Ayurvedic remedy for hair fall control and boost hair growth: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. குறிப்பாக, முடி உதிர்தல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு இது தற்காலிகமானதாக இருக்கலாம். ஆனால் இன்னும் சிலருக்கு இது ஒரு தொடர்ச்சியான கவலையாக மாறிவிட்டது.
முடி மெலிதல், வழுக்கை புள்ளிகள் போன்றவை முடி உதிர்தலைக் கையாளும் மக்கள் கவனிக்கக்கூடிய பொதுவான அறிகுறிகளாகும். எனினும் அதிர்ஷ்டவசமாக, முடி உதிர்தலைக் கையாள்பவர்கள், மெதுவான முடி வளர்ச்சியைக் கொண்டிருப்பவர்கள் சில ஆயுர்வேத வைத்தியங்களைக் கையாளலாம். இவை முடி ஆரோக்கியத்திற்கு ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குவதுடன், உடலை உள்ளிருந்து சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: முடி பொசுபொசுனு அடர்த்தியா வளரணுமா? எலுமிச்சை தோலை இப்படி யூஸ் பண்ணி பாருங்க
முடி உதிர்தலைக் குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஆயுர்வேத வைத்தியங்கள்
ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்டபடி, முடி உதிர்தல் மற்றும் மெலிதலைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் ஆயுர்வேத வைத்தியங்களைக் காணலாம். இவை தலைமுடியை இயற்கையாகவே வலுப்படுத்த உதவுகிறது.
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது
முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள ஆயுர்வேத வைத்தியங்களில் ஒன்றாக முடிக்கு வழக்கமாக எண்ணெய் தடவுவது அடங்கும். இதற்கு நெல்லிக்காய், பிராமி, பிருங்கராஜ் மற்றும் வேம்பு போன்ற மூலிகைகள் கொண்ட ஆயுர்வேத எண்ணெய்களைத் தேர்வு செய்யலாம். இந்த மூலிகைகள் நிறைந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் ஊட்டச்சத்தை ஆதரிக்கவும், மோசமான பித்த தோஷத்தை அமைதிப்படுத்தவும் உதவுகின்றன.
எண்ணெயை சிறிது சூடாக்கி, விரல் நுனியில் உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இவை இரத்த ஓட்டத்தைத் தூண்டவும், ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவுகிறது. எனினும், ஈரப்பதமான காலநிலையில் வெளியே செல்வதற்கு சற்று முன்பாக எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், இவை தூசி, ஈரப்பதத்தை ஈர்க்கக்கூடும். இது முடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
மூலிகைப் பொடிகளைப் பயன்படுத்துவது
எந்த பருவத்திலும் முடி உதிர்தல் பொதுவான பிரச்சனையாகும். ஆனால், மழைக்காலங்களில் வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக அரிப்பு, பொடுகு, நோய்த்தொற்றுக்களுக்கு வழிவகுக்கலாம். இவை அதிக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், தினமும் கடுமையான ஷாம்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ரீத்தா, சீகைக்காய் மற்றும் திரிபலா போன்ற பொடிகளின் கலவையால் வாரத்திற்கு இரண்டு முறை உச்சந்தலையை சுத்தம் செய்யலாம்.
இந்த இயற்கையான மூலிகை சுத்தப்படுத்திகள் முடியின் இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் அசுத்தங்களை நீக்குகிறது. இந்த மூலிகை பொடிகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் தயார் செய்து உச்சந்தலையிலும் முடியின் நீளத்திலும் தடவலாம். சிறிது நேரத்திற்குப் பின் தலைமுடியை நன்கு சுத்தம் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொத்து கொத்தா முடி கொட்டுதா? படிகாரக் கல்லை இப்படி யூஸ் பண்ணி பாருங்க
முடிக்கு ஊட்டமளிக்கும் மூலிகைகளை உட்கொள்வது
பலவீனமான செரிமானம், மோசமான ஊட்டச்சத்து மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக முடி வேர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறாமல் போகும். குறிப்பாக, கனமான, வறுத்த அல்லது பழைய உணவுகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இது முடி உதிர்தல் உட்பட பல முடி பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில், அஸ்வகந்தா, நெல்லிக்காய் போன்ற மூலிகைகளை உட்கொள்வது மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், ஆக்ஸிஜனேற்ற ஆதரவை வழங்கவும் உதவுகின்றன. இதைப் பொடியாக எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் அல்லது மருத்துவரின் பரிந்துரையில் ஆயுர்வேத மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் முடி ஆரோக்கியத்தை உடலின் உள்ளிருந்து மேம்படுத்தலாம்.
ஆயுர்வேத ஹேர் பேக்குகளைப் பயன்படுத்துவது
சில ஆயுர்வேத மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஹேர் பேக்குகள் உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
வெந்தய ஹேர் மாஸ்க் - 2 தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் காலையில் இதை பேஸ்டாக அரைத்து, 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் கலக்கலாம். இதை முடி மற்றும் உச்சந்தலையில் தடவலாம். பின் 30–45 நிமிடங்கள் வைத்து, லேசான ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் கழுவலாம்.
நெல்லிக்காய், கற்றாழை ஹேர் மாஸ்க் - நெல்லிக்காய் தூள், கற்றாழை கூழ் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம். பிறகு இதை வெந்தயக்கூழ் கொண்டு கழுவலாம்.
பிராமி, கற்றாழை ஹேர் மாஸ்க் - ஒரு கைப்பிடி கழுவப்பட்ட பிராமி இலைகளை 1 தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்லுடன் கலக்க வேண்டும். இதை உச்சந்தலையில் தடவி, மெதுவாக மசாஜ் செய்து, 30-45 நிமிடங்கள் வைக்கலாம். பிறகு இதை வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஷாம்பூவுடன் கழுவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மெல்லிய முடியை அடர்த்தியா மாற்ற இந்த ரெமிடிஸை இப்படி யூஸ் பண்ணி பாருங்க
Image Source: Freepik