$
Alcohol Awareness Month 2024: குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகம் பல இடத்தில் இடம்பெற்றிருக்கும். இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் வரி கட்டி வாங்கும் மது பாட்டில்களிலேயே இது இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஒரு உணவு உடலுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் என நிறுவனம் கண்டறியும் பட்சத்தில், அப்போது முன்னெச்சரிக்கையாக உணவுப் பொருளின் வெளிப்புறத்தில் அதுகுறித்து எழுதி வைப்பார்கள். அதேபோல் தான் மதுபாட்டில்களிலும் குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என எழுதப்பட்டிருக்கும்.
குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
இது வெறும் வாசகம் மட்டுமல்ல, குடி குடியையே கெடுத்துவிடும், மது தாய்நாட்டிற்கே கேடு விளைவிக்கும், உங்கள் மொத்த உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு ஏற்படுத்தும். உங்கள் குடும்பங்கள் சீர்குலைய வழிவகுத்து வீட்டையே கெடுக்கும் என்பதே இதன் அர்த்தம். இப்படி இத்தனை கடுமையான வாசகங்கள் கொண்ட மதுவை தான் நாம் சோகம், துக்கம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளிலும் வாங்கிக் கொடுத்தும், கேட்டு வாங்கியும் குடிப்பவர்கள் பலர்.

போதைப் பழக்கம் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது என்ற கோஷம் தற்போது தமிழகத்தில் வலுப்பெற்றாலும். அனைத்திற்கும் அடிப்படியாக மதுப்பழக்கமே இருக்கிறது. ஏப்ரல் மாதம் மது விழிப்புணர்வு மாதமாகும். இந்த மாதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுவது கடமை என்றாலும். இது வெறும் விழிப்புணர்வாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமாக எடுத்துக் கொள்வது அவசியம்.
தமிழகத்தில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்
14.3% பரவலான இந்தியர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான மனோதத்துவ பொருளாக மது மாறி இருக்கிறது. ஆண்களில் மது அருந்துவதற்கான பாலின பாதிப்பு 27.3% ஆகவும், பெண்களில் 1.6% ஆகவும் உள்ளது. இது முந்தைய ஆய்வே என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது தற்போது அதிகரித்துள்ளது.
மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
மது அருந்துவது என்பது கல்லீரல் பிரச்சனை, பாலினக் கோளாறு, மன ரீதியான கோளாறு என பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இத்தனையும் அறிந்தும் தான் மதுக் குடிக்கிறார்கள். மது அடிமைத்தனத்தை ஏற்படுத்துகிறது என்பதை பலர் அறிவதில்லை.

பலரும் கூறுவது நான் நினைத்தால் மதுவை நிறுத்திவிடுவேன், ஆனால்.. எனக் கூறி ஒரு காரணம் கூறுபவர்கள் ஏராளம். நானெல்லாம் விரதம் இருந்தால் மது நினைப்பே வராது என கூறுவார்கள். ஆனால் விரதத்தை முடித்தவுடன் உடனே நாடுவது மதுபானக் கூடத்தை தான். விரதம் இருக்கும் நாட்களிலேயே நேர்த்திக்கடனை செலுத்துவதை விட இந்த நாளில் விரதம் முடிந்துவிடும், உடனடியாக இங்கே சென்று மதுக்குடிப்போம், இந்த அசைவ உணவை சாப்பிடுவோம் என்பதுதான்.
தமிழகத்தில் பூரண மது விலக்கு கோஷங்கள்
பூரண மது விலக்கு, மது கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்ற முழக்கத்துக்கு நடுவில் கஞ்சாவுடன் முதல்வரிடமே மனு கொடுக்க முயற்சித்த செயலும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. இதெல்லாம் சமூக பிரச்சனை என்றாலும் உங்கள் நலம், உங்கள் கையில் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மதுவை நிறுத்த மன ஆரோக்கியம் முக்கியம்
மதுவை நிறுத்த அணுகவும் என சில மது பாட்டிலேயே தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது என்பது இன்னும் வேதனை. மதுவை நிறுத்த இதெல்லாம் வழிகள் என்றாலும். மனிதன் நினைத்தால் நிலாவுக்கே செல்கிறான் என்கின்ற போது நம் பணத்தையும், நேரத்தையும், உடலை பலிவாங்கும் மதுவை நிறுத்த முடியாதா?
விரதம் ஏதும் இல்லாத நாட்களில் நீங்களே உங்களை கட்டுப்படுத்தி வாரத்திற்கு ஒருமுறை, மாதத்திற்கு ஒருமுறை என படிப்படியாக நிறுத்திவிடுங்கள். நம்மை மீறி நம்மை கட்டுப்படுத்துபவர் உண்டோ?