உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓர் ஆண்டாக கண்காணித்து எந்த குறைபாடுகளும் இன்றி 6 கிலோ 500 கிராம் எடைக்கு கொண்டு வந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சில இடங்களில் அரசு மருத்துவமனை என்றால் நோயாளிகள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்படும் இதே காலக்கட்டத்தில் தான், தக்க சமயத்தில் கடவுளாக மாறி உயிரைக் காக்கக்கூடிய அரசு மருத்துவர்களும் இருக்கின்றனர்.
600 கிராம் எடையில் பிறந்த குழந்தை:
அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை இல்லை எனக்கூறி, கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் கூட பணத்திற்காக அறுவை சிகிச்சையாக மாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றனர். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையோ தனியார் மருத்துவமனைகளுக்கே சவால் விடும் வகையிலான காரியத்தை செய்துள்ளது.

எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மினிபிரியா - புதுராஜா என்ற தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த இக்குழந்தை வெறும் 700 கிராம் எடையுடன் பிறந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுவாக குறை பிரசவத்தில் மிகவும் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் என்பதால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவதும் உண்டு. ஆனால் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர்களான ராதாமணி, செந்தில் நேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர், வெறும் 700 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர்.
66 நாட்கள் சிகிச்சை:
பச்சிளம் குழந்தைக்கு ஒன்றல்ல, இரண்டல்ல 66 நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்து நல்ல ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு ஏற்படக்கூடியமூளை வளர்ச்சி, கண் பார்வை, கை, கால்கள் வளர்ச்சி, உடல் எடை உள்ளிட்டவற்றில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படுகிறதா? என்பதையும் ஓராண்டிற்கு கண்கானித்துள்ளனர்.
குழந்தைகள் நல மருத்துவர்களான ராதாமணி, செந்தில் நேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினரின் அயராத உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் பலனளிக்கும் வகையில், இன்று எந்த குறைபாடுகளும் இல்லாத அந்த குழந்தைசுமார் 6 கிலோ 500 கிராம் எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
அரசு மருத்துவர்கள் தாங்கள் புரிந்த இந்த சாதனையை குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளில் மருத்துவமனை வளாகத்திலேயே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளுக்கு முன்னூதாரணமாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடும் வகையிலும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ள இந்த காரியம் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.