வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து, வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கவுள்ளது. நடப்பு ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 4வது புயல் இதுவாகும்.
புயல் சென்னைக்கு கிழக்கே - தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.இனி எவ்வளவு குறைவான வேகத்தில் நகர்கிறதோ அதற்கு ஏற்றார்போல அதிகமான மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும் என்றும், காற்று அதிகவேகமாக வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இன்று முதல் பொதுமக்கள் பின்வரும் எச்சரிக்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியவை என்னென்ன?
- முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.
- கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), அவசர விளக்கு (emergency light). தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
- வீட்டுக்குள் மின்சாரம் எரிவாயுவை அணைக்கவும்.
- பழுதடைந்த வீடாக இருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.
- கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
- கொதிக்க வைத்த அல்லது குளோரின் கலந்த குடிநீரைப் பருகுங்கள்.
- அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
- சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும்.
- சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்தவும்.
- தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
- மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
- வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும்.
- தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
- வீட்டில் மின்விளக்குகளை கவனமுடன் கையாளவும்.
- உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனே மாற்றவும்.
இதையெல்லாம் செய்யக்கூடாது?
- ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்ஃபி எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
- மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
- புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கன மழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள். மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புங்கள்
- சேதமடைந்த கட்டிடத்தின் அருகில் செல்லாதீர்கள்.
- உடைந்த மின் கம்பங்கள்/அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லாதீர்கள்.