Best Drink For Cold And Cough: ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் மாறிவரும் பருவ காலங்கள் போன்றவற்றால் இன்று பலரும் பல உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். அதிலும் இன்றைய பருவகால மாற்றத்தினால் 30 முதல் 40 வயது கடந்த உடனேயே பல்வேறு நோய்களைச் சந்திக்கின்றனர். நம் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு நாம் உடனேயே மருத்துவர்களை நாடி, மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், சில சமயங்களில் இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே வீட்டிலேயே சில முயற்சிகளைக் கையாள்வதன் மூலம் எளிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இதன் மூலம் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். இதில் சளி, இருமல் குணமாக வீட்டிலேயே செய்யப்படும் இயற்கை வைத்தியத்தைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Best Home Remedies: வீட்டில் செய்யக் கூடிய கசாயங்களும், நன்மைகளும்
சளி, இருமல் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்
தேவையானவை
- வெற்றிலை - 1
- தேன் – ஒரு ஸ்பூன்
- இஞ்சி – ஒரு இன்ச்
செய்முறை
- கஷாயம் தயார் செய்வதற்கு முதலில் வெற்றிலை மற்றும் இஞ்சியை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இதில் சாற்றைத் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
- அதன் பிறகு, இந்த சாற்றில் தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து பருகலாம்.
- இந்த கஷாயத்தைக் குடித்து வர, சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
- இந்த கஷாயத்தை மழைக்காலங்களில் வாரம் ஒருமுறையும், சளி இருக்கும் போது மூன்று முதல் ஐந்து நாள்களும் செய்யலாம்.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் பானம்
சளி, இருமல் குணமாக மட்டுமல்லாமல் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் வெற்றிலையைப் பயன்படுத்தலாம்.
தேவையானவை
- வெற்றிலை – 1
- உலர்ந்த திராட்சை – 10
- சோம்பு – கால் ஸ்பூன்
- மிளகு – 4
செய்முறை
- வெற்றிலையில் உலர்ந்த திராட்சை, சோம்பு, மிளகு போன்றவற்றைச் சேர்த்து மென்று சாப்பிடலாம்.
- இதை உட்கொள்ளும் போது உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.
- இதை தினமும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த பானத்தை உட்கொள்வது உணவை செரிமானம் அடைய உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Natural Home Remedies: மழைக்காலம் வந்துவிட்டது.. சளி, இருமலை போக்க உதவும் வீட்டு வைத்தியம்!
ஊட்டச்சத்துக்கள்
- வெற்றிலையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதன் படி, 100 கிராம் அளவிலான வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின், 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
- உலர் திராட்சையில் தனிமங்கள் நிறைந்துள்ளது. இவை மார்பில் படிந்திருக்கும் சளியை அகற்ற பெரிதும் உதவுகிறது. மேலும், திராட்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை இருமலிலிருந்து விடுபட உதவுகிறது.
- சோம்புவில் உள்ள மருத்துவ குணங்கள் வறட்டு இருமல் மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது.
- கருமிளகு பொதுவாக சளி மற்றும் இருமலைக் குணப்படுத்த உதவுகிறது. இது வறட்டு இருமலுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

வெற்றிலையின் வேறு சில நன்மைகள்
வெற்றிலை உட்கொள்ளல் சளி, இருமல் பிரச்சனைக்கு மட்டுமல்லாமல் வேறு சில பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
- செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல்லைப் போக்கவும் உதவுகிறது.
- நீரிழிவு நோய்க்கும் வெற்றிலை மிகவும் நன்மை பயக்கும்.
- பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் வெற்றிலை உதவுகிறது.
- மன அழுத்தத்தைப் போக்குவதில் வெற்றிலை பங்கு வகிக்கிறது.
- வெற்றிலையை உட்கொள்வதன் மூலம் இது போன்ற பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
இது போன்ற வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் சளி, இருமல் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். எனினும், நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. எனவே தேவையான பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகி பலன் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cough Home Remedies: நெஞ்சு சளியை கரைக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!
Image Source: Freepik