மதுரை, வண்டியூர் என்ற இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நட்டுகள் மற்றும் போல்ட்டுகளை தயாரிக்கின்ற ஒரு உற்பத்தி தொழிலகத்தில் பணியாற்றி உள்ளார். உற்பத்தி பிரிவில் பணியிலிருந்த போது சுழலும் இயந்திரப் பகுதியில் அந்த பெண்ணின் தலைமுடி எதிர்பாராத விதமாக சிக்கியுள்ளது. தொடர்ந்து அடுத்த கணமே அவரது உச்சந்தலையானது (Scalp) தலைப்பகுதியிலிருந்து மிக வேகமாக பிரிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தினால் ஒட்டுமொத்த மண்டையோடும், முன்னந்தலையும், இடது காதின் மூன்றில் இரண்டு பகுதியும் வெளியே தெரிந்த நிலையில் இருந்துள்ளது. அதாவது மண்டை ஓட்டின் தோல் பகுதி மட்டும் முற்றிலும் பிரிந்து விழுந்துள்ளது.
வெற்றிகரமா நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி
அதை சரி செய்வதற்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அந்த பெண்ணுக்கு 7 மணி நேரம் அவசரநிலை பிரிவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து மதுரை மீனாட்சி மருத்துவமனை தெரிவித்துள்ள தகவலை விரிவாக பார்க்கலாம்.
சேதமடைந்த இரத்தக்குழாய்கள் மற்றும் தலைமுடி போன்ற மெல்லிய நுண்குழல்களை விரைவாக அடையாளம் காண்பதும் இரத்த ஓட்டத்தை மீண்டும் கொண்டுவர வைப்பதும் அறுவை சிகிச்சையின் முக்கிய சவாலாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையில் சந்தித்த சிக்கல்கள்
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சிக்கலான அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்கள் கழித்து மறுபடியும் பொருத்தப்பட்ட உச்சந்தலையின் ஒரு பகுதியில் இரத்த ஓட்டம் உகந்த அளவுக்கும் குறைவாக இருந்ததது கண்டறியப்பட்டதால், Microvascular Anastomosis என அழைக்கப்படும் மருத்துவ செயல்முறையை மருத்துவர் குழு திரும்பவும் செய்ய வேண்டியிருந்துள்ளது.
மதுரையில் ஒரு எளிய குடும்ப பின்னணியைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு உரிய நேரத்தில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையால், விபத்தின் காரணமாக சிதைவுற்றிருந்த தலை மற்றும் முக பகுதிகளை சீராகியுள்ளது.
சவால்களில் இருந்து தப்பித்த பெண்
இந்த அறுவை சிகிச்சைகளை உடனடியாக செய்திருக்காவிட்டால், அவரது வாழ்நாள் முழுவதும் தோற்றம் முற்றிலும் சீர்குலைந்த நிலையில் இருந்திருக்கும் என்றும் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டாக்டர். பினிட்டா ஜெனா, பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் மற்றும் டாக்டர். பவ்யா மனோஷிலா ஆகியோர் தலைமையிலான அறுவைசிகிச்சை நிபுணர்களது குழு இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து தயாரான பெண்
டிசம்பர், 6 ஆம் தேதியன்று செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்நோயாளி படிப்படியாக உடல்நலம் தேறி குணமடைந்துள்ளார். மீண்டும் ஒட்டி வைக்கப்பட்ட அவரது தலையில் முடியில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. அதைத் தொடர்ந்து, நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இப்போது, அவரது வழக்கமான வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொள்ள தயாராக உள்ளார்.
உச்சந்தலையில் ஏற்பட்ட கிழிசல்
இதுகுறித்துப் பேசிய மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் B.கண்ணன், “உச்சந்தலையில் (Scalp) ஏற்பட்ட கிழிசலின் தீவிரத்தன்மை இதனை ஒரு அரிதான விஷயமாக மாற்றியது. அத்துடன், சிகிச்சைக்கான உரிய நேரத்தைக் கடந்து, இம்மருத்துவமனைக்கு காயமடைந்த நோயாளி அழைத்து வரப்பட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், கிழிந்திருந்த உச்சந்தலைப் பகுதி ((Scalp) மருத்துவ குழுவினரிடம் ஒப்படைக்கப்படும் வரை முறையாக பாதுகாக்கப்படாத நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. இவையெல்லாம் ஒருங்கிணைந்து, அறுவை சிகிச்சை நிபுணர்களது குழுவிற்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தியிருந்தன.
எனினும், இப்பிரச்சனைகளையும் மீறி மருத்துவ நிபுணர்கள் சிறப்பாக செயல்பட்டு, இந்நோயாளிக்கு நிரந்தர தீர்வை வழங்கியிருக்கின்றனர். பணியிடத்தில் பாதுகாப்பு வழிகாட்டல்கள் முறையாக அமல்படுத்தப்பட்டு, அவைகளை சரியாக பின்பற்ற பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டிருக்குமானால், இத்தகைய எதிர்பாராத அரிதான விபத்துகள் நிகழாமல் தவிர்த்திருக்க முடியும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.