What causes fatty liver in women and how to spot the symptoms: அன்றாட வாழ்வில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அவ்வாறு பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக கொழுப்பு கல்லீரல் நோய் அமைகிறது. இது அவர்களுக்கு ஏற்படும் ஒரு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினையாகும். இதற்கு முக்கிய காரணமாக வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் ஹார்மோன் காரணிகள் ஆகும்.
NDTV தளத்தில் குறிப்பிட்டபடி, மருத்துவ ரீதியாக கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்று அழைக்கப்படும் கொழுப்பு கல்லீரல் ஆனது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஏற்படக்கூடியதாகும். இது வீக்கம், வடுக்கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாவிட்டால் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, PCOS அல்லது மாதவிடாய் நின்ற பெண்கள் அல்லது இன்சுலின் எதிர்ப்பு போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு இது உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.
துரதிஷ்டவசமாக, இந்த கொழுப்பு கல்லீரல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தெளிவற்றதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். ஆனால் இதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு காரணங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் இது மிகவும் தீவிரமானதாக மாறுவதற்கு முன்பு அதைக் கண்டறிந்து மாற்றியமைக்கலாம். இதில் பெண்களில் கொழுப்பு கல்லீரலின் பொதுவான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரலுக்கு இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்..
பெண்களில் கொழுப்பு கல்லீரல் நோயின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
விவரிக்கப்படாத சோர்வு
அடிக்கடி ஏற்படக்கூடிய ஆனால் நுட்பமான அறிகுறியாக நாள்பட்ட சோர்வு அமைகிறது. இந்த கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. மேலும், இதனால் பெண்கள் சரியான ஓய்வுக்குப் பிறகும் சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர்வர்.
இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை
நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய பெண்கள் பெரும்பாலும் இன்சுலின் செயல்பாட்டின் குறைபாடு காரணமாக கொழுப்பு நிறைந்த கல்லீரல் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். இந்த நிலை கல்லீரல் செல்களில் கொழுப்பு படிவதை எளிதாக்குகிறது.
அதிக கொழுப்பு படிவது
பெரும்பாலும், அசாதாரண இரத்த லிப்பிட் அளவுகளே கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு பங்களிக்கிறது. இதனால் பல பெண்களுக்கு அறியாமலேயே அதிக கொழுப்பு ஏற்படுகிறது. இது காலப்போக்கில் கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது.
வயிற்று அசௌகரியம்
கொழுப்பு கல்லீரல் உள்ள பெண்கள் பலருக்கும் அவர்களின் வயிற்றின் மேல் வலது பக்கத்தில், கல்லீரல் இருக்கும் இடத்தில் மந்தமான வலி அல்லது கனத்தை உணர்கின்றனர். இந்த அசௌகரியம் அவர்களுக்கு வந்து போகலாம். மேலும் இது பெரும்பாலும் அஜீரணம் அல்லது வீக்கம் என்று தவறாகக் கருதப்படுகிறது.
விரைவான எடை இழப்பு
மிகவும் விரைவாக உடல் எடை இழப்பு ஏற்படுவதன் காரணமாக, கல்லீரலை அழுத்தமாக்கி கொழுப்பு குவிப்பை மோசமாக்குகிறது. இது பெரும்பாலும் பெண்களால் அடிக்கடி முயற்சி செய்யப்படும் தீவிர உணவுக் கட்டுப்பாடு அல்லது ஃபேட் சுத்திகரிப்புகளுடன் நிகழக் கூடியதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: கொழுப்பு கல்லீரலை மாற்றியமைக்க இந்த உணவுகள் சிறந்தவை.!
உடல் பருமன்
அதிகப்படியான உடல் எடையின் காரணமாக, குறிப்பாக தொப்பை கொழுப்பு ஆனது கொழுப்பு நிறைந்த கல்லீரலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் வயிற்றைச் சுற்றி சேமிக்கப்படக்கூடிய கொழுப்பு, கல்லீரலில் கொழுப்பு சேர்வதுடன் நெருக்கமாக தொடர்புடையதாகும்.
மது அருந்துவது
மிதமான குடிப்பழக்கம் கூட சில பெண்களில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு பங்களிக்கக்கூடும். இதில் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவானது என்றாலும், மது தொடர்பான கல்லீரல் சேதமும் இணைந்து ஏற்படுகிறது.
ஹார்மோன் மாற்றங்கள்
மாதவிடாய் நிறுத்தத்தின் போது ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பிரச்சனைகளின் காரணமாக இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதுடன், உடல் கொழுப்பையும் அதிகரிக்கலாம். இது பெண்களில் கொழுப்பு கல்லீரலின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சருமத்தில் கருமையான திட்டுகள்
கழுத்து அல்லது அக்குள் போன்ற உடல் மடிப்புகளில் கருமையான திட்டுகள் போன்ற நிலை ஏற்படுவது பெண்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்க்கான முக்கிய காரணியான இன்சுலின் எதிர்ப்பின் காட்சி குறியீடாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, எடை மேலாண்மை மற்றும் மதுவைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் கொழுப்பு கல்லீரலை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்து நிலையை மாற்றலாம். பெண்களின் ஹார்மோன் மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் கண்காணிப்பது அவசியமாகும். குறிப்பாக, பெண்கள் எந்த காலத்திலும் கல்லீரலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையைக் கையாள்வதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்க இந்த ஒரு உணவை சாப்பிடுங்க
Image Source: Freepik