உலகம் முழுவதும் ஏராளமானோர் விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் எண்ணிக்கை ஏராளம். வயது வரம்பின்றி இளைஞர்கள்முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கிரிக்கெட்டை ஆர்வத்தோடு விளையாடுவார்கள்.
வீட்டாருக்கு ஏன் இதை அனுப்ப வேண்டும்?
கிரிக்கெட் விளையாடுவது சிலருக்கு சற்று கடினமாக இருக்கிறது என்றாலும் வீட்டில் இருந்து வாரந்தோறும் கிரிக்கெட் விளையாட செல்வதே பலருக்கும் கடினமாக இருக்கிறது. வீட்டாரை (மனைவி, அப்பா, அம்மா, குழந்தைகள், சொந்தக்காரர்கள்) சமாளிப்பதுதான் இதற்கு காரணம். பலர் இந்த பிரச்சனை எதிர்கொள்கிறார்கள்.
முக்கிய கட்டுரைகள்
இப்படி பிரச்சனையை நீங்களும் எதிர்கொண்டால் இதை உங்கள் வீட்டாருக்கும் பகிர்ந்து, கிரிக்கெட் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரியப்படுத்துங்கள்.
கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல இதை விளையாடுவதால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல நன்மைகள் கிடைக்கிறது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
கிரிக்கெட் விளையாடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
ஸ்டாமினா அதிகரிக்கும் (Increases Stamina)
கிரிக்கெட் விளையாடுவதால் பல மடங்கு ஸ்டாமினா அதிகரிக்கும். பவுளிங் போடும் போது ஓடுவது, பேட்டிங் போது ரன் எடுக்க ஓடுவது, ஃபீல்டிங் செய்யும் போது பந்தை தடுக்க ஓடுவது என முழுக்க ஆக்டிவாக இருக்க வைக்கும் விளையாட்டு கிரிக்கெட். இதை விளையாடுவதால் உடல் ஸ்டாமினா அதிகரிக்கும்.
நிலைத்தன்மை
அவசரப்படாமல் கவனமாக உடலை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கும் நிலையான தன்மையை கிரிக்கெட் வழங்குகிறது. பேட்டிங்கின் போது கண் பார்க்கும் மூளை வழிநடத்தும் கால் அதற்கு ஏற்ப செயல்பட்டு பேட்டை கை சுழற்றும். கேட்ச் பிடிக்கும் போதும் இதேபோன்று மனதையும் உடலையும் ஒருசேர செயல்பட பழக்குகிறது கிரிக்கெட். இதை விளையாடுவதன் மூலம் உடலை நிலையாக செயல்பட வைக்கும் தன்மையை கிரிக்கெட் உண்டாக்குகிறது.
கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு
கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் பல நன்மைகளில் ஒன்று கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு. பல சூழ்நிலைகளில் கண் பார்க்கும் ஆனால் கை அதற்கேற்ப உடனடியாக செயல்படாது. எடுத்துக்காட்டாக, ஒரு பொருள் கீழே விழுகிறது என்பதை கண் பார்த்தால் கை உடனடியாக செயல்பட்டு அதை தடுக்காது சற்று தாமதமாகும்.
ஆனால் கிரிக்கெட் விளையாடும் இந்த பிரச்சனை சரிசெய்யப்படும். குறிப்பாக பீல்டிங் நிற்கும் போது கண் பந்து வருவதை பார்க்கும் அதே நேரத்தில் கையும் பந்தை நோக்கி உடனடியாக செல்லும். இதன் கை மற்றும் கண் ஒருங்கிணைப்புக்கு பழகுவதற்கு கிரிக்கெட் உதவும்.
கலோரிகளை எரிக்க உதவும்
கிரிக்கெட் விளையாடும் போது அனைத்து நிலைகளிலும் மிக ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். ஓடும் போது வேகமாக செயல்பட வேண்டும், அதையே தொடர்ந்து செய்ய வேண்டும். இதன்மூலம் உடல் கலோரிகள் வேகமாக குறையும். உடல் எடையும் சட்டென்று குறைய வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கேற்ப உணவுமுறையும் கட்டாயம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தசை உருவாக்க உதவும்
பேட்டிங், பவுளிங், ஃபீல்டிங், ரன்னிங் என ஒவ்வொரு வேலைக்கும் வெவ்வேறு தசைகள் வேலை செய்கிறது. இது ஒட்டுமொத்த தசை கட்டமைப்பிற்கும் உதவுகிறது. உடலுக்கான சரியான வடிவத்தை பெற கிரிக்கெட் உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
கிரிக்கெட் விளையாட்டு இதயத் துடிப்பை சமமான நிலையில் அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை பெற உதவும். இதய துடிப்பு அவ்வப்போது அதிகரித்து உடனடி ஓய்வு பெறுவது இதயத்திற்கு சிறந்த பயிற்சியாகும். ஏனென்றால் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தீவிர செயல்பாட்டுக்கு இடையில் இடைவெளி கிடைக்கும்.
கிரிக்கெட் விளையாடுவதால் உளவியல் ரீதயாக கிடைக்கும் நன்மைகள்

கவனக்கூர்மை
கிரிக்கெட் விளையாட்டு என்பது மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் முடிவுகளை எடுக்க வைக்கும். இதற்கு மிகுந்த கவனம் தேவை. சிறிய கவனச்சிதறலும் பெரும் தவறை ஏற்படுத்தும். எனவே கவனக்கூர்மையை இந்த விளையாட்டு அதிகரிக்கும்.
குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன்
கிரிக்கெட் விளையாடுவது என்பது கூட்டு முயற்சியாகும். இரு அணிகளிலும் 11 வீரர்கள் இருப்பதால் உத்திகளை உருவாக்கவும், 11 பேரும் தங்களின் பணிகளை பகிர்ந்து ஒருங்கிணைந்து செயல்படவும் கிரிக்கெட் வழிவகுக்கிறது. இதன் மூலம் குழு ஒருங்கிணைப்பு திறனையும், குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனையும் கிரிக்கெட் பெற வைக்கிறது.
சமூக திறன்கள்
குழு உறுப்பினர்களுடன் மட்டுமல்லாமல் உங்கள் போட்டியாளர்களுடனும் தொடர்புகொள்வதன் மூலம் சமூக திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. இதன்மூலம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக உரையாடு சமாளிக்கும் திறனை கிரிக்கெட் வழங்குகிறது.
மனநிலை மேம்பாடு
கிரிக்கெட் விளையாடும் போது மனநிலை மேம்படுகிறது. கவனம், குணாதிசயங்கள், மூளையின் சுறுசுறுப்பான செயல்பாடு என அனைத்தையும் கிரிக்கெட் வழங்குகிறது. அதேபோல் வெற்றியோ, தோல்வியோ இறுதிவரை முயற்சி செய். தோற்றாலும் போராடி தோற்றோம் என எதிரணியினரின் திறமையை பாராட்டு போன்ற பல மனநிலை மேம்பாடுகளை கிரிக்கெட் கற்றுக் கொடுக்கிறது.
இப்படி கிரிக்கெட் விளையாடுவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் எதையும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இனி தாராளமாக கிரிக்கெட் விளையாடலாம் தானே? வாழ்த்துக்கள்.
Pic Courtesy: Social Media