What are the side effects of intermittent fasting: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதன் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் போன்றவை ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே தான் உடல் எடையைக் குறைக்க பலரும் உடற்பயிற்சி செய்வது, ஜிம்மிற்கு செல்வது உள்ளிட்ட பல முறைகளைக் கையாள்கின்றனர். ஆனால், இது மட்டும் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவாது.
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவை சீரான முறையில் கையாள்வது அவசியமாகும். அவ்வாறே, எடையைக் குறைப்பதற்கு பல்வேறு டயட் முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த வரிசையில் தான் இடைவிடாத உண்ணாவிரதம் (Intermittent fasting) என்ற டயட் முறையானது உள்ளது. இது உலகின் மிகவும் பிரபலமான உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி போக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அணுகுமுறையானது உடலில் எடையிழப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Intermittent Fasting: மக்களே உஷார்!! அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமாம்!
இடைவிடாத உண்ணாவிரதத்தின் நன்மைகள்
இந்த விரதமுறையானது செரிமானத்தை மேம்படுத்தவும், அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த டயட் முறை இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
இடைவிடாத உண்ணாவிரதம் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தக்கூடிய பாரம்பரிய உணவு முறைகளைப் போலல்லாமல், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது இந்த விரத முறையில், தனிநபர்கள் உணவு உண்ணும் நேரத்திற்கும் உண்ணாவிரதத்திற்கும் இடையில் மாறி மாறி சாப்பிடுகின்றனர். பொதுவான முறைகளில் 16/8 முறை அடங்கும். அதாவது இதில் ஒருவர் 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, 8 மணி நேரத்திற்குள் சாப்பிடுவர்.
இடைவிடாத உண்ணாவிரதத்தின் பக்க விளைவுகள்
இது போன்ற ஏராளமான நன்மைகளை இடைவிடாத உண்ணாவிரத முறை நமக்கு தந்திருப்பினும், இது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. இந்த உணவுமுறையை சரியாகப் பயிற்சி செய்யாவிட்டால், அது பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கலாம். இதில் இடைவிடாத உண்ணாவிரதத்தின் சில சாத்தியமான பக்க விளைவுகள் குறித்து காண்போம்.
அதிகரிக்கும் பசி
இடைவிடாத உணவுமுறையில், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட எத்தனை மணி நேரத்திற்குப் பின் சாப்பிடுகிறோம் என்பது அடங்குகிறது. அதிலும், பொதுவான முறையாக 16 மணி நேரம் உணவு இல்லாமல் இருக்கும்போது, குறிப்பாக ஆரம்ப கட்டங்களில், பசியை அதிகரிக்கலாம். கூடுதலாக, அடிக்கடி சாப்பிடப் பழகி விட்டால், பசியை அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுகள்
சரியான வழியில் இடைவிடாத உணவுமுறையைச் செய்யாத போது, இடைவிடாத உண்ணாவிரதம் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், இது உடல்நலப் பிரச்சனைகளுக்கு பங்களிக்கக்கூடும். எனவே உணவு உண்ணும் நேரத்தில் நன்கு சமநிலையான உணவை உட்கொள்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Intermittent Fasting: அவ்வப்போது ஏன் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?
தலைவலி
உண்ணாவிரதத்தின் பொதுவான பக்க விளைவாக தலைவலி அமைகிறது. இவை நீரிழப்பு, காஃபின் விலகல் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. இதில் தலைவலி லேசானது முதல் மிதமான தீவிரம் வரை இருக்கலாம். குறிப்பாக, சாப்பிடாத நேரங்களில் தலைவலி அதிகமாகக் காணப்படலாம்.
குறைந்த ஆற்றல் நிலைகள்
சில நபர்கள் ஆற்றல் குறைவாகவோ அல்லது சோர்வாகவோ உணர்வர். குறிப்பாக, சரிசெய்யும் கட்டத்தில் சோர்வை அனுபவிப்பர். எதுவும் சாப்பிடாமல் இருக்கும் நேரங்களில் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்து, சோர்வு மற்றும் பலவீனத்தை உணரலாம். இடைவிடாத உண்ணாவிரதம் தூக்கக் கலக்கத்திற்கும் வழிவகுக்கலாம். இதன் காரணமாக, பகல் நேர சோர்வு ஏற்படலாம்.
மனநிலை மாற்றங்கள்
இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, சிலருக்கு எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.
இடைவிடாத உண்ணாவிரதத்தை எவ்வாறு பாதுகாப்பாக பின்பற்றுவது?
- இந்த விரத முறையைப் பின்பற்றுபவர்கள் புதியவராக இருப்பின், குறுகிய உண்ணாவிரத காலங்களுடன் தொடங்கி உடல் அதற்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கலாம்.
- சாப்பிடாத காலங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சமநிலையை வழங்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
- நீரிழப்பைத் தடுப்பதற்கு, சாப்பிடாத நேரங்களில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நேரத்தில் மூலிகை தேநீர்களையும் தேர்வு செய்யலாம்.
- உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கவனித்து அதற்கேற்ப உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
கவனமாகச் செய்வதன் மூலம் இந்த உணவுமுறையின் பல்வேறு அற்புதமான நன்மைகளைப் பெறலாம். எனினும், இது போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்க நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல் சிறந்த தூக்கம் வரை.. இரவு உணவைத் தவிர்ப்பதன் அற்புதமான நன்மைகள் இங்கே..
Image Source: Freepik