How to Improve Child Immune System in monsoon: மழைக்காலம் வந்துவிட்டாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதே பெற்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலான குழந்தைகள் பருவமழை காலத்தில் அதிக கலோரி, காரமான உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதால் வயிற்றில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றொருபுறம் சுத்தமில்லாத உணவு மற்றும் தண்ணீரால் மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உண்டு. எனவே தான் பெற்றோர்கள் தங்களது அன்பான குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பருவ மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து விளக்கியுள்ளோம்.
மழைக்கால தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் பின்பற்றக்கூடிய சில குறிப்புகள் இதோ...
முக்கிய கட்டுரைகள்

1. ஊட்டச்சத்து மிக்க உணவு:
ஆரோக்கியமான உணவு என்றாலே சுவையற்றது என குழந்தைகள் சாப்பிட மறுப்பது இயல்பானது. எனவே குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை கொண்ட பெற்றோர்கள் தான், தாங்களாவே முயற்சித்து குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான சத்துள்ள உணவை தயாரிக்க முயற்சிக்க வேண்டும். வைட்டமின்கள், ஆக்ஸினேற்ற பண்புகள் நிறைந்த சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க விரும்பினால், நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும்.
2. உடற்பயிற்சி:
அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் பிள்ளைகள் நான்கு சுவர்களுக்கு அடங்கிப்போய்விடுகிறார்கள். போதாக்குறைக்கு மழை காரணமாக வீட்டிற்குள்ளேயே முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனை தவிர்க்க வீட்டிற்குள்ளேயே குழந்தைகளுக்கான சின்ன, சின்ன உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுக்கலாம். ஸ்கிப்பிங், ஜம்பிங், டக் வாக் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை கற்றுக்கொடுக்கலாம்.
3. ஆரோக்கியமான வாழ்க்கை முறை:
சரியான உணவு, உடற்பயிற்சி, தேவையான தூக்கம் இவையே ஆரோக்கியமன வாழ்க்கை முறை என அழைக்கப்படுகிறது. குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 8 மணி நேர தூக்கம் மிக முக்கியமானது. எனவே குழந்தைகளின் ஸ்கிரீன் நேரத்தை குறைக்க, உறக்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அவர்கள் கேஜெட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இது அவர்கள் நன்றாக உறங்கவும், காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து கொள்ளவும் உதவும்.
4.சுகாதாரத்தை பராமரிக்கவும்:
தொற்று நோய் பரவுவதை தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவதை குழந்தைகளுக்கு பழக்க வேண்டும். அதேபோல் தினமும் 2 முறை குளிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
5. மன அழுத்தத்தை குறைக்கவும்:
மன அழுத்த பிரச்சனைகள் ஏற்படுவதும் மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல் நலனை பாதிக்கக்கூடும். எனவே பள்ளியில் பாடத்திட்டம், ஹோம் வொர்க், கல்வி முறை, ஆசிரியர்கள் என எந்த வகையிலாவது குழந்தைகள் சிரமத்தை அனுபவிக்கிறார்களா?, அதனால் மன ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படுகிறதா? என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
6. தடுப்பூசி:
வரும் முன் காப்பதே சிறந்தது எனவே, உங்கள் பிள்ளை வயதுக்கு ஏற்ப தேவையான அனைத்து தடுப்பூசிகளையும், ஆண்டுதோறும போட்டுக்கொண்டுள்ளதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இன்ஃப்ளூயன்ஸா, டைபாய்டு மற்றும் ஹெபடைடிஸ் தடுப்பூசி குழந்தைகளை மழைக்கால தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.
Image Source: Freepik