனைவரும் நம்பியிருக்கும் பானமாகும். இந்த கோல்டன் மில்கிற்கு தூக்கத்தை வரவழைக்கும் சக்தியும் உள்ளது. இதில் உள்ள குர்குமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிம்மதியாக தூங்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சூடான பால்:
சூடான பால் என்பது தூக்கமின்மைக்கான ஒரு உன்னதமான ஆயுர்வேத தீர்வாகும். பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி கலந்து சாப்பிட்டால் தூக்கம் இன்னும் ஜோராக இருக்கும்.
இதையும் படிங்க: Weight Loss Tips: தூங்கும் போது கூட உடல் எடை குறைய… இத செஞ்சா மட்டும் போதும்!
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஜாதிக்காய் அமைதியை ஊக்குவிப்பதோடு, தூக்கம் மற்றும் ஓய்வை மேம்படுத்த உதவுகிறது.
வலேரியன் ரூட் தேநீர்
வலேரியன் வேர் பல நூற்றாண்டுகளாக தூக்கமின்மை மற்றும் பதட்டத்திற்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த டீயைக் குடிப்பதால் நரம்புகள் மற்றும் நரம்பு மண்டலம் அமைதியடைகிறது.
நாள்பட்ட தூக்கமின்மை நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். போதுமான தூக்கம் அல்லது அதிக தூக்கம் இல்லாதது அறிவாற்றல் திறன்களை பாதிக்கலாம். தொடர்ந்து, ஒரு நபர் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, கவனம் செலுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற நுட்பான திறன்கள் குறையும். தூக்கமின்மை மனநிலை மற்றும் உணர்ச்சி அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கிறது. அதனால்தான் குறைந்தது எட்டு மணிநேர தூக்கம் உடலுக்கு அவசியம்.