How to make kambu koozh at home in tamil: கோடை வெப்பம் பலருக்கும் சவாலானதாக அமைகிறது. அதிலும் இந்த ஆண்டு கோடைக்காலத்தின் ஆரம்ப நிலையிலேயே அதிகளவு வெப்பத்தின் காரணமாக பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உடலின் வெப்பத்தைத் தணிப்பதும், அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக வைப்பதும் அவசியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அதிகளவு வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், இது உடல் சூட்டை அதிகரித்து வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உட்பட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதற்கு தான் நம் முன்னோர்கள் சில இயற்கையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களைப் பின்பற்றி வந்தனர்.
அவ்வாறு உடல் சூட்டைத் தணிக்கவும், பல்வேறு வெப்பம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவும் தனித்தன்மை வாய்ந்த பானங்களில் கம்மங்கூழ் மிகுந்த நன்மை பயக்கும். இது தமிழர்களின் பாரம்பரிய உணவாகக் கருதப்படுகிறது. இதை நம் முன்னோர்கள் எளிமையான முறையில் தங்கள் வீடுகளிலேயே சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தனர். ஆனால், தற்போது இது அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது. எனினும், தற்போது இதை நம் வீடுகளில் எளிமையான முறையில் தயார் செய்து அருந்தலாம். இது பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமையும். இதில் கம்மங்கூழ் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Millet Masala Dosa: ஊட்டச்சத்து நிறைந்த வரகரிசி மசாலா தோசை எப்படி செய்வது?
கம்புவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
தானிய வகைகளுள் ஒன்றான கம்புவைக் கொண்டு கம்பு கூழ் தயாரிக்கப்படுகிறது. இது வழக்கத்தில் கம்மங்கூல் என்று கூறப்படுகிறது. கம்புவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, புரோட்டீன் நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவை காணப்படுகிறது. இது தவிர, அத்தியாவசியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன் மற்றும் லிசித்தின் மற்றும் கனிமச்சத்துக்களான மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவையும் நிறைந்துள்ளது.
கம்மங்கூழ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் சூட்டைத் தணிக்க
வெயில் காலத்தில் உடல் வெப்பம் அதிகமாகி பலரும் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில், உடல் சூட்டைத் தணிக்க இளநீருக்கு அடுத்தப்படியாக சிறந்த பானமாக கம்மங்கூழ் அமைகிறது. அதன் படி, ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வருவது உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்பட உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இது உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்குகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
கம்மங்கூழை அன்றாட உணவில் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்வது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதிகளவு ட்ரைகிளிசரைடுகளால், இரத்த உறைவு ஏற்படலாம். கம்மங்கூழில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தின் அடர்த்தியைத் தடுத்து, இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. இதன் மூலம் பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க
கம்புவில் மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. அதாவது இது இரத்த நாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுக்க உதவுகிறது. மேலும் கம்பு உட்கொள்வது தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: கோடையில் எந்த தினையை சாப்பிடனும் தெரியுமா.?
உடல் எடையைக் குறைக்க
கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இது அதிகம் உண்பதைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது. மேலும், இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கவும் வழிவகுக்கிறது. கம்புவில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோய்க்கு
கம்புவில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீடு குறைவாக உள்ளதால், இது சர்க்கரை நோயைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இது செரிமான செயல்பாட்டை தாமதப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக இது டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாகும்
நல்ல தூக்கத்தைப் பெற
கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன் உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தினமும் இரவில் தூங்கும் முன் கம்மங்கூழ் குடிப்பது மன அழுத்தத்தைக் குறைத்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது.
கம்மங்கூழ் தயார் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- கம்பு - கால் கிலோ
- மோர் - அரை லிட்டர்
- சின்ன வெங்காயம் – 20
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
கம்மங்கூழ் செய்வது எப்படி?
- முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விட வேண்டும். பிறகு, மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளலாம். அதன் பின், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில், பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். பின்னர், அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்க வேண்டும்.
- கம்பு 10 நிமிடம் கொதித்ததும், உப்பு சேர்த்து கரண்டியால் கலக்கி இறக்கி விடலாம். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருப்பின், தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம். பிறகு இதில் மோர் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொடுக்கலாம். கம்மங்கூலுடன் தொட்டு சாப்பிட மாங்காய் எடுத்துக் கொள்வது சுவையை அள்ளித் தூக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Millet Rice: நாவில் எச்சில் ஊறும் சுவையில் நாட்டுக்கம்பு சாதம்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version