$
Pneumonia Treatment: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் தேதி உலக நிமோனியா தினமாக கொண்டாடப்படுகிறது. நிமோனியாவின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அங்கீகரிக்கப்பட்டது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் நிமோனியாவின் அதிக ஆபத்தில் உள்ளனர்.
மாறும் பருவநிலை மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளால், பலர் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றனர். நிமோனியா என்பது பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் நுரையீரல் தொற்று ஆகும். இந்த பிரச்சனை முக்கியமாக குளிர்காலத்தில் அதிகமாக பரவுகிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு நிமோனியா ஆபத்து அதிகம். நிமோனியா அறிகுறிகள், நோயறிதல் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தடுப்புக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றிய விவரங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா என்பது ஒரு வகை பாக்டீரியாவால் பரவுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 1.5 முதல் 14 பேர் வரை நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிமோனியாவின் இறப்பு விகிதம் உலகளவில் 14 முதல் 30 சதவீதம் வரை உள்ளது, இந்தியாவில் இது 23 சதவீதமாக உள்ளது.
பெரியவர்கள் மற்றும் குழந்தைளுக்கான அறிகுறிகள்:
பெரியவர்களுக்கு நிமோனியாவின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், குளிர், மூச்சுத் திணறல், சுவாசத்தின் போது மார்பு வலி, இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பது, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல் மற்றும் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுவதாகும்.

குழந்தைகளுக்கான நிமோனியாவின் அறிகுறிகள் நீர்ச்சத்து குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம், சரியாக சாப்பிட இயலாமை, இருமல், காய்ச்சல், எரிச்சல், இருமலுக்குப் பிறகு வாந்தி போன்றவையாகும்.
நிமோனியா முதலில் லேசானதாக இருக்கலாம். இருப்பினும், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பிரச்சனைகள் மிகவும் தீவிரமானதாக மாறும். எப்போது நீங்கள் கட்டாயம் ஒரு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் இதோ,
- சளியுடன் கூடிய காய்ச்சல், லேசான தொடர் இருமல்
- தினசரி வேலைகளை செய்யும் போதோ அல்லது ஒய்வில் இருக்கும் போதோ மூச்சுத்திணறல் ஏற்படுதல்
- மூச்சு விடும்போது நெஞ்சு வலி
- சளி அல்லது காய்ச்சலில் இருந்து குணமடைந்த பிறகு திடீரென மீண்டும் உடல்நிலை மோசமடைதல்
- ஏற்கனவே இதய நோய், நீரிழிவு அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்.
- சிறு குழந்தைகள் அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள்
- வயதானவர்களுக்கு மூச்சுத்திணறலுடன், குழப்பமான மனநிலை ஏற்படுவது.
நோய் கண்டறிதல்:
நிமோனியா உடல் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனைகள் மற்றும் சளி பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. நோயாளிகளின் நிலையைப் பொறுத்து CT ஸ்கேன், ப்ரோன்கோஸ்கோபி போன்றவையும் செய்யப்படலாம்.
சிகிச்சை:
நிமோனியாவின் ஆரம்ப கட்டங்களில் உள்ளவர்கள் அதை ஏற்படுத்தும் உயிரினத்தின் வகையைப் பொறுத்து வாய்வழி ஆன்டிபயாடீக்ஸ் உடன் வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படலாம். இருப்பினும், தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்கள் இதயத் துடிப்பு, சுவாச விகிதம், வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க: பெற்றோர்கள் கவனத்திற்கு; மழைக்காலம் வரப்போகுது இதையெல்லாம் மறக்காமல் பின்பற்றுங்கள்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவாக நரம்பு வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் செலுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்படும். இந்த சிகிச்சையின் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஓரளவு முன்னேற்றம் அடைவார்கள். மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவர்களுக்கு மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.
தடுப்பு முறைகள்:
- நிமோனியா மற்றும் அதன் சிக்கல்களை முன்கூட்டியே தடுக்க தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். நிமோகாக்கல் தடுப்பூசி, காய்ச்சல் அல்லது காய்ச்சல் தடுப்பூசி எனப்படும் தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன.
- புகைப்பிடிப்பவர்களுக்கு நிமோனியா ஏற்படும் அபாயம் அதிகம். எனவே, புகைபிடிப்பதை நிறுத்துவது நிமோனியாவை தடுக்க உதவும்.
- அடிக்கடி கைகளை கழுவதல் அல்லது சானிடைசர்களை பயன்படுத்துவதன் மூலமாக தொற்றைக் கட்டுப்படுத்தலாம்
- .நிமோனியா அறிகுறி உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும். இருமலின் போது உருவாகும் சளியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
Image Source : Freepik