நல்ல குடல் ஆரோக்கியத்தின் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். ஆனால், இன்றைய நவீன காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக குடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறைகள் செரிமான ஆரோக்கியத்தை பாதிப்பதுடன், வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அன்றாட உணவுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
அவ்வாறு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றுடன் சில மூலிகைகளும் உதவுகின்றன. அவை குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை மேம்படுத்துவதுடன், நல்ல செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. இதில் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய மூலிகைகள் குறித்து ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மருத்துவர் சௌரப் சேத்தி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு உதவும் மூலிகைகள்
மருத்துவர் சௌரப் சேத்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு இரைப்பை குடல் மருத்துவராக எனது சொந்த குடல் ஆரோக்கியத்திற்கு நான் பயன்படுத்தும் 8 மூலிகைகள்” என்று தனது பதிவைத் தொடங்கியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 5 பொருள்கள் போதும்.. நல்ல செரிமானத்திற்கு வீட்டிலேயே செய்த இந்த பானத்தை குடிங்க
மஞ்சள்
மருத்துவரின் கூற்றுப்படி, “மஞ்சள் குடல் வீக்கத்தைக் குறைக்கவும், பித்த ஓட்டத்தை ஆதரிக்கவும் உதவுகிறது” என்று கூறியுள்ளார். அதாவது மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதுவே வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.
உணவில் சேர்ப்பது எப்படி?
மஞ்சளை அன்றாட உணவில் சூடான பால் அல்லது கறிகளில் சேர்க்கலாம். இவ்வாறு சேர்ப்பது உடலுக்குள்ளேயே இனிமையான விளைவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இஞ்சி
இஞ்சியை சேர்ப்பதன் மூலம் குமட்டல், வயிறு உப்புசம் மற்றும் மந்தமான செரிமானம் போன்ற பிரச்சனைகளை நீக்கலாம் என மருத்துவர் குறிப்பிடுகிறார். இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற செயலில் உள்ள சேர்மம் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதே காரணமாகும். இவை குடலின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
உணவில் சேர்ப்பது எப்படி?
மருத்துவர் இஞ்சியை தினமும் தேநீரில் சேர்க்க பரிந்துரைக்கிறார். குறிப்பாக அதிக உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்வது செரிமானத்திற்கு நன்மை தருவதாகக் குறிப்பிடுகிறார்.
பெருஞ்சீரக விதைகள்
இது இயற்கை வாயு மற்றும் வயிற்று உப்புசத்தை நீக்கும் மருந்தாக செயல்படுவதாக மருத்துவர் குறிப்பிடுகிறார். பெருஞ்சீரக விதைகளில் காணப்படும் சேர்மங்கள் குடலில் உள்ள தசைகளை தளர்த்தி, சிக்கியுள்ள வாயுவை வெளியேற்றி, வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது இயற்கையான இரைப்பை குடல் வலி நிவாரணியாக செயல்பட்டு, வயிறு உப்புசத்தைக் குறைக்க உதவுகின்றன.
உணவில் சேர்ப்பது எப்படி?
இதை உணவிற்குப் பிறகு மென்று சாப்பிடலாம் அல்லது ஒரு அமைதியான தேநீரை தயார் செய்து குடிக்கலாம்.
சீரகம்
இது பித்தத்தை அதிகரிக்கவும், IBS பிடிப்பை குறைக்கவும் உதவுவதாக மருத்துவர் கூறுகிறார். சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவுவழி நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் இவை செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, உணவு செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது.
உணவில் சேர்ப்பது எப்படி?
சீரகத்தை பருப்பு அல்லது காய்கறி பொரியலில் சேர்த்து எடுத்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: நல்ல செரிமானத்திற்கு உங்க உணவில் சேர்க்க வேண்டிய 7 உணவுகள் இதோ! டாக்டர் தரும் டிப்ஸ்
இலவங்கப்பட்டை
இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும், குடல் இயக்கத்தை அமைதிப்படுத்தவும் உதவுவதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளே காரணம் எனக் கூறப்படுகிறது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, குடலில் சமநிலையை ஏற்படுத்துகிறது.
உணவில் சேர்ப்பது எப்படி?
இதை ஓட்ஸில் சேர்க்கலாம். கேஃபிர் அல்லது காபியில் சேர்க்கலாம் என மருத்துவர் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
மிளகுக்கீரை
மருத்துவரின் கூற்றுப்படி, இது குடல் தசைகளை தளர்த்தவும், பிடிப்புகளை ஆற்றவும் உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் தசை தளர்த்தும் பண்புகள் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இது வயிற்று வீக்கம் மற்றும் வாயுவை குறைக்க உதவுகிறது.
உணவில் சேர்ப்பது எப்படி?
மிளகுக்கீரையை அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். எனினும், ரிஃப்ளக்ஸ் உள்ளவர்கள் மிளகுக்கீரை தேநீர் அல்லது காப்ஸ்யூல்களைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார்.
பூண்டு
இது நல்ல குடல் பாக்டீரியாக்களை மேம்படுத்தவும், கெட்ட பூச்சிகளை எதிர்த்துப் போராடவும் உதவுவதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு பூண்டில் உள்ள ப்ரீபயாடிக் பண்புகளே காரணமாகும். மேலும் இதன் அல்லிசின் கலவையும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
உணவில் சேர்ப்பது எப்படி?
இதை சமைப்பதற்கு முன் லேசாக நசுக்கும்போது சிறப்பாக செயல்படுகிறது.
கொத்தமல்லி
இது வீக்கம் மற்றும் வாயுவைக் குறைக்க உதவுவதாக மருத்துவர் கூறுகிறார். இவை செரிமானத்தை மேம்படுத்தவும், குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
உணவில் சேர்ப்பது எப்படி?
கொத்தமல்லியை அன்றாட உணவில் கறிகள் அல்லது சாலட்களில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இறுதி குறிப்பு
“உண்மையான குடல் குணப்படுத்துதல் உங்கள் சமையலறையில் தொடங்குகிறது. தினமும் பயன்படுத்தவும், வாரந்தோறும் சுழற்சி செய்யவும்” என்று மருத்துவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்தியாக இருக்க நிபுணர் சொன்ன இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க..
Image Source: Freepik