மழைக்காலம் படிப்படியாக தொடங்கிவிட்டது. எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு சற்று அதிகமாகவே வெயில் வாட்டிவதைத்தது. இதில் இருந்து நிவாரணம் தரும் வகையில் சற்றும் குளிரும் மழையும் தொடங்கிவிட்டது.
மழை தொடங்கிவிட்டது என மகிழ்ச்சி வந்தாலும் ஒருசில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். காரணம், மழைக்காலத்தில் நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருக்கும் அதேசமயத்தில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மழையில் நனைய வேண்டிய நிலை வரும், சிலர் விரும்பி மழையில் நனைவார்கள்.
மழையில் நனைந்து வீட்டுக்கு வந்ததும் பலர் தங்கள் உடைகளை மட்டுமே மாற்றுவார்கள். சிலர் மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தவுடன் குளிப்பார்கள். சிலர், மழையில் நனைந்தவுடன் வீட்டில் குளிப்பது நல்லது என அறிவுறுத்துகிறார்கள். சரி, இதில் எது உண்மை என இப்போது பார்க்கலாம்.
மழையில் நனைந்த பிறகு சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லதா?
மழை நீரில் நனைந்த பிறகு, சாதாரண நீரில் குளிப்பது மிகவும் அவசியம். இதற்கு முக்கிய காரணம் காற்றில் ஈரப்பதம் மற்றும் வைரஸ்கள் இருப்பதுதான். மழைநீரில் நனையும் போது காற்றில் இருக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும். இவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவாமல் இருந்தால், தோல் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
மழைநீரில் உள்ள வைரஸ் தோலுடன் தொடர்பு கொள்வதால், தோலில் அரிப்பு, ரிங்வோர்ம், சொறி, உஷ்ண வெடிப்பு போன்றவை ஏற்படும். தோல் உணர்திறன் உள்ளவர்கள் மழையில் நனைந்தால் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, மழைக்குப் பின் சாதாரண நீரில் குளிப்பது மிகவும் அவசியம்.
மழையில் நனைந்தால் தொற்று ஏற்படுமா?
மழை பெய்யும்போது, மாசு மற்றும் அழுக்குத் துகள்கள் தண்ணீருடன் சேர்ந்து தரையில் விழுகின்றன. மழைநீரில் ஒருவர் நனைந்தால், தொற்று மற்றும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. மழையில் நனைந்த பிறகு குளிப்பது மிகவும் முக்கியம் என்பதற்கு இதுவே காரணம். மழையில் நனைந்த பின் சுத்தமான தண்ணீரில் குளித்தால், உடலில் இருக்கும் அழுக்கு மற்றும் பாக்டீரியா தொற்று கிருமிகள் வெளியேறி, நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
மழையில் நனைந்த பின் தலைமுடியை ஷாம்பூவும், உடலை சுத்தமான தண்ணீரும் சோப்பும் கொண்டு கழுவுவது மிகவும் அவசியம்.
Image Source: FreePik